Wednesday, June 3, 2015

அரியும் சிவனும் ஒன்றா ?



1985 ம் ஆண்டில் வெளிவந்தது ஸ்ரீ ராகவேந்திரர் என்னும் தமிழ்த் திரைப்படம் அதனில் ராகவேந்திரர்(பரிமளாச்சாரியா) வேடத்தில் நடிப்பவர் வைஷ்ணவசமயத்தையும், துவைத கொள்கைகளை பரப்பும் ஒரு ஆச்சாரியராக இருக்கிறார்.

அஃது திரைப்படத்தில் ஒரு காட்சி ஒரு அரசவையில் சைவசமய கொள்கைக்கும் வைஷ்ணவ துவைதகொள்கைக்கும் இடையேயான தர்க்கம் அதில் சைவசமயத்தின் பக்கம் தர்க்கிக்க ஒருவர்(சைவசமயி என்னும் பெயரில் சிறுபிள்ளைத்தனமான கேள்விகளை அடுக்கும் ஒருவராக அமைக்கப்பட்டுள்ளார் அந்த திரைப்படத்தில்), வைஷ்ணவ துவைத கொள்கைகள் சார்பில் தர்க்கம் செய்ய ராகவேந்திரர் (சிறுபிள்ளை தனமான கேள்விகளுக்கு ஆதாரபூர்வமாக பதில் சொல்லும் நபராக அமைக்கப்பட்டு இருக்கிறார்). இதில் சைவசமயத்தின் சார்பில் தர்க்கிக்கும் நபரின் கருத்துக்களை முறியடித்து தனது கொள்கையை நிலைநிறுத்தும் நபராகவே ராகவேந்திரர் கதாப்பாத்திரம் உள்ளது.

அஃது தர்க்க காட்சியில் ராகவேந்திர் கதாப்பாத்திரம் நாயன்மார்கள் திருமாலை போற்றினர் என்றும், ஆழ்வார்கள் முக்கண்ணை போற்றினர் என்றும் அரியலால் தேவியில்லை என்னும் அப்பர் பெருமானின் பதிகப் பாடலைக் கூறி அரியும் சிவனும் ஒன்று அறியாதவன் வாயில் மண்ணு என்னும் கருத்தை முன்வைத்து அந்த தர்க்கத்தில் வெற்றி பெறுகிறார்.


இனி நான் மேல் பந்தியில் குறித்த விடயத்திற்கு விளக்கம் காண்போம்

(ஆழ்வார்கள் முக்கண்ணனை போற்றியுள்ளனர் என்பது மெய்யே ! அதனை இதில் நான் விரிக்கவில்லை காரணம் அது எம்பெருமானுக்கு பிறசமயத்தவர்கள் சூட்டிய புகழாரமாதலால்)

நாராயணர் வகை :-

இறைவன் அருளிய வேதம்(ரிக்,யஜுர்,சாம,அதர்வணம்), சிவாகமம் இருபத்தெட்டும்,பன்னிருதிருமுறைகள், மெய்கண்ட சாஸ்த்திரங்கள் பதின்நான்கும், சிவஞானபோத திராவிட மஹாபாஷ்யமும் சைவ சமயத்துக்குப் பிரமாண சாத்திர வரம்பு. இதிலிருந்து நாராயணர் வகைகளை இங்குச் சிறிதே காண்போம்

'நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்
ஆறு கோடி நாராயண ரங்ஙனே
ஏறு கங்கை மணலெண்ணி லிந்திரர்
ஈறி லாதவன் ஈச னொருவனே' என்றார் அதே அப்பர்.
கோடிக்கணக்கான நாராயணர் இறந்தொழிந்தனர், ஆகலின் நாராயணன் உயிரே என்பது துணிபு, சங்கரன் ஒருவனே பிறப்பு இறப்பு முதலிய உயிர்க்குணமில்லாதவன், அவனே பரப்பிரமம் என்பது இப்பாடலின் பொருள் இந் நாராயணனுக்கு இருப்பிடம் பிரகிருதிதத்துவம்.

'முக்திபெற்று மலவாசனைமாத்திரம் உடையவராய்க் கீழுள்ள உருத்திரன் மால் அயன் இந்திரன் முதலியோரைத் தொழிற் படுத்துவோராகிய உருத்திரன் மால் அயன் இந்திரன் முதலியோர்க்கும், அவர் தனுகரணாதிகட்கும் இடமாம் என்றுணர்க'என்றது சிவஞான பாஷ்யம்.

இதில் தொழிற்படுத்தும் நாராயணன், தொழிற்படும் நாராயணன் என இருவகை நாராயணர் உள்ளனர். தொழில்படுத்துகிற நாராயணனும் உயிர்தான். ஆனால் அவன் முத்தி பெற்றவன், மல வாசனை மாத்திரம் உடையவன், ஆகலான் பிறப்பு இறப்பு இல்லாதவன். அவனுக்கு இருப்பிடம் மேலுள்ள சுத்தவித்தியா தத்துவம். அவனால் தொழிற் படுத்தப்படுபவன் அதன் கீழ்ப்பட்ட பிரகிருதி தத்துவ நாராயணன்.

'இறுதிசெய் திடலே சீற்றம் இன்பமே யாண்மை யென்னா
அறைதரு சத்தி நான்காம் அரன்றனக் கையை காளி
முறைதரு கவுரி யின்னோர் மும்மையும் பெற்றோர் ஏனைப்
பெறலருஞ் சத்தி யான்இப் பெற்றியு மறைகள் பேசும்'என்றது கந்த புராணம். இஃது கந்தபுராண பாடல் தாற்பர்யம் அந்நால்வகைச் சக்திகளுள் ஒன்று ஆண்மை யென்பது. அதுவே புருஷ சக்தி. அதற்கு நாராயணன் எனப் பெயருண்டு. அது சிவசக்தியின் ஒரு கூறு. அந் நாராயணன்தான் சங்கரனுக்குத் தேவி. அவளே சுத்தவித்தையிலுள்ள நாராயணனை அதிட்டித்து அவன் மூலம் அப்பிரகிருதி தத்துவ நாராயணனை இயக்குவாள். அத்தேவி நாராயணனுக்கு இருப்பிடம் நாதாதீதம். இப்படி மூன்று வகை நாராயணர் உளராதல் அறிக.


வைஷ்ணவ சமயக் கடவுள்:-

வைஷ்ணவத்தில் பிரகிருதி முடிவாக 25 தத்துவங்களே சொல்லப்பட்டன. அந்தப் பிரகிருதியிலுள்ள நாராயணனையே பத்மன் தவங்கிடந்து பூசித்தான்.
'ஏனமாய் மாயொன் வேலை யிருநிலங் கீண்டுங் காணா' (4.10)
'அன்னவா கனனுங் கருடவா கனனு மணிமுடி யடியறியாத' (26.2)
'பிரமனு நாரணனு நாடரிய.....சங்கரேசுரர்' (28.9) என்பன போன்ற அடிகளும் வருகின்றன. அம்மாயோன், கருடவாகனன், நாரணன் என்பனவும் அந்தப் பிரகிருதிதத்துவ நாராயணனையே சுட்டும்.

'கடகரியும் பரிமாவுந் தேருமுகத் தேறாதே
யிடபமுகந் தேறியவா றெனக்கறிய வியம்பேடி
தடமதில்க ளவைமூன்றுந் தழலெரித்த வ்ந்நாளில்
இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ' என்று மாணிக்கவாசகப்பெருமான் அருளிய மஹா திருவாசகத்திலுள்ள திருமாலும் அவனே, ஐயிரு பிறப்பெடுத்தவனும் அவனே.

'பிரம்மா விஸ்ணு சரீரம் பிராகிருதமாகலானும் முன் பரமசிவன் அனுக்கிரகம் இல்லாமையானும் பிரம்ம விஸ்ணுக்கள் சரீரம் போலப் பரமசிவனைத் தியானிக்கலாகாது. பிரம விட்டுணுக்கள் பதம் பசுத்தானம். உருத்திரர் பதம் ஈசுரர் பதம் இரண்டும் பதித்தானம்' என்றது சித்தாந்தப்பிரகாசிகை.

பிராகிருத தத்துவத்தில் சரீரமுள்ளவனாய் பசுத்தானத்தில் இருக்கப்பட்ட விஸ்ணுவவன். அந் நாராயணனைத்தான் வைஷ்ணவ சமயம் கடவுளெனக் கொண்டு வணங்கிவரும். அவன் அந்த 25 தத்துவங்கள் அளவே தான் வியாபித்திருப்பான். ஆனால் அவற்றின் மேலும் தத்துவங்கள் உள. அவற்றை அச்சமயம்(வைஷ்ணவம்) அங்கீகரியாது. ஆதலால் அவற்றில் அவனுக்கு வியாபகமில்லை. சைவசமயம் அவற்றையுஞ் சேர்த்துத் தத்துவங்கள் 36 கொள்ளும். அவற்றின் மேல் தத்துவமில்லை. 36 ஆம் தத்துவம் நாதம் என்பது. அதன் முடிவிலுள்ளவன் சர்வலோக அதிபதி சர்வேஸ்வரன். அவனே சைவ சமயக் கடவுள், அவ்வெல்லாத் தத்துவங்களிலும் அந்தர்யாமியாகி மேலிருப்பவன், சர்வவியாபி. அவனையும் அந்தப்பிரகிருதி தத்துவ நாராயணனையும் சமமென் இயைத்துச் பேசுவது சைவசமயத்தையும்,சைவ நூற்களைப் அறியாத, பயிலாத தோஷமேயாம்.

சங்கரன் சக்தன், மூன்றாவதாகச் சொல்லப்பட்ட நாராயணன் சக்தி என்றது. சக்தன் கர்த்தா. சக்தனின் உடமை சக்தி. உடையவனின் வழிப்பட்டதே உடமை. அத் தேவி நாராயணன் தான் நாதாதீ தமாயுள்ள சிவசக்தியின் அம்சம்.


முடிபு

'அரியலால் தேவியில்லை ஐயன்ஐயாற னார்க்கே'
என்ற அப்பர் வாக்கிலுள்ள அரி அத் தேவி நாராயணன். அவன் சுத்தவித்தை நாராயணன் மூலம் பிரகிருதி நாராயணனைத் தொழிற்படுத்தி வருகிறான். அச் சம்பந்தம் பற்றி அந்தப் பிரகிருதி நாராயணனையும் சங்கரனுக்குத் தேவியெனச் சில நூற்கள் கூறும். அவ்வளவே.

ஆதிசங்கரர்-மாயாவாதசமயம்,பரிமளாச்சாரியார்(ராகவேந்திரர்)வைஷ்ணவ  சமயம் துவைத்தக் கொள்கை. இவர்கள் சைவசமயத்தவர்கள் அல்ல.சைவசமய ஆச்சாரியார்களும் அல்ல.என்பதை நாம் உணரவேண்டும்
. 
நாயன்மார்கள் திருமாலை சர்வலோக அதிபதியாகிய பரமேஸ்வரனுக்கு நிகர் என்றும், இருவரும் ஒன்றே என்றும் போற்றவில்லை. திருமாலை எம்பெருமானின் சிறந்த சிவ பக்தர் என்றும், எம்பெருமானின் விருப்புக்குரிய அடியவர் என்றுமே போற்றியுள்ளனர். சைவசமயத்தவர்கள் யாவரும் அப்படியே, இதுவே சைவசமயக் கொள்கை.

அதே பதிகத்தில் அப்பர் பெருமானானவர் ஈசனின் அடியவர் திருமால் என்பதனை
மாலுநான் முகனுங் கூடி மலரடி வணங்க
அரிபுரி மலர்கொ டேத்து மையனை என்னும் வரிகளால் தெளிவுபடுத்தியிருக்கிறார் என்பதனை உணர்க.

இனியும் அரியும் சிவனும் என்று முட்டாள்தனமான கருத்துக்களை பேசிக்கொண்டு , சமய அறிவற்று திரிபவர்களுக்கு சமய அறிவை புகட்டுவது சைவசமயிகள் கடமை.

இஃது கட்டுரை சித்தாந்த பண்டித பூஷணம் ஈஸ்வரமூர்த்திப் பிள்ளை அவர்கள் எழுதிய "சங்கரநயினார் கோவில்" கட்டுரையை கருவாகக்கொண்டு எனது சில எழுத்துக்களால் விரிக்கப்பட்டது.


சுபமஸ்து

No comments:

Post a Comment