Thursday, November 26, 2015

☞ நாராயண மூர்த்தியும் புத்தாவதாரமும்.




ஸ்காந்த மஹா புராணம்;உபதேச காண்டம்;அத்தியாயம்-70,71 இல் இருந்து....


எழுத்துக்கள்  தெரியவில்லை எனின், ஒவ்வோர்  படத்தின்  மீதும்  அழுத்திப் பெரிது  செய்து பார்க்கவும்.
























சுபம்

Tuesday, October 13, 2015

☞ சைவத்தில் நவராத்திரி விரதம்



சோமவாரம், சுக்கிரவாரம், பிரதோஷம், அமாவாசை, பெளர்ணமி முதலியன மாதந்தோறும் வரும் விரதநாட்கள்.  சிவராத்திரி, நவராத்திரி, கேதாரகௌரி, திருவாதிரை, ஸ்கந்தசஷ்டி, விநாயகசதுர்த்தி முதலியன வருடந்தோறும் வரும் விரததினங்கள்.  உபவாச மிருந்து அவ்விரதங்களை விதிப்படி அனுட்டிக்க வேண்டும்.  அதனால் சைவமக்களிடம் மனிதவியல் நிலைக்கும்; சிவபத்தி வளரும்.  அவை சமயத்துறை பற்றிய இலாபம்.  இலெளகிக இலாபம் வேறு.  என்னை? உபவாசத்தால் சைவர் வீடு ஒவ்வொன்றிலும் உணவிற்காம் பண்டங்களிற் பெரும் பகுதி சேமிக்கப்படும்.  இந்நாட்டிலுள்ள சைவமக்களின் வீடுகளைச் சேரக் கணக்கிடுக.  மிஞ்சும் பண்டம் கொஞ்சமாகவாவிருக்கும்? பணமில்லாச் சைவரும் உபவாசம் இருக்கவேண்டியவரே.  இருந்தால் அவர் உண்ணும் நாட்கள் சுருங்கும்.  அப்பண்டங்களில் மிச்சம், இவ்வுண்ணுநாட்களின் சுருக்கம் ஆகியவற்றை ஓராண்டிற்குச் சேர்த்துக் கணக்குப் பார்க்கவேண்டும்.  நாட்டில் உணவுப்பஞ்சம் எவ்வளவோ குறையும்.  இதுவே இலெளகிக லாபம்.  சைவர் இதைக் கருதுவதில்லை.  உபவாசம் மறைகிறது, பரிகசிக்கப்படுகிறது.  ஒருசைவன் ஒருநாளில் பல தடவைகள் உண்கிறான், ஒவ்வொரு வேளையும் அதிகம் உண்கிறான்.  மனிதவியலுக்கு மாறாக உண்ணத்தகாத வற்றையெல்லாம் உண்கிறான்.  கண்ட விடங்களில் உண்கிறான்.  நாக்கை மகிழ்விக்கவும் வயிற்றை நிரப்பவுமே அவன் பிறந்தான் போலும்உபவாசத்தால் உயிருக்கு உறுதியுண்டு.  தேகமும் சுகமுறும்.  அதைப் பழித்த பாவம் நிர்ப்பந்தமான பட்டினிக்கிடக்கையைக் கொணர்ந்தது.  அதனால் உடலுயிர்களுக்குத் துன்பமே பலன்.  ஆகலின் நாட்டின் நலனைக் கருதியாயினும் சைவர் தம் சமய தருமமாகிய உபவாசத்தை மேற் கொள்வாராக.

இன்னொன்று, சைவத்தில் சமயானுட்டானங்களத்தனையும் உபவாசத்தோடு கூடியவை.  அவற்றில் கொண்டாட்டத்திற்கு சம்பந்தமில்லை.  தீபாவளி, தைப்பொங்கல் என இரண்டு பண்டிகைகளுள.  அவையும் சைவசமூகத்திற் புகுந்தன.  புகத்தொடங்கிய காலந் தெரியவில்லை.  பண்டிகையென்னுஞ் சொல்லுக்குப் பொருள் எதுவோ? அச்சொல் தமிழன்று; சம்ஸ்கிருதமாகவுந் தெரியவில்லை.  தீபாவளி வைணவ சம்பந்தமுடையது; உண்டாடுக் களியாட்டு மிகுந்தது.  சைவர் அதை ஆசரிக்க வேண்டுமா? ஆமென்பதற்குச் சைவநூற் பிரமாணமுண்டா? தைப்பொங்கலுக்கு மகரசங்கிராந்தி யென்று பெயர். அதுவும் உபவாசத்தோடு கூடியதே.  சைவரிடம் தம் சமயக் கற்புக் குலைந்தது.  சமயக் கலவை புகுந்தது. அதன் விளைவே அப்பண்டிகைக் கொண்டாட்டம்.  நான் ஒரு சைவன்.  எனக்கு சமயவழி என் சமயத்தாரிடம் தொடர்புண்டு.  அவரெல்லாம் சைவசமய வரம்பைப் பல்லாற்றானும் போற்றிக் கொள்ள வேண்டும்; அச்சமய ஆசார அனுட்டானபரராக வேண்டும்; நாட்டுக்கு நல்ல சேவகராக வேண்டும்; சிவபிரான் திருவருளுக்குப் பாத்திரராக வேண்டும். அவ்வாசைபற்றி யெழுந்தனவே மேலுள்ள வசனங்கள்.  உபவாச வகைகளைக் கொண்ட பிற சமயங்களு மிருக்கலாம்.  அச்சமயிகளும் குறையின்றி அவற்றை யாசரிப்பாராக.

சிவராத்திரிபோல் நவராத்திரியும் தேசமெங்கும் அனுட்டிக்கப்பட்டு வருகிறது.  அது உமாதேவியார்க்குரிய விரதம்.  அவ்வுண்மை எத்தனை பேருக்குத் தெரியும்?  உண்மைகண்டு அனுட்டிக்கப்படாத விரதம் அற்பப்பயனுடையதே.  ஆகலின் அதனை யனுட்டித்தற் குரியார் அதன் உண்மையைத் தெரிந்து கொள்ளுதல் அவசியம்.  பெயரளவில் அனுட்டிப்பவர் ஏமாற்றமடைவர்.  அவ்விரதத்தில் அன்னிய சமயக் கருத்துப் புகுத்தப்பட்டு விடும்.  அப்படித் தான் நவராத்திரி விரதம் இருந்து வருகிறது.  அவ்விரத வுண்மையைச் சைவப் பிரமாண நூல்களிலிருந்து எடுத்துக் காட்டுவோர் இன்றும் உளர்.  ஆனால் அதை ஏற்க விரும்பாத மனம் படைத்த சைவர் பலராய்விட்டனர்.  அநியாயம்.  யாரிட்ட சாபமோ அது! அல்லது கலிக்கொடுமை தானோ! 'ஆரியக் கூத்தாடினாலுங் காரியத்திற் கண் வேண்டும்' என்பது பழமொழி. அன்னிய சமயத்தவர் நம்மோடு நெருங்கி உறவாடுவர்.  ஆயினும் தம் சமயத்திற்றான் அவர்க்குக் கண்.  அதனொடு தமக்குள்ள தொடர்பை அவர் தளர்த்திக் கொள்ளவே மாட்டார்.  சைவருட்டான் பலர் அவருக்கு மாறாகவே யிருக்கின்றனர்.  அவர் சீர்ப்பட வேண்டும்.  நானும் பெரியோ ரடிச்சுவடு பற்றி ஊதுகிற சங்கை ஊதுகிறேன்.  விடிகிறபோது விடியட்டும்.  என்றாவது விடியாமலா போகும்? பார்க்கலாம்.


நவராத்திரி என்பதற்கு ஒன்பது இரவுகள் என்று பொருள்.  'நவராத்திரி உத்ஸவத்திற்கும் விஜயதசமி உற்சவத்திற்கும் சம்பந்த மேதேனு முண்டா? இன்றா?' என ஒருவர் கேட்டிருக்கிறார்.  பிரமாண சகிதம் அதற்கு விடை வேண்டும்.  அதுவரை தசரா என்ற பெயரை விலக்கி வைப்பதே தக்கது. தசரா - பத்து இரவுகள்.

முதலாவது, நவராத்திரிக்குரிய காலத்தை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். 'சிவோத்சவங்களுக்கெல்லாம் தீர்த்தத்தை நிச்சயம் செய்து கொண்டு ஆரம்பத்தைச் செய்ய வேண்டும்.  இந்த உத்ஸவத்துக்கு ஆரம்பம் முக்கியமென்று வாக்கியங்கள் மூலம் தெளிவாகிறது' என்கிறார் பிரமஸ்ரீ தெய்வசிகாமணிப் பட்டர். மானாமதுரை.  இந்த உத்ஸவம் என்றது நவராத்திரியை.

'நவராத்திரி உற்சவத்திற்கு ஆரம்ப காலம் நிச்சயித்திருப்பதுபோல மகோற்சவத்திற்கு ஆரம்பம் சொல்லப்படாமல் உற்சவம் முடிவாக வேண்டிய நக்ஷத்திரம் திதி முதலிய காலமே சொல்லப்பட்டிருக்கிறது' என்கிறார் திரு. தி.க. உலகநாத பிள்ளை, திருநெல்வேலி வைதிக சைவ சம்மேளன அமைச்சர்.  ஆகவே நவராத்திரி விஷயத்தில் சிவாலயத்தில் ஒன்பது நாளுமே முக்கியமாத லறிக.  சிவாகமம் அவ்விரத காலத்தைச் சாந்திரமானப் படியே நிச்சயித்துள்ளது.  விநாயக சதுர்த்தி பாத்திரபத (சாந்திரமான புரட்டாதி) மாதத்திலும், நவராத்திரி ஆச்வீஜ (சாந்திரமான ஐப்பசி) மாதத்திலும், ஸ்கந்தசஷ்டி கார்த்தீக (சாந்திரமான கார்த்திகை) மாதத்திலும் அனுட்டிக்க வேண்டும் என்பது சிவாகமவிதி.

'நாம் அறிந்த அளவில் ஸ்ரீ காரணாகமத்தில் நவராத்திரி விதிப்படலத்தில், 'ஆச்வயுக் சுக்ல பக்ஷேது ப்ரதிபந் நவம் யந்தகே! ப்ரதிபத்தின மாரப்ய வ்ரதோத் ஸவம தாசரேத்!' என்று சொல்லப்பட்டிருகிறபடி ஆச்வீஜ (சாந்திரமான ஐப்பசி) மாதத்துச் சுக்கிலபக்ஷப் பிரதமையில் நவராத்திரி விரதோற்சவத்தை ஆரம்பித்து க்ஷ - நவமியில் முடிப்பதே முன்னோர் அனுஷ்டானத்திற்கும், சிவாகமங்கட்கும் பொருத்தமானதென்று தீர்மானிக்கின்றோம்" என்கிறார் திரு. தி.க. உலகநாத பிள்ளை.

இனி அவ்விரதத்தின் கருத்தைக் காணலாம்:  சிவபிரானுடைய அருட்சத்தியே உமாதேவி.  அச்சத்தியும் ஒன்றே.  ஆயினும் அது பலதொழில்களை யியற்றும்.  நெருப்புக்குச் சத்தியொன்றே.  அது தான் சூடு.  ஆயினும் அது வறுக்கும், பொரிக்கும், அவிக்கும், நீற்றும், உருக்கும், பொசுக்கும்.  அத்தனை பெயர்களை அது ஏற்கின்றது.  அப்படியே அச்சிவசத்தியும் பல பெயர்களைப் பெறும்.  அது சிருட்டிக்கிறது.  திதிக்கிறது, சங்கரிக்கிறது.  சிருட்டிக்கும்போது அதற்குச் ஜனனியென்று பெயர்.  திதிக்கும்போது அது ரோதயித்திரியாம்.  சங்காரத்தில் அது ஆரணியெனப்படும். 

பிரமன் சிருட்டிக்கிறான், விட்டுணு திதிக்கிறான், உருத்திரன் சங்கரிக்கிறான் என்றால் அத்தொழில்கள் அவர்களுக்குச் சொந்தமல்ல.  அவர்கள் தோன்றி மறைபவர்கள்.  ஒரு பிரமன் போனால் அப்பதவிக்கு இன்னொருவன் வந்து பிரமனாவன்.  அப்படியே விஷ்ணு முதலியோருக்குமாம்.  மேலும் அண்டந் தோறுமாகப் பிரமர் பலர் உளர்.  விஷ்ணு முதலியோரும் அங்ஙனமே.  ஆகலின் அவர்களைக் கணக்கிற் சேர்க்கக்கூடாது.  அப்பிரமரனைவரையும் அதிட்டித்துள்ள சிருட்டிசத்தியவ் ஜனனி யொன்றுதான், அவ்விட்டுணுக்களனைவரையும் அதிட்டித்துள்ள திதிசத்தி அந்தரோதயித்திரி யொன்று தான்.  அவ்வுருத்திரரனைவரையும் அதிட்டித்துள்ள சங்காரசத்தி அவ்வாரணி யொன்றுதான்.  அம்மூன்று சத்திகளும் சிவசத்தியின் வியாபார பேதங்களே, வியாபாரம் - தொழில். 
ஆரணி சத்தியை முதல் மூன்று தினங்களிலும், ரோதயித்திரி சத்தியை அடுத்த மூன்று தினங்களிலும், ஜனனிசத்தியைப் பின்மூன்று தினங்களிலும் வழிபட வேண்டும்.  அதற்கு வாய்ப்பில்லாதவர் ஒன்பதாந் தினமாகிய நவமியன்று அம்முச் சத்திகளின் மூலமாகிய சிவசத்தியை அதாவது உமாதேவியாரை கலச ஸ்தாபனஞ் செய்து உபவாசமிருந்து வழிபடவேண்டும்.  அதுபற்றியே அத்தினம் மஹாநவமியெனச் சிறப்பித்துக் கூறப்பட்டது.

'பெருகு காதலிற் புரட்டைமுற் பிரதமை முதலாப்
மருவி முன்புகல் விதிமுறை மணிக்குட மமைத்துச்
சொரிந றுந்துண ரருச்சனை வரன்முறை தொகுத்துப்
பரிவி னெண்பகற் பலாதியுண் டருண்முறை பயில்வார்,'

'நடந்த நாள்கழித் தீற்றிடை யெதிர்ந்தமா நவமி
தொடங்கு பிற்றைநாண் மறையவர்ப் போசனந் தொகுத்து
வடங்கொள் பூண்முலை மறையவர் மடந்தையர்க் கினிது
நுடங்கு கோசிக மளித்தபின் பாரண நுகர்வார்'
என்ற உபதேசகாண்டத்தால் அவ்விரதம் அனுட்டிக்கு முறை அறியப்படும்.

'சேந்த தாமரைத் தடங்கணா னத்திற நோற்று
மோந்த போர்முகத் தசுரரை முதலற முருக்கி
வாய்ந்த னன்கலா சத்தியை யடைந்தனன் மற்றோர்
பூந்த டங்கணோர் பாக்கிய சத்தியும் புரிந்தான்',

'இமய மீன்றெடுந் தளித்தவள் விரதமீ திழைத்தோ
ரமைய நல்கிய பெருவளந் துய்த்தன ராகி
யுமைத ரும்பெருங் கருணையா லருங்கதி யுவந்தார்
தமையெ டுத்தெடுத் துணர்த்துவ தியாருழைத் தகுமே'
என்ற அந்நூற் பாடல்கள் அவ்விரத மனுட்டித்தவர் பெற்ற பேறுகளை எடுத்துரைக்கின்றன.

இக்காலை அவ்விரதம் சாத்திரத்துக்குப் பொருந்த அனுட்டிக்கப்பட்டு வருவதாகத் தெரியவில்லை.  மேலே சொல்லப்பட்ட ஜனனியைச் சரசுவதி யெனவும், ரோதயித்திரியை இலக்குமியெனவும், ஆரணியை உமையெனவுஞ் சொல்வதுண்டு.  அங்ஙனமாயின் பிரமாவை அதிட்டிக்கிற சரசுவதி வேறு, அவருக்கு மனைவியாகிய சரசுவதி வேறு; விட்டுணுவை அதிட்டிக்கிற இலக்குமி வேறு, அவருக்கு மனைவியாகிய இலக்குமி வேறு; உருத்திரனை அதிட்டிக்கிற உமை வேறு, அவருக்கு மனைவியாகிய் உமை வேறு என்பது பெறப்படும்.  அப்பிரமனாதியோரை அதிட்டிக்கிற சரசுவதி, இலக்குமிம் உமை யென்போரைக் குறித்தது நவராத்திரி விசேடம் என்றால் அது பொருந்தும்.  இம்மும்மூர்த்திகளுட்பட்ட உருத்திரன் அவருக்கு மனைவியாகிய உமை என்பார்க்கு அம்மும்மூர்த்திகளின் தலைவராய சதுர்த்தப் பொருளாயும் சைவசமய தெய்வமாயும் உள்ள சிவபிரான் உமாதேவியார் வேறாவார்.  சிவராத்திரி விரதம் அச்சிவபிரானுக்கும், நவராத்திரி விரதம் அவ்வுமாதேவியார்க்குமே உரியன.  ஆனால் அம்மும்மூர்த்திகளின் மனைவிமாராகிய சரசுவதி முதலியோருக்குரியது அவ்விரதம் என்கிறார் சிலர்.  அது சரியன்று.  அவ்விரதத்தை அப்பிரம விட்டுணு வாதியரே அனுட்டித்ததால் அஃது அறியப்படும்.  அன்றியும் தக்க யாகத்தில் வீரபத்திரமூர்த்தியால் அச்சரசுவதியின் (பிரம்மாவின் மனைவி) மூக்கு அறுக்கப்பட்டது.  அவ்விலக்குமிக்குந் (விட்டுணுவின் மனைவி) தண்டனை கிடைத்தது, அங்ஙனம் பங்கப்பட்ட அத்தேவ ஸ்திரீகளைக் குறித்த விரதமாக அதனைக் கொள்வது பாவம்.  இனியாயினும் அன்ன ஆபாசக் கருத்துக்களைத் தள்ளுக.  ஸ்ரீ உமாதேவியாருக்குரியதே நவராத்திரி விரதமென்பதைக் கடைப்பிடிப்பதே உசிதம்.  சைவர் அது செய்து நலம் பெறுவாராக.

முடிப்புரை
யாழ்ப்பாணத்து ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரை அறியாத சைவர் வெகு சிலரே.  அந்நாவலர் சைவ சமய ஆராய்ச்சி, அறிவு, ஆண்மை மிக்கவர்.  'சைவ வினா விடை' என இரண்டு நூல் அவரெழுதியிருக்கிறார்.  அவை அருமை பெருமையுடையன; ஒவ்வொரு சைவரும் ஊன்றிக் கற்றற்குரியன.  இரண்டாஞ் சைவ வினா விடையில் விரதவியல் என்றொரு பகுதியுண்டு.  அதிற் சைவ விரதங்களைத் தொகுத்தும், அவற்றை அனுட்டிக்கு முறைகளைச் சுருக்கியும் நன்கு கூறபட்டுள்ளன.  அவ்விரதங்களை அம்முறையில் அனுட்டிப்பதே சைவர்க்கு நெறி.  மாறானவற்றை விடுவதும் நெறிதான்.  அந்நூலிற் சொல்லப்படாத சில விரதங்களையும் நம்மவர் அனுட்டித்து வருகின்றனர்.  அவையும் பிரமாணமுடைவாயின் சரி தான்.

ஏகாதசி யென்றொரு விரதமுண்டு.  அதை வைணவரும் அனுட்டிப்பர், சைவரும் அனுட்டிப்பர்.  அவ்விரத விவரம் வைணவருக்கு ஒருவிதம், சைவருக்கு ஒரு விதம்.  இன்று வரை வைணவர் தம் சமயப் பாங்கில் அனுட்டிப்பாராயினர்.  சைவரும் தம் சமய நீதியிலன்றோ அனுட்டிக்க வேண்டும்.  அந்தோ! அவருட் சிலரோ பலரோ அன்று மாத்திரம் ஊர்த்துவபுண்டரம் அதாவது நாமம் போட்டுக் கொள்கின்றனர், வைகுண்ட யாத்திரையுஞ் செய்கின்றனர்.  தன்மானமென்பது அதுதான் போலும்.  அது சைவ விரதமாதலெப்படிதிருப்பாற்கடலைக் கடைந்தனர் பிரம விஷ்ணுவாதி தேவர்களும், அசுரர்களும், அதிலிருந்து எழுந்தது ஆலகால மென்னுங் கொடுவிடம்.  அவ்விட வெப்பத்தால் அப்பிரம விஷ்ணுவாதி சகலரும் பொசுங்கினர், கருகினர்.  உலகமே நடுங்கி விட்டது.  தேவரனைவரும் கயிலைக்கு ஓடிச் சென்று சிவபிரானிடம் சரண் புகுந்தனர்.  திருவுளம் இரங்கியது அப்பெருமானார்க்கு.  அவ்விடத்தைக் கொணர்வித்து வாங்கி உண்டு தம் படிகநிறமான கண்டத்தில் நிறுத்தி அவ்வனைவரையுங் காத்தருளினார் அவர்.  அந்நஞ்சையுண்ட காலம் ஏகாதசி.  திருநீலகண்டரின் திருவருள் பெற்றனர் அத்தேவர்.  அவர் மறுநாள் துவாதசியில் அக்கடலைக் கடைந்தபோது அமுதமெழுந்தது.  விடத்தைத் தாம் உண்டு அமுதத்தைத் தேவர்க்கீந்த காரணத்தால் அச்சிவ பரம்பொருள் அத்தேவரெல்லாராலும் திரயோதசியன்று உபாசிக்கப்பட்டனர்.  அங்ஙனம் சிவபிரான் ஆலாலமுண்டு தேவரைக் காத்தருளிய தினம் ஏகாதசி யாதலால் அத்தினம் சைவர்க்கு விரததின மாயிற்று.  அச்சரித்திரத்தை மறந்து அவ்விரதத்தைச் சைவர் அனுட்டித்தல் பரிதாபம்.  அவர் பரிகசிக்கவும் படுவர்.

'ஏகா தசியின் மாலைதனி லெல்லாம் வல்ல வெம்பெருமான்
ஆகா வாலா கலவிடத்தை யருந்தி யமார்க் காத்தனர்பின்
வாகா வீரா றாந்திதியின் வாரி யமிழ்த மெழவானோர்
ஏகா துண்டு பதின்மூன்றா வெண்ணுந் திதிசா யும்போழ்தில்,'

'அரனார் சபரி மரபுளியே யாற்றி வணங்கிப் போற்றினர் முப்
புரனார் பகைவ ரல்வேல்வை போத விடைமே னின்றருளி
வரனா ரருளை வழங்கினரால்---'
என்ற சிவாலய தரிசனவிதிப் பாடல்களில் மேற்காட்டிய உண்மை புலனாம்.  சபரி - பூசை. 
ஆகவே சைவமக்கள் இனியாயினும் சிவாகம பண்டிதர்களை நாடுக.  அவர்களைக் கொண்டு சைவ விரதங்களையும், அனுட்டான முறைகளையும் சிவாகமப் பிரமாண சகிதம் ஆராய்ச்சி முறையில் எழுதுவித்து வாங்குக.  அதனை அச்சிட்டுப் பரப்புக.  சிறந்த சைவ சேவையாகும் அது.


சொன்னேன் அதுவே சுகம்,

சுபம்

Tuesday, October 6, 2015

☞ சைவசித்தாந்த ஸாரம் - பகுதி 8



• வித்தியேசுவர தத்துவம்

♋அனந்தர் என்னும் வித்தியேசுவரர் ஸர்வேசுவரரானதால் மற்றைய வித்தியேசுவரர்களுக்கும் சுத்தவித்தியா தத்துவத்தில் அடங்கியவர்களுக்கும் (இவர்) ஈசுவரர்; மாயையைக் கலக்குபவர்; மாயாதத்துவத்தில் உள்ள புவனங்களைப் படைப்பவர். ஆனால் இவர் எல்லாவற்றிற்கும் தலைவரான பரமேசுவரரினின்றும் வேறானவர்; அதிகார மலம் பக்குவமடைந்ததால் அந்த பரமேசுவரரால் அருளப்பட்டவர்.

♋இந்த சிருஷ்டிக் கிரமத்தில் ஆணவமலம் கருமமலமென்னும் இரு பாசங்களால் கட்டுண்டவர்கள் பிரளயாகலரென்றழைக்கப்படுவர்.

♋இவர்களுள் மலபரிபாகம் அடைந்தவர்கள் மீது பரமேசுவரரின் அருட்கண் பார்வை வீழ்ச்சியினால் அருளப்பட்ட நூற்றிப் பதினெட்டு உருத்திரர்கள் அடங்குவர். இவர்களுள் ஒருவரான ஸ்ரீகண்டருத்திரர் மத்திமப் பிரளயத்தின் இறுதியில் பிரகிருதி தத்துவத்தின் மேலமைந்த புவனங்களையெல்லாம் தோற்றுவிப்பார்.

ஆணவம்,கருமம்,மாயை ஆகிய மும்மலங்களுடன் கூடிய சகலர்களுள் ஞானம்,யோகம்,தவம்,தியானம் முதலியவற்றை அநுஷ்டிப்பதால் அடையப்படும் பிரஹ்மா,விஷ்ணு ஆகியோரின் பதவிகளையும் நிர்வகிப்பவர்; மத்திமப் பிரளயத்தில் இவர் ராகதத்துவத்தில் அடங்குவார். பின்பு சிருஷ்டிக் காலத்தில் அசுத்தாத்துவசிருஷ்டியைச் செய்து அதன் பின்பு[மேற்கூறிய] பிரஹ்மா,விஷ்ணு ஆகியோர்களின் சிருஷ்டிக்கும் காரணமாக விளங்குகிறார். அவர்களுக்குக் கீழுள்ள புவனேசுவரர்கள், முப்பத்து முக்கோடி தேவர்கள், ஈசுவரர்கள் ஆகியோரின் பிரஹ்மாண்டங்க்ளையும் சிருஷ்டி செய்கிறார்.

♋அந்தப் பிரஹ்மாண்டத்தில் சகலர்கள் வாழும் பதினான்கு உலகங்கள் அடங்கும்.

சுபம்

☞ சைவசித்தாந்த ஸாரம் - பகுதி 7



• சூக்கும தேகம்

♋ [முன்னைய சைவசித்தாந்த ஸாரம் தத்துவ விளக்கப்  பகுதியில் கூறப்பட்ட] முப்பத்தியொரு தத்துவங்கள் அடங்கியது சூக்ஷ்மதேகம் என வழங்கப்படுகிறது; இது ஒவ்வொரு ஆன்மாவிற்கும் தனித்தனியே வேறுபட்டது. முப்பது தத்துவங்கள் பற்பல புவனங்களில் உண்டாகும் உடல்களுக்கும் அவற்றிற்கு ஆதாரமாக விளங்கும் பற்பல புவனங்களுக்கும் ஆதாரமாக அமைவது; இவை எல்லா ஆன்மாக்களுக்கும் பொதுவானவை. இவையெல்லாவற்றிற்கும் காரணமாயிருப்பது அசுத்த மாயை; இது அழிவற்று எக்காலமும் இருப்பது; வியாபித்திருப்பது; எல்லா ஆன்மாக்களின் கருமங்களுடனும் தொடர்புடையது; தன்னுடைய தொழிலால் ஆன்மாக்களை மோஹமடையச் செய்வது.

• சுத்த தத்துவங்கள்

♋மேல் கூறிய தத்துவங்களுக்கு மேல் முப்பத்திரண்டாவது தத்துவம் சுத்தவித்தியை எனப்படும்; அதற்கு மேல் ஈசுவர தத்துவம் முப்பத்தி மூன்றாவது.

♋இந்த சுத்தி வித்தியை தத்துவத்தில் ஸப்தகோடி மஹாமந்திரங்கள்,காமிகம் முதலான இருபத்தெட்டு ஆகமங்கள்(=ஸம்ஹிதைகள்) சைவ சித்தாந்த சாஸ்த்திரங்களினால் போற்றி வணங்கப்படும் நந்தி முதலான எட்டு கணேசுரர்கள், இந்திரன் முதலான எட்டு லோக பாலகர்கள், அவர்களது ஆயுதங்களான வஜ்ரம் முதலானவை இருக்கின்றன. ஈசுவர தத்துவத்தில் அனந்தர் முதலான வித்தியேசுவரர்கள் இருக்கின்றனர்.

சுபம்

☞சைவசித்தாந்த ஸாரம் - பகுதி 6


• மிசிராத்துவா

♋இருபத்தியைந்து தத்துவங்களுக்கு மேலாக உள்ளது ராகம் என்னும் தத்துவம்; இதன் தொழிலாவது பிரகிருதியினின்றும் தோன்றும் அனைத்துப் பொருள்கள் மீதும் ஆன்மாவிற்கு விருப்பம் உண்டாக்குவது.

♋ ராக தத்துவத்திற்கு மேலாக இருப்பது நியதி தத்துவம்; அந்தந்த ஆன்மாவினால் செய்யப்படும் செயல்களின் பலனை அந்தந்த ஆன்மாவே நுகரவேண்டும் என்று நெறிப்படுத்துவதே இதன் தொழில்.

♋ இதற்கு மேல் கால தத்துவம்; புருஷன் என அழைக்கப்படும் ஆன்மாவானது மிக நீண்டகாலம் அனுபவிக்கிறது அல்லது குறைந்த காலம் அனுபவிக்கிறது எனப் புருஷதத்துவத்தின் போக நுகர்ச்சியை அளவிடுவது இதன் தொழில்.

♋ இதற்கு மேல் வித்யா தத்துவம்; இதன் தொழிலாவது அந்தந்தப் பொருள்களின் உருவத்தைக் கொள்ளும் புத்தியினை ஆன்மா பற்றும் படி செய்வது.

♋இதற்கு மேல் உள்ளது கலாதத்துவம்; இதன் தொழில் தாமிரத்தில் படியும் களிம்பு போல் ஆன்மாவின் இயல்பான ஞான சக்தியினை முழுவதும் மறைத்து நிற்கும் சகஜமலமென்றழைக்கப்படும் ஆணவமலத்தைச் சிறிது விளக்கி ஆன்மாவின் உண்மைச் சொரூபம் சிறிது வெளிப்படும் படி செய்தல்.இக் கால தத்துவத்திற்கு காரணமாயிருப்பது மாயாதத்துவம்.

♋ மேற்கூறிய தத்துவங்களின் வரிசை: மாயாத்துவத்தில் கலா,வித்தியா,காலம்,நியதி,அராகம் ஆகிய ஐந்தும் அடங்கும்; இவற்றினால் மறைக்கப்பட்டு[சுக துக்கங்களை] அனுபவிக்கும் ஆன்மாவிற்கு புமான் என்றும், மலமறைப்புள்ளதால் புருஷ தத்துவமென்றும் வழக்கு.[ஆனால்] ஆன்மா ஜடப்பொருளன்று. அராகம் முதல் கலாதத்துவமீறாக உள்ள ஐந்தும் மிசிராத்துவா என அழைக்கப்படுவன.

சுபம்

சைவசித்தாந்த ஸாரம் - பகுதி 5



• அஹங்கார சிருஷ்டி

1. புத்தி தத்துவத்தில் இருந்து சாத்வீகம்,இராஜஸம்,தாமஸம் என [மூன்று]வகைப்பட்ட அஹங்காரம் தோன்றுகிறது.

2. சாத்வீக அஹங்காரத்தில் இருந்து மனம்,செவி முதலிய ஐந்து அறிவுப் புலன்கள் தோன்றும்.

3.  இராஜஸ அஹங்காரத்தில் இருந்து வாக்கு முதலிய ஐந்து தொழிற் கருவிகள் தோன்றும்.

4. தாமஸ அஹங்காரத்தில் இருந்து நாற்றம் முதலிய ஐந்து தன்மாத்திரைகள் உண்டாகும். இவ்வைந்து தன்மாத்திரைகளில் இருந்து மண் முதலிய ஐம்பூதங்கள் தோன்றுகின்றன. இவ்வைந்து பூதங்களின் செயல்கள் முறையே எல்லாவற்றையும் தாங்குதல், ஒருசேர வைத்திருத்தல், எரித்தல், பொருள்களின் உறுப்புகளோடு ஒரு சேர இணைத்திருப்பது, எல்லாப் பொருள்களுக்கும் இருப்பிடம் அளித்தால் ஆகியன.

• குணதத்துவம்

1. இருபத்திரண்டு தத்துவத்திற்கு அப்பாற்பட்டு விளங்கும் புத்திதத்துவத்திற்கு காரணமான குண தத்துவமானது[இருபத்துநான்காம் தத்துவம்] ஸத்துவம்,இராஜஸம்,தாமஸம் என மூன்று பகுப்புக்களைக் கொண்டது;[இது] சுகம்,துக்கம்,குழப்பம் முதலியவற்றுக்குக் காரணமாக உள்ளது.[இது] இருபத்தி நான்காவது தத்துவம்.

2. குணதத்துவத்திற்கு காரணமாக விளங்கும்.பிரகிருதி தத்துவமானது இருபத்தியைந்தாவது தத்துவம். புத்தி,குணம் ஆகியற்றில் பிரகிருதியின் காரியமாகக் கொள்ளப்படுவது  குணதத்துவமே. இக் குணதத்துவமானது சுகம்,துக்கம்,மன மயக்கம் முதலியவற்றிற்குக் காரணமாகவும், அதற்குக் கீழுள்ள புத்தி முதல் நிலம் ஈறாகவுள்ள இருபத்தி மூன்று தத்துவங்களுக்கும் காரணமாகவும் விளங்குகிறது. இவ்வாறான இருபத்தியைந்து தத்துவங்களும் அசுத்தாத்துவா என வழங்கப்படுகின்றன.

சுபம்

Tuesday, September 8, 2015

சைவசித்தாந்த ஸாரம் - பகுதி 4


பத்து காரியங்கள்

1. முன்னைய சைவசித்தாந்த ஸாரம் - பகுதி 3 இன் முடிவில் குறிப்பட்ட புருஷதத்துவமான ஆன்மாவிற்கு சுகதுக்கங்களை அனுபவிப்பதற்குச் சாதனமாகத் திகழும் தத்துவங்கள் எவையெனில் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐம்பூதங்கள்; இவற்றிற்குக்  காரணமான தன்மாத்திரைகள் யாவை எனில் கந்தம், இரசம், ரூபம், பரிசம் மற்றும் சப்தம் என்பனவாகும்.

பத்து கரணங்கள்

2. வாக்கு,பாதம்,கை,கழிவாய் மற்றும் கருவாய் ஆகிய ஐந்து தொழிற் புலன்கள்(கன்மேந்திரியங்கள்). இவற்றின் தொழில்களாவன: பேசுதல்,நடத்தல்,எடுத்தல்,கழிவகற்றல்,ஆனந்தமடைதல்.

3. செவி,தோல்,கண்,நாக்கு,மூக்கு ஆகிய ஐந்து அறிவுப் புலன்கள்(ஞானேந்திரியங்கள்). இவற்றின் தொழில்களாவன: ஓலி, தொடு உணர்ச்சி, உருவம், சுவை, நாற்றம் ஆகியவற்றை அறிதல்.

4. எனவே வாக்கு முதலிய கன்மேந்திரியங்கள் ஐந்தும், செவி முதலிய ஞானேந்திரியங்கள் ஐந்தும் சேர்ந்து கரணங்கள்---புருஷதத்துவமான ஆன்மாவின் அறிவுக்கும் தொழிற்படுத்துவதற்கும் துணை புரியும் கருவிகளாகத்திகழ்கின்றன.

மூன்று அந்தக்கரணங்கள்

1. மனம்,அஹங்காரம்,புத்தி ஆகிய மூன்றும் இப்பருவுடலினின்றும் வெளியில் சென்று அறிந்து கொள்ளும் செவி முதலிய ஞானேந்திரியங்களைப் போலல்லாமல் எல்லாத் தொழிலுக்கும் இருப்பிடமான இவ்வுடலின் உள்ளே நின்று[இந்திரியங்களைத்] அவ்வவற்றின் தொழிலைச் செய்யுமாறு தூண்டுகின்றன. ஆகையால் இவை அந்தக்கரணம்-உட்கருவி என அழைக்கப்படுகின்றன.

2. மனத்தின் செயலானது[யாதேனும் ஒன்றை அறியுமாறோ அல்லது ஒரு செயலைச் செய்யுமாறோ]விழைதல் மற்றும் செவி முதலிய ஞானேந்திரியங்களைத் தொழிற்படுத்துதல்; நான் என்னும் உணர்வு மற்றும் பிராணவாயு முதலியவற்றை தொழிற்படுத்துதல் அஹங்காரத்தின் செயல்; ஐயந்திரிபற ஒரு செய்தியை அறிவது புத்தியின் செயல். அது எவ்வாறெனின், எடுத்துக்காட்டாக, இது வெள்ளியே சிப்பியல்ல என உறுதியாக அறிவது.

இவ்வாறாக[பத்து காரியங்கள் , பத்து கருவிகள், மூன்று உட்கருவிகள் அடங்கிய] இருபத்திமூன்று தத்துவங்கள் கூறப்பட்டன.மேலும்  தத்துவங்கள் காட்டப்படும்...

சுபம்

Monday, August 24, 2015

சைவசித்தாந்த ஸாரம் - பகுதி 3


• உடலும் ஆன்மாவும்
(முக்கியமானது)

I. இந்த ஸம்ஸாரத்தில் ஜாதி மற்றும் குலம் முதலிய உணர்வுகளுக்கு இருப்பிடமாகிய இந்த பருவுடலானது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும்[ஐம்பூதங்களின்] பிரிக்க முடியாத சேர்க்கை.

II. இங்கு முற்பிறவிகளில் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப பிராமணர் முதலிய நால் வருணங்களில் பிறப்பும், புலன்களின் செயல்ப்பாடும், அழகும், செல்வமும் பொருந்தி குறிப்பிட்ட ஓர் அளவு ஆயுளும், குறிப்பிட்ட ஓர் அளவு இன்பதுன்ப நுகர்ச்சியும் கொண்டதாக ஆன்மா அமைகிறது.

III. இவ்வான்மாக்கள் இன்பதுன்ப நுகர்ச்சியடையும் பொருட்டு ஒவ்வொரு சிருஷ்டியிலும் ஒவ்வொரு ஆன்மாவும் ஒரு புல் நுனியை விட்டு நீங்கி அந்தந்தப் பருவுடலைப் பற்றுவதும் பூதங்கள் முதல் கலாதத்துவம் ஈறான முப்பது தத்துவங்களடங்கியதுமான[சூக்ஷ்ம சரீரத்தைப்] பிரத்தியோகமாக ஒவ்வொரு பிறவியிலும் பெறுகின்கின்றன.

IV. அந்த ஆன்மாவினால் செய்யப்படும் புண்ணிய பாவங்களுக்கெல்லாம்[இந்த சூக்கும சரீரம் தான்] உறைவிடமாகும்.

V. ஆன்மாவானது பருவுடல், சூக்கும சரீரம் ஆகியவற்றினின்றும் தனித்து வேறுபட்டது; அறிவு மற்றும் செயல்திறன் கொண்டது; என்றும் நிலைத்து நிற்பது;உருவமற்றது; எங்கும் வியாபித்திருப்பது.

ஸம்ஸாரத்தில் உழலும் புருஷதத்துவமானது 
1. ஆணவம்,
2. கர்மம்,
3. மாயை,
4. பிந்து,
5. ரோதசக்தி 
என்னும் ஐவகையும் பாசங்களுக்குட்பட்டது.


சுபம்

Wednesday, August 19, 2015

சைவசித்தாந்த ஸாரம் - பகுதி 2


சைவசித்தாந்தத்தில் இடம்பெறும் முக்கிய, அடிப்படை விடயம் இந்த பதிபசுபாசமென்னும் முப்பொருள்களும்.

1. பதி – பேரறிவுடைய சிவபெருமான்,
2. பசு – சிற்றறிவுடைய உயிர்,
3. பாசம் - உயிரைப் பிணிக்கும் கட்டு.

இனி தொடர்வோம்..
மெய்யறிவின்ப வடிவினனாகிய முழுமுதற் பரம்பொருள் ஒருவர் ஆவார். அவரே பதியாகிய சிவபெருமான். அவர் தமக்கென யாதொன்றும் வேண்டாதவர். அவர் பஞ்ச கிருத்தியங்களையுந்(ஐந்தொழில்கள்)தம் பொருட்டு செய்யவில்லை; ஆன்மாக்களுக்காக தனது சக்தியினாலே செய்தருளுகின்றார். இத்தன்மையால் இறைவன் அம்மையப்பர்(சிவமும் சக்தியும்)ஆவார்.
பஞ்ச கிருத்தியம்:

I. சிருஷ்டி-படைத்தல்

II. ஸ்திதி-காத்தல் 

III. சம்ஹார-அழித்தல்

IV. திரோபவ-மறைத்தல்

V. அனுக்கிரக-அருளல்

உயிர், என்றைக்குமுள்ள பொருள். அது புதிதாகப் பிறிதொன்றினின்று உண்டாக்கப்படுவதில்லை.ஆதலால்,
• படைத்தல், உயிர்க்கு உடம்பையும், மனமுதலிய உள்ளகக் கருவிகளையும், அது தங்குதற்குரிய உலகப்பகுதியையும், அது நுகர்தற்குரிய பொருள்களையும் தருவதேயாம். இதனை தனு கரண புவன போகங்கள் என்று கூறல் சாலப்பொருந்தும்.
தனு = உடம்பு.
கரணம் = மன முதலிய கருவி.
புவனம் = உடம்புக்கு ஆதாரமாகிய உலகம்.
போகம் = அநுபவிக்கப்படும் பொருள்.

• காத்தல்,உயிர் மேற்கூறியவைகளோடு பொருந்தி வேண்டிய காலம் வரை நிலவச் செய்தல்.

• அழித்தல், மேற்கூறியவற்றுள் ஒன்றோ பலவோ உயிரின் வேறாகப் பிரியும் வண்ணம் செய்தல்.

• மறைத்தல், நல்வினை தீவினைக்குரிய நுகர்ச்சிகளில் ஈடுபடச் செய்தல்.

• அருளல், பக்குவமடைந்த ஆன்மாக்களுக்குப்(பசுக்களுக்கு) பாசத்தை நீக்கிச் சிவத்துவத்தை விளக்குதல்.

சுபம்

Monday, August 17, 2015

சைவசித்தாந்த ஸாரம் - பகுதி 1

“சைவசித்தாந்த ஸாரம்” என்னும் தலைப்பில் அடியேன் சைவசித்தாந்த அடிப்படை விடயங்களை யாவரும் எளிதிலறியும் வண்ணம் சிறு சிறு பகுதிகளாகத் தர எண்ணியிருக்கிறேன். இதனை விளக்குமெனது தினமொவ்வொரு பதிவும் சைவசித்தாந்தம் பற்றியறியாதவர்களுக்கு ஒரு அடிப்படைத் தூண்டுகோலாக யிருக்குமென எண்ணுகிறேன். அவ்வகையில் இன்று சைவசித்தாந்த ஸாரத்தின் முதல் சிறு பதிவு இடம்பெறுகிறது..

சைவசித்தாந்த ஸாரம் - பகுதி 1

உலகத்திலுள்ள பொருள்கள்
  1. அறிவுள்ளன
  2. அறிவில்லாதன என இருவகைப்படும்.

அறிவுள்ளன இயக்குவன,அறிவில்லாதன இயங்குவன. இவ்விரண்டையும் சித்து என்றும், சடம் என்றும் முறையே கூறுப.

அறிவுள்ளன யாவும் தாங்களாகவே பொருள்களை அறிவனவல்ல. தாமே யாவற்றையும் அறியும் கடவுள் ஒருவர் அறிவிக்க, அவை அறியும். அக் கடவுள் சிவபெருமான்.
  • அறிவுள்ளன உயிர்கள்
  • அறிவில்லாதன உலகம்



சைவசித்தாந்த ஸாரம் - பகுதி 1 முற்றிற்று.

சுபம்

Wednesday, July 15, 2015

சண்டதாண்டவம்


ஸ்ரீ வடாரண்யத்தின்(திருவாலங்காடு) மகிமையைச் சிவபிரானார் சொல்லக் கேட்ட சுநந்தமுனிவரானவர், பெருமான் அநுக்கிரகித்தவண்ணந் தாண்டவ தரிசனத்தை விரும்பி ஆங்கடைந்து தவத்தில் இருந்தார். அவ்வாறிருக்கையில் கண்ணுதல் கைவிரலணியாகிய கார்க்கோடகன் திருவிரலில் விஷத்தை கக்க, விடையூர்தி “நம்மை மனத்திற் கருதாது மமதையோடு நீ செய்த தீமைக்ககத் திருக்கயிலையை நீங்குக” என கூறவும், நாகம் நடுங்கி பணிய, நாதன் “வடாரண்யத்தலத்திற் பல்லாண்டுகளிருந்து அருந்தவஞ் செய்யுஞ் சுநந்தருடன் சண்டதாண்டவத்தை தரிசித்துப் பிறகுவருதி” என கூறலும், கட்செவி கருடனுக்கஞ்சி முறையிட, இறைவர் “இத்தீர்த்தத்தில் மூழ்கி ஆண்டுள்ள முத்திதீர்த்ததில் முளைக்க” என, அரவு அவ்வாறே ஆலாவனமடைந்து அருந்தவஞ் செய்யும் சுநந்தரைக் கண்டு தொழுது தனது வரலாற்றைச் சொல்ல, சுநந்த முனிவர் மகிழ்ந்து தன் பக்கமிருந்து தவமியற்ற பணித்து, பழயபடி நெடுங்காலந் தவத்திலிருப்ப, முனிவரைப் புற்றுமூடி முடிமேல் மூஞ்சிப்புல் முளைத்தமையால், அவர்கள் முஞ்சிகேசமுனிவரெனப் பெயர் பெற்றனர்... இது நிற்க;

நிசும்பன், சும்பன் என்னும் நிசாசரிருவர் தீமையை பொறாத தேவர்கள், பார்வதியாரை நோக்கிப் பலகாலஞ் தவஞ் செய்ய, இறைவி இமையவர்முன் தோன்றி “அமரரே! நீங்கள் நினைக்கும் வண்ணமே அவர்களை அழிப்பேன்” என்றருளிச் செய்து மலைச்சாரலையடைந்து தவவடிவேற்று வசித்திருக்கையில், சண்டன் முண்டன் என்னுந் தானவரிருவர் சாம்பவியைச் சார்ந்து, “தார்குழலே! தனித்திருப்பானேன்; சாற்றற்கரிய வலியுடைய சும்பனிடஞ் சேர்க்க” எனச் சொல்ல, அம்பிகை “அருந்தவமாற்றும் யான் ஆடவரோ டுரையாடேன். அரைக்கணத்தகலுமின்” என்று கூற, அவர்கள் சும்பாசுரன்பால் தேவியின் அழகை வியந்து செப்பி, அவனேவலாற் சிலபடையுடன் மீட்டுஞ் சென்றழைத்து வராமை நோக்கி வலிதிற் கைப்பற்றி ஈர்க்கக் கருதுகையில், விமலை வெகுளி கொள்ள, அம்மையார் தோளிலிருந்து அநேகஞ் சேனையுடன் ஒரு சத்தியும் அவதரித்து, அவ்விருவரையுமஞ் சேனையுடன் சங்கரித்தனர். “சண்டனையும், முண்டனையுஞ் சங்கரித்ததால் சாமுண்டி எனப் பெயர் பெற்றுத் தரணியோர் தொழ வாழுதி” என்று அச் சத்திக்கருளினர். அவற்றையறிந்த நிசும்பன்,சும்பன் என்போர் அநேக அசுரருடன் ஆர்ப்பரித்து வந்து அம்மையை எதிர்த்து அஸ்த்திரமாரி சொரிய, உமாதேவியார் தமதுடலினின்று சப்தமாதர்களையுஞ் சிவதூதியரையுஞ் உதிப்பித்து யுத்தத்திற்கனுப்பி அவர்களால் அசுரச் சேனையை யழிப்பித்து, தாமே முதலில் நிசும்பனையும் பிறகு சும்பனையும் மாய்த்தனர்.

ஆற்றலுடைய அவ்விரண்டு அசுரட்கு இளையாளகிய குரோதி என்பவள் பெற்ற இரத்தபீசன் தனது உடல் இரத்தத்தில் ஒருதுளி தர்மேல் விழுந்தால் அத்துளி தன்னைப்போலத் தானவனாக வரம் பெற்றவன். இச்செய்தியை அறிந்து இமைப்பொழுதில் எதிர்த்தனன். அவனுடன் சப்தமாதர்கள் போர்செய்கையில், உதிரத்துளிகட் கொவ்வோர் உருவேற்றது கண்டோடி வந்து உமையமையிடம் கூற, தேவியார் சினமிகத் திருத்தோளினின்றுங் காளி தோன்றினள். “பெண்ணே ! யான் இரத்தபீசனை சங்கரிக்கையில் உதிரத்துளி ஒன்றும் பூமியில் விழாமல் உன் கைகபாலத்தேந்தி உண்ணக்கடவாய்” என்று பணித்து, அவளுதிர பானஞ் செய்துவர, இறைவி இரத்தபீசனை இமைப்பில் அளித்து, இமையவரை அவரவர் நாட்டிற் கேக விசைத்து, காளியைக்களித்து அவளுக்குச் சண்டி என்று பெயரும் தெய்வீகமும் சிவபெருமானிடம் நிருத்தஞ் செய்து அவர் பக்கலில் வசித்தலும் ஆகியவிவற்றை அநுக்கிரகித்து, சப்தமாதர்களுக்கு அருள் செய்து அந்தர்த்தானமாயினார். காளி அசுரர் உதிரமருந்திய ஆற்றலாலும், இறைவியாரிடம் பெற்ற வராததாலு மிறுமாந்து, துர் உணவுகளை புசித்து, மோகினி-இடாகினி-பசாசு-பூதங்கள் புடைசூழ ஒருவனத்திலிருந்து மற்றொரு வனத்திற்கு போய் உலக முழுவது முலவி வடாரண்யத் தருகில்வந்து யாவரையும் வாழ்ந்திருந்தனள். இஃதிவ்வாறிருக்க...

ஒருநாள் திருவாலங்காடு சென்ற நாரதமுனிவருக்கு காளியின் தீச் செயல்களை கார்க்கோடக முனிவன் கூற, நாரதர் கேட்டுச் செல்லுமளவில், காளி விழுங்கவர, அவர் மறைந்து விஷ்ணுவைக் கண்டு விஷயத்தைக் கூற. திருமால் சிவபிரான்பால் திருவிண்ணப்பஞ் செய்ய. இறைவர் “இப்பொழுதே அக்காளியின் வன்மை குன்ற வட வனமடைவோம்” என்று கூறி, சுநந்த,கார்க்கோடக முனிவர்க்குக் கருணைசெய்யக் கருதி ஆலவனமடைந்தனர்.

மஹாதேவன் வயிரவ வடிவுகொள்ள, அவருடன் வந்த பூதகணங்களுடன் காளியின் சேனை எதிர்த்து ஆற்றாது என காளியறிந்து, அவள் அமர்க்கோலங்கொண்டுவந்து ஐயனைக்கண்டு பயந்து “நிருத்த யுத்தஞ் செய்வோம்” என நிகழ்த்த. முன்னோனிசைந்து முஞ்சிகேசர், கார்க்கோடர்கட்குத் தரிசனந் தந்து திருநடனத்துக்குத் தேவருடன் வந்தனர். அக்காலத்து அமரர் அவரவர்கட் கிசைந்த பல வாத்தியங்களை வாசித்தனர். அநவரதம்-அற்புதம்-இரௌத்திரம்-கருணை-குற்செய்-சாந்தம்-சிருங்காரம்-பயம்-பெருநகை-வீரிய மென்னும் நவரசங்களும் அபிநயமும் விளங்க வாத்தியங்கட் கொப்ப பாண்டரங்கமாகிய சண்டதாண்டவத்தைக் காளியுடன் செய்கையில், கருணாநிதியின் திருச்செவியில் இருந்த குண்டலமானது நிருத்த வேகத்தால் நிலத்தில் நழுவ, அதை இறைவரே திருவடியொன்றினாலெடுத்துத் தரித்துத் திருத்தாண்டவஞ்செய்து காளியைத் தோல்வியடையச் செய்தனர். அவள் செயலற்று நாணிப்பணிந்தனள். அருள் வள்ளல் “ஈண்டோர் சத்தியாயிருத்தி” என அநுக்கிரகித்து இரு முனிவரும் எண்ணிலா சிவ அடியார்களும் தமது தாண்டவ கோலத்தைச் சர்வகாலமுந் தரிசிக்கும்படி ஆண்டு வீற்றிருக்கின்றனர்.
சண்டதாண்டவக்கோலம்

திருவாலங்காட்டுப் புராணம்
“இன்சுவை பொழியுஞ் சாய லபினய மிலங்கச் செவ்வாய்
புன்சிறு முறுவல் பூப்பப் புணரவா னந்தம் பூரித்
தன்புறு மவையோருள்ள மயர்தர வியங்கட் கேற்ப
வின்படு நடனங்காளி யோடரன விளைத்த காலை
மடிதரு முலக மென்ன வயங்கரு ணல்கி மெல்ல
அடிபெயர்ந் தாடல் செய்ய அருகுறுங்காளி நோக்கி
ஒடிவுறு நாணின் மேவி யொளிமுக மிறைஞ்சி யொல்கி
வடிவுறு பாவைபோலச் செயலற மயங்கி நின்றாள்”.



சுபமஸ்து