Friday, May 29, 2015

ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் அறிமுகம்

அடியாரிடர் தீர்த்தருளு மானைமுகன் பாதங் கடிமலர்தூய்க் கைதொழுவாங் கண்டு

முற்பிறவிகளில் நாம் செய்த நற்செயல்களின் பலனே சிறப்புமிக்க மானிடப்பிறவி, இஃது பிறவியில் பிறந்தும் நாம் நற்கருமங்களை செய்யவேண்டும் அதுவே உத்தமம். உத்தமங்களின் சிரஸ் பகவானுக்கு சேவை செய்தல், பகவானின் பக்தர்களுக்கு உதவிகளை மனம் கோணாமல் செய்தல், வேதாகமசாஸ்திரங்கள் அல்லது வேதாகமசாஸ்த்திரங்களுக்கு முரணில்ல நூல்களை கற்று அதனை கற்பவனும் நடைமுறையில் இருத்தி, பிறருக்கும் அதன் தாற்பர்யங்களை விளக்கி கூறி அவர்களையும் உத்தம வழியில் கொண்டு செல்லல், இதுவே உத்தமங்களின் சிரஸ்.

இக்கொடிய கலிகாலமானது உலகமெங்கும் பரவி தனது மஹிமையால் வெகுவேறுபாடுகளை செய்துவிட்டதென்பது யாவருக்கும் தெரிந்த விஷயமே. இப்படியிருக்க பாரத்துவாஜ குலத்துக்கு மணிபோல பதினாராம் நூற்றாண்டில் வடஆற்காடு மாவட்டத்திலுள்ள அடையப்பலத்தில் ஸ்ரீமத் அப்பைய்ய தீக்ஷிதர் மற்றும் ஸ்ரீ நீலகண்டதீக்ஷிதர் என்ற இரு மஹான்கள் அவதரித்தார்கள்(அப்பைய்ய தீக்ஷிதர் அவர்களது தம்பி பேரனாக அவதரித்தவர் ஸ்ரீ நீலகண்ட தீக்ஷதர்).

ஸ்ரீமத் அப்பைய்ய தீக்ஷிதர், ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் பிறந்த வருடம், வாழ்ந்த காலம் பற்றிய விவரங்கள் திட்டவட்டமாக தெரியவில்லை. ஆராய்ச்சியாளர் பல கட்டுரைகளை எழுதியிருப்பினும் முரண் பாடுகளும் கருத்து வேறுபாடுகளும் உள்ளன.

கீழ்க்கண்டவை காலகட்ட நிர்ணயத்தில் கருத்தில் கொள்ளப்பட்டன

1) ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் ஜாதகம்: தெய்வசெயல்புரம் நாடி ஜோதிடத்தில் கிடைத்த ஸ்ரீ நீலகண்ட தீக்ஷதரின் ஜாதகத்தில்,  அவர் பிறந்தது ஜய ஆண்டு என்று தெரிகிறது. ஜய ஆண்டு 60 வருடங்களுக்கு ஒரு முறை வருவதால் இவர் பிறந்தது 1594 அல்லது 1654 ஆகவே இருக்க வேண்டும்.Date of birth ( 23 / 05 / 1594 ) ஜய வருஷம், வைகாசி மாதம், 8ஆம் தேதி பௌர்ணமி திதியன்று திங்கள் கிழமை, அனுஷ நக்ஷத்திரத்தில், ஸ்ரீ நீலகண்டதீக்ஷிதர் அவதரித்தார்

2) மதுரையை ஆண்ட திருமலைநாயக்க மன்னனின் ஆட்சிக்காலம் 1623ஆம் ஆண்டிலிருந்து 1659 வரை, என்பதற்கு சரித்திரச் சன்றுகள் உள்ளன. ஸ்ரீ நீலகண்ட தீக்ஷதர் வாலிப பருவத்தில் மதுரை மன்னால் அமைச்சர் பதவியில் அமர்த்தப் பட்டு பல ஆண்டுகள் பணி புரிந்தார். ஓய்வு பெற்று மன்னனால் தமக்கு மான்யமாக அளிக்கப்பட்ட தாம்ரபர்ணி நதிக்கரையில் அமைந்துள்ள பாலமடை கிராமத்தில் குடியேறி தமது அந்திம காலத்தை அங்கே கழித்தார். தமது எழுபதாம் வயதில் மார்கழி மாதம் சுக்ல அஷ்டமி அன்று மஹாஸித்தி அடைந்து சிவலோகம் எய்தினார். ஆகவே ஸ்ரீ நீலகண்டர் பிறந்தது 1594ஆம் ஆண்டு என்று நிர்ணயிக்கலாம்.

3) ஸ்ரீமத் அப்பைய்ய தீக்ஷிதர் தமது 72 ஆவது வயதில் சிதம்பர க்ஷேத்திரத்தில் சிவலோகம் சென்றார் என்றும், அப்போது நீலகண்டருக்கு வயது 12 என்றும் பல ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அவர் வேலூரை ஆண்ட சின்ன பொம்ம நாயக்க மன்னனின் ராஜ குருவாக பல ஆண்டுகள் பணி புரிந்துள்ளர். வேலூரில் ஸ்ரீ காலகண்டேஸ்வரர் தேவாலயம் மன்னனின் உதவியோடு 1578ஆம் ஸ்ரீ அப்பைய்ய தீக்ஷிதரால் கட்டப்பட்டது. ஸ்ரீ அப்பைய்ய தீக்ஷிதர் 1534ஆம் ஆண்டு பிறந்து 1606ஆம் ஆண்டு ஸித்தி அடைந்தார் என்று நிர்ணயிக்கலாம்.

ஸ்ரீமத் அப்பைய்ய தீக்ஷிதர் எதிரே சிறுபராயத்தில் ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் தேவி மஹாத்மிய ஓலைச்சுவடியை கொடுத்து நிற்கும் காட்சி  

ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் தமது பெரிய பாட்டனாரை(ஸ்ரீமத் அப்பைய்ய தீக்ஷிதரை) பற்றி தமது சிவலீலார்ணவ மஹா காவ்யத்தில்
பரத்வாஜ குலமென்ற கடலில் கௌஸ்துப மணி போல் ஜ்வலிப்பவரும்,
 ஸ்ரீகண்ட மதப்ரதிஷ்டாபனாசார்யரும்,  நூற்றுநான்கு கிரந்தங்களை இயற்றிய,
மஹாவ்ரதயாஜி ஸ்ரீ அப்பைய்ய தீக்ஷி தேந்திராள் என்று கூறிப் பிட்டுள்ளார்.

ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் பல கிரந்தங்கள் இயற்றினார் ஆனால் தற்காலத்தில் எமக்கு கிடைத்துள்ள நூல்கள் மிகச்சொற்பமே அவையாவன "சிவோத்கர்ஷம், சிவலீலார்ணவம், கங்கவதாரணம், சிவதத்வ ரஹஸ்யம், முகுந்தவிலாஸம், ரகுவீரஸ்தவம், சண்டீரஹஸ்யம், நளசரித்திர நாடகம், குருராஜ ஸ்தவம், அன்யாபதேச சதகம், நீலகண்ட விஜய சம்பு, கையட வியாக்கியானம்,கலி விடம்பனம், ஸபாரஞ்ஜன சதகம், வைராக்ய சதகம், சாந்தி விலாஸம், ஆனந்த ஸாகர ஸ்தவம்" ஆகும்.

ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதரின் பெரிய பாட்டனாரான ஸ்ரீமத் அப்பைய்ய தீக்ஷிதரின் நூற்றிற்கு மேல்பட்ட கிரந்தங்களும் மிகப் பிரஸித்தி பெற்றவை. அதில் சிவார்க்க மணி தீபிகையும் ஒன்று (இதனை பராட்டி ஸ்ரீ அப்பைய்ய தீக்ஷி தருக்கு ஸ்ரீகண்டமதபப் பிரதிஷ்டா பனாசார்யர் என்ற பட்டம் அளிக்கப் பட்டது), Sri Appayya Dikshtar Trust என்ற அறக் கட்டளை, ஜம்மு காஷ்மிர் முன்னாள் தலைமை நீதிபதியும், ஸ்ரீ அப்பைய்ய தீக்ஷிதரின் வம்சத்தில் வந்தவருமான ஸ்ரீரத்னமய்யர் தலைமையில் Pilathope, Myalapore, Chennai 600004, என்ற முகவரியில் இயங்கி வருகிறது. ஸ்ரீஅப்பைய்ய தீக்ஷிதரின் கிரந்தங்ளில் பிரசுரமானவை பற்றிய விவரங்களை இங்கு அறியலாம்.

இஃது வேதகாம சங்கிரக வலையில் எழுதப்பட்ட இச்சிறு அறிமுகமானது ஸ்ரீ சிருங்கேரி பீடத்தால் வெளியிடப்பட்ட அம்மன் தரிசனம் என்னும் மாதாந்த இதழில்(2009) டாக்டர் P.S.நடராஜன் அவர்களால் எழுதப்பட்ட ஸ்ரீ நீலகண்டதீக்ஷிதர் காலகட்டம் பற்றிய ஒரு கண்ணோட்டம் என்னும் கட்டுரையையே கருவாகக்கொண்டு,எனது சில எழுத்துக்களால் நிரப்பட்டது.

சுபமஸ்து

Thursday, May 21, 2015

சதுர்வேத விவரணம்


"எல்லா மன்வந்தரங்களிலும் வரும் துவாபரயுகங்கள் தோறும்  விஷ்ணுமூர்த்தியானவர் தர்மத்தை விரும்பி வியாசராய் அவதரித்து உயிர்களுடைய நன்மைகளை கருதியவராய் வேதத்தை சகோப சாகைகளாயும் விதிப்படி புராணங்களையும் இடைவிடாமற் செய்கின்றார். கலியுகத்தில் வேதமோதுகிறவர்கள் அற்பாயுளுள்ளவர்களாகவும், அற்ப புத்தியுடையவர்கலாகவும் இருப்பார்கள் என்று அறிந்து யுகந்தோறும்  புண்ணியமான சம்ஹிதைகளையும் செய்துவருகின்றார்."
தேவி பாகவதம் :- ஸ்காந்தம் ஒன்று;(புராண சங்கியை)அத்தியாயம் மூன்று: ஸ்லோகம் 17-24



வியாசர் வேதத்தை ரிக்,யஜுர்,சாம,அதர்வணம் என்று நான்குவகையாகப் பிரித்து முறையே அவற்றை பைலர், வைசாம்பாயனர், ஜைமினி, ஸுமந்து என்ற நான்கு சிஷ்யர்களுக்கு போதித்து அவரவர்கள் அந்தந்த வேதங்களை தத்தம் சிஷ்ய பரம்பரை மூலமாய் காப்பாற்ற வேண்டுமென்று உத்தரவளித்தார். அப்படியே இப்பவும் நடந்துவருகிறது; அதனால் தான் சிலர் ரிக் வேதிகளாகவும், சிலர் யஜுர்வேதிகளாகவும், சிலர் சாம வேதிகளாகவும், சிலர் அதர்வண வேதிகளாகவுமிருக்கிறார்கள்.


யாகத்தில் ஹோதா, அத்வர்யு, உத்காதா, பிரம்மா என்று நான்கு பேர்கள் முக்கியமானவர்கள்(ஒவ்வோர் யாகத்தை செய்யும் வேத வேதியர்கள் முறையே இந்த நாமங்களால் அழைக்கபடுவர்). அவர்கள் முறையே முற்கூறிய நான்குவேதங்களையும் தனித்தனியாக நன்றாய் கற்றவர்களாக இருக்கவேண்டும்.

ரிக் வேதம்: பசுபதியாகிய மகேஸ்வரனை  துதித்து,  யாகத்தின் அக்னியில் ஹோமம் செய்யவேண்டிய கிரியைகளைப் பற்றிச் சொல்கிறது. அவற்றையறிந்து செய்கிறவர் ஹோதா எனப்படுவார்.

யஜுர் வேதம்: பரம்பொருளின் பஞ்சாக்ஷர மந்திரத்தை ஹிருதயமாக கொண்டு, சர்வேஸ்வரனின் பரிவார தேவதைகளை அழைத்தல், தேவதைகளை ஸ்துதித்தல், வேதிகை, அதன் செங்கல்கள், யூபஸ்தம்பம் முதலியவற்றின் விவரணங்களையும், அக்னி ஹோத்ரம் முதலிய விஷயங்களையும் கூறுகிறது. அவற்றையறிந்து யாகத்தை நடத்துபவர் அத்வர்யு எனப்படுவார்.

ஸாம வேதம்: சர்வலோகத்துக்கும் அதிபதியாயும், யாகத்தின் அதிஷ்டான தேவனுமாகிய ஈசனை ஸ்துதித்து, செய்யவேண்டிய கிரியைகளைப் பற்றிக்கூறுகிறது. ஸாமகானம் செய்து கிரியைகளை செய்கிறவர் உத்காத எனப்படுவார்.

அதர்வண வேதம்: ஈஸ்வரனை உபாஷித்து யாகம் செய்யும் ஹோதா, அத்வர்யு, உத்காதா இவர்களால் செய்யப்படும் கிரியைகளில் சிறுபிழைகள் தவறி ஏற்படின் அதனை நிவிர்த்திகின்ற கிரியைகளைப் பற்றிக்கூறுகிறது.  அம் மூவர்களின் கிரியைகள் தப்பிதமில்லாமல் நடக்கும்படி அவற்றை மேல்பார்த்துகொண்டு இருப்பவர் பிரம்மா எனப்படுவார்.
பின்னும் அதர்வணவேதத்தில் நாட்டையாளும் மன்னருக்கும்(ஜனாதிபதி), நாட்டில் வாழும் மக்களுக்கும், நேரிடும் ஆபத்துக்களை நிவிருத்தி செய்யவும், உலகத்திற்கு துர்பிக்ஷத்தை போக்கி ஸுபிக்ஷத்தையுண்டுபண்ணவும், சாதனமான பற்பலவிதமான கிரியைகள் கூறப்படுகின்றது.

நான்குவேதங்களும் முறையே இருபத்தொன்று, நூறு, ஆயிரம், ஒன்பது என்ற எண்ணிக்கையுற்ற சாகை(பிரிவு)களுள்ளன. முற்கூறிய வேதங்களில் சிலபாகம் மந்த்ரங்களாகவும், சிலபாகம் விதிகளாகவும், சிலபாகம் நிஷேதங்களாகவும், சில பாகம் அர்த்தவாதங்களாகவுமிருக்கின்றன.

ஜபம், ஹோமம், ஸ்துதி, தானம், ஆராதனம், யாகம் முதலியவற்றை செய்யுங்காலங்களில் பிறர்கட்குத் தெரியாமல் மெள்ள உச்சரிக்கக் கூடியவைகள் மந்திரங்கள் எனப்படும். மந்த்ரம் என்பதற்கு மனனம் செய்கிறவரை காப்பாற்றுவது என்று பொருள். இறைவனை வணங்கு, சத்தியத்தைச் சொல், தர்மத்தைச் செய், மாமிஷத்தை உண்ணாதே இவை போன்ற ஸத் காரியங்களில் நியமனம் செய்கின்றவைகள் விதிகள் எனப்படும். இஃதில் விதி என்பதற்கு ஏவுதல் என்று பொருள். பொய்யைச் சொல்லாதே, மயக்கவஸ்துக்களை சாப்பிடாதே, கள் குடியாதே, பிறர் பத்னிகளிடம் செல்லாதே, என்ற இவை போன்றவற்றை விலக்குபவைகள் நிஷேதங்கள் எனப்படும். நிஷேதம் என்பதற்கு தடுத்தல் என்று பொருள். விதித்த கர்மங்களை ஸ்துதி செய்வதால் அவை மேலானவை என்றும் நிஷேதித்த கர்மங்களை நிந்திப்பதால் அவை தாழ்ந்தவை என்றும் நமக்கு போதிப்பவைகள் அர்த்தவாதங்கள் எனப்படும். சிரத்தையுடன் தானம் செய்யவேண்டும் என்பது விதி. தானம் செய்வதினால் எல்லாக் காரியமும் சித்தியாகின்றது என்பது விதியின் ஸ்துதி. பொய்யை சொல்லகூடாது என்பது என்பது நிஷேதம். பொய் சொல்லுகிறவன் அடியோடு நசிவான் என்பது நிஷேதத்தின் நிந்தை. இதனால் விதித்த கர்மங்கள் செய்யத்தகுந்தனவென்றும், நிஷேதித்த கர்மங்கள் தள்ளத்தகுந்தனவென்றும் நாம் தெரிந்துகொள்ளுகிறோம். அர்த்தவாதம் என்பதற்கு விஷயத்தை விளக்கிச் சொல்லுதல் என்று பொருள். 


பின்னும் வேதங்களில், கர்மகாண்டம், உபாஸனா காண்டம், ஞான காண்டம் என்ற மூன்று பிரிவுகள் உள. கர்மகாண்டம் கர்மங்களின் ஸ்வரூபத்தையும், உபாஸனா காண்டம் யோகத்தின் ஸ்வரூபத்தையும், ஞானகாண்டம் பிரம்மத்தின் ஸ்வரூபத்தையும் விளக்குகின்றன. ஞானகாண்டம் வேதாந்தங்கள் என்றும், உபநிஷத்துக்கள் என்றும் கூறப்படும். உபநிஷத் என்பதற்கு பிரம்மமாகிய ஈசன் சமீபத்தில் சேர்ப்பிவிக்கிறது என்று பொருள்.  முற்கூறிய வேதமென்ற ஒரு பெரிய விருக்ஷம் கடர், கெளதுமர், திரித்திரி முதலியவர்களால் காடகம், கெளதுமம், தைத்ரீயம் முதலிய அநேக கிளைகளுடன் பிரிக்கப்பட்டு இப்பொழுதும் விளங்கிக்கொண்டிருக்கிறது.

சுபமஸ்து

Saturday, May 16, 2015

சிந்துவெளி நாகரீகமும் சிவவழிபாடும்

சிந்துவெளி என்பது சிந்து, பலுசிஸ்தான், பஞ்சாப், இராசபுத்தான், சௌராட்டிரம் என்னும் பகுதிகளை அடக்கிய நிலப்பரப்பு ஆகும். ரிக் வேதத்திலும், இதிகாசங்களிலும் இப்பகுதியின் தொன்மை பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்ததால், இதனை அறிதற்குப் பல அறிஞர்கள் ஆர்வமுற்றனர். 1922-22 ஆம் ஆண்டுகளில் யோன் மார்சல் என்பார் தலைமையில் இந்தியத் தொல்பொருள் ஆராய்வாளர் சிந்துவிலுள்ள மொஹஞ்சதாரோவிலும், பஞ்சாப்பிலுள்ள ஹரப்பாவிலும் உள்ள மண்மேடுகளை அகழ்ந்து ஆராய்ந்தனர். பின்பு மசும்தார்,மக்கே ஆகியோர் 30 க்கு மேலான இடங்களை ஆராய்ந்தனர். தொடர்ந்து இராசபுத்தானத்திலும்,  சௌராட்டிரத்திலும் 25 இடங்களை ஆராய்ந்தனர். இவைகளின் பேறாகப் புராதன நாகரீக காலப்பொருட்கள் பலவும், எழுத்துக்களும், கட்டடங்களின் சிதைவுகளும் கிடைத்தன.
இப்பொருள்களின் அமைப்புக்களையும், எழுத்துக்களையும் ஆராய்ந்த அறிஞர்கள் இவை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனவும், இங்கு வாழ்ந்த மக்கள் சிறந்த நாகரீகம் உள்ளவர் எனவும், இங்கு வாழ்ந்தவர்களே தொல்குடியினர் எனவும், உலகிலுள்ள மற்ற இனத்தவர்களுடன் இவர்கள் தொடர்பு உள்ளவர்களாக வாழ்ந்திருக்கின்றனர் எனவும் கூறியிருக்கின்றனர். இங்கு கிடைத்த பொருட்கள் பல சைவத்தின் தொன்மையை விளக்குவனவாகும். 
வரலாற்ராய்வாளர்கள் நூல் சான்றுகளை அதிகம் ஏற்பதில்லை தொல்பொருட் சான்றுகளையே அதிகம் ஏற்பார்கள், ஒப்புக்கொள்வார். அதனால் இவ் ஆராய்ச்சிக்கு முன் தொல்குடியினரின் மிகச்சிறந்த நாகரீகம் பற்றியும், சைவத்தின் தொன்மை பற்றியும் உலகம் நன்கு உணரவில்லை. உலக நாகரீகங்களுட் சிந்துவெளி நாகரீகமே தலையாயது எனவும், சைவம் பழமையான சமயம் எனவும் இவ்வகழ்வாராய்வின் பின்பே உலகம் உணரத்தொடங்கியது. ஆகவே இவ்வாராய்வு சைவத்தின் நீண்ட வரலாற்றில் ஓர் அரிய ஒளிவிளக்காகும்.
களிமண்ணினால் செய்து சுடப்பட்ட முத்திரைகள், தாயத்துக்கள், கல்லினால் செய்த சிவலிங்கங்கள், யோகநிலையில் உள்ள சிவ உருவம், கொம்புகள் உள்ள சிவ உருவம், பெண் தெய்வ வடிவங்கள், உருவகங்கள் பொறித்த செம்பு, வெண்கலத்தகடுகள், நந்தி உருவங்கள், ஆலய அமைப்புக்கள், பூசைக்குரிய பொருட்கள் ஆகியன இப் பிரதேசத்தில் கிடைத்தன.
இவைகளுள் சிவலிங்கங்களும், யோகநிலையில் உள்ள சிவ உருவமும் முக்கியமானவை. அறுநூற்றுக்கு மேலான சிவலிங்கங்கள் இங்கு கிடைத்துள்ளன. இவை மாக்கல்லினாலும், மரத்தினாலும் செய்யப்பெற்றவை, சில லிங்கங்கள் பீடம் இல்லாமலும் கிடைத்தது, சில சிவலிங்கங்களில் உருவங்கள் உள. இதனால் பரவலாக இவ்விடங்களில் சிவலிங்க வழிபாடு அக்காலத்தில் இருந்திருக்கிறது என்பது தெள்ளத்தெளிவு. யோகநிலையில் உள்ள சிவ உருவம் சிந்துவெளி மக்களின் உயர்ந்த நிலைச் சிவநெறிக் கோட்பாட்டை உணர்த்துகிறது. மக்களும், விலங்குகளும் சூழ்ந்திருக்கும் நிலையில் உள்ள சிவ உருவமும் காணப்படுகின்றது. இது சிவன் உலகின் உயிர்கள் அனைத்திற்கும் தலைவன் எனச் சிந்துமக்கள் கொண்டிருந்த கொள்கையை உணர்த்துகிறது. இன்னொரு உருவத்தில் சிவனின் தலையில் இரு கொம்புகள் காணப்படுகின்றது இதன் அர்த்தம் சிவன் முதன்மையும், அதிகாரமும் உள்ளவன் என்பதை உணர்த்துகிறது. இங்கு பல நந்தி உருவங்களும், பெண் தெய்வ உருவங்களும், மர உருவங்களும் கிடைத்துள்ளன. இவற்றைக்கொண்டு அந்நாளிலே இங்கு சக்திவணக்கம், நந்தி வணக்கம், நாக வணக்கம் போன்றவை இருந்திருக்கின்றன என்பதை அறிந்துகொள்ளலாம்.
கிடைத்த பொருட்களுள் தகடொன்றில் நந்தியோடு கூடிய ஊர்வலக்காட்சி ஒன்று காணப்படுவதில் இருந்து அக்காலத்தில் சிந்துவெளி மக்கள் சமய விழாக்களை சிறப்பாகக் கொண்டாடி வந்திருக்கின்றனர் என்பதை உணர்ந்து கொள்ளக்கிடக்கிறது. இன்னொரு தகட்டில் பெண்தெய்வத்தின் முன் சில பெண்கள் உணவுப்பண்டத்தைக் கொண்ட தட்டுகளை ஏந்தியபடி நிற்குங் காட்சி காணப்படுகிறது. இக்காட்சி தெய்வத்திற்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வழக்கம் இருந்ததைக் காட்டுகின்றது.
மண்மேடுகள் மூவகை அடுக்குகளைக் கொண்டிருந்தமையாலும், கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் கல், மரம், செம்பு, வெண்கலம் ஆகியவைகளால் செய்யப்பெற்றிருந்ததாலும், சிந்து வெளியில் சிவவழிபாடு கற்காலம், செம்புக்காலம், வெண்கலக்காலம் ஆகிய மூன்று வகைக்காலங்களிலும் நீடித்து இருந்திருக்கிறது. சிவவழிபாடு மேற்காசியாவில் பரவச் சிந்துவெளி மக்கள் உதவினர் எனவும் அறிஞர் பலர் கூறுகின்றனர். அங்கு கிடைத்த எழுத்துக்களைத் தெளிவாக வாசித்தறியக்கூடிய (பல எழுத்துக்கள் மங்கிய, வித்தியாசமான குறியீடுகள் கொண்ட நிலையில் உள்ளது) நிலை  ஏற்படின் அங்கு நிலவிய சிவவழிபாட்டைப் பற்றிய உண்மைகள் பல மேலும் உலகிற்கு கிடைக்கும். அக்காலம் சிந்துவெளிச் சிவவழிபாட்டின் பெருமையையும், அதன் தொன்மையையும் மேலும் நன்கு அறிய வாய்ப்பு உண்டாகும்.   


சுபமஸ்து

சிந்துவெளி ஆராய்ச்சியும் சைவசமயத்தின் தொன்மையும்


இன்றைய காலகட்டத்தில் பலர் பலவிதமான எண்ணக்கருவூலங்களுடன் சிந்துவெளி நாகரீகத்தினை பற்றி எண்ணுகின்றனர், எழுதுகின்றனர் அதில் “இந்து, இந்துகள்” என்னும் சொற்பதமே போதிக்கபடுகிறது. இந்த போதனையானது முன் வரலாற்றை மறைக்க பூசப்படும் மேல் பூச்சு என்று கொள்ளலாம். இந்த கட்டுரையில் எனது எழுத்துக்கள் அதிகம் இல்லை, நான் படித்த நூல்கள், கிடைத்த பொக்கிஷமான துணுக்குகள் வைத்தே நிரப்பப்படுகிறது.

சைவசமயம் வரலாற்றுக்கு முந்திய சமயம். உலகில் முதற்தோன்றிய சமயம் இதுவேயாம். புராதன காலத்தில் இச் சமயம் உலகில் பல பகுதிகளிலும் விளங்கியுள்ளது. இதன் தொன்மைக்குப் பழம்பெரும் நூல்கள், வழிபாட்டு முறைகள், வரலாற்றுக்குறிப்புகள், தொல்பொருட்கள், அகழ்வாராய்ச்சிகள் என்பன சான்றாக உள்ளன. சைவம் சிவ சம்பந்தமானது. சிவம் - கடவுள், சமயம் – நெறி. வேதாகமங்களும், புராணங்களும் சைவத்தின் தொன்மைக்குச் சான்றாவன. வேதங்களின் காலம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன், வரையறை இன்னது என்று கூற இயலாது என வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
சிவபுராணங்கள் இறைவனது மஹிமைகளையும், உலகத்தோற்றங்களையும், தத்துவங்களையும், வரலாறுகளையும் கூறுவன. பழையகாலத்தில் மதுரையில் நடந்தனவாகத் திருவிளையாடற் புராணம் கூறும் செய்திகள் வரலாற்றினோடு தொடர்புள்ளவையாக காணப்படுகின்றன. கடல் கொண்ட தென் நிலப்பரப்பில் வாழ்ந்த சூரன் முதலியோரும், ஏனைய பகுதிகளில் வாழ்ந்ததோரும் சிவவழிபாட்டினர் என சமஸ்க்கிருத மஹா புராணமாகிய ஸ்காந்தமும், கச்சியப்பசிவாச்சாரியாரின் கந்தபுராணமும் கூறும். 
இராவணனும், வாலியும் நாள்தோறும் சிவவழிபாடு செய்தனர் எனவும், இராவணனைக் கொன்றதனால் இராமனுக்கு பிரம்மஹத்தி தோஷம் சூழ  அத் தோஷம் நீங்க இராமர் சிவவழிபாடு செய்தார் எனவும், பழைய இதிகாசமாகிய இராமாயணம் கூறுகின்றது. இவர்கள் வழிபட்ட தலங்கள் முறையே திருக்கோணேஸ்வரம், குரங்காடுதுறை, திருஇராமேஸ்வரம் என்பனவாகும். மற்றும் அருச்சுனன் தலயாத்திரை செய்து சிவ வழிபாடு செய்ததையும், அவன் தவமிருந்து சிவபிரானிடம் பாசுபதம் என்னும் படைக்கலத்தைப் பெற்றதையும், கண்ணனோடு திருக்கைலை சென்று வழிபட்டதையும் இன்னோர் மஹா இதிகாசமாகிய மஹாபாரதம் செப்புகிறது.( இராமயண பாரத காலங்கள் முறையே கி.மு. 3000 ^ , 1500 ^ )
பண்டைய ரிஷிகள், முனிகள், மக்கள் யாவருமே சிவ வழிபாட்டினராவர். ஆதிசோழ அரசனான முசுகுந்தன் பல இடங்களில் சிவலிங்கங்களை ஸ்தாபித்தான் என வரலாறு கூறுகிறது. திருக்கைலை, காசி, காளகத்தி, காஞ்சி, சிதம்பரம், திருவண்ணாமலை, மதுரை ஆகியவை மிகப்புராதனமான சிவஸ்த்தலங்கள் என புராணங்கள், வரலாறுகள் தெரிவிக்கின்றன.
கடவுட் திருவுருவங்கள், வழிபாட்டிடங்கள் ஆகியவைகளின் அமைப்புக்களின்படி சிவவழிபாடு இன்ன காலத்திலேயே உருவாகியது என்று திட்டவட்டமிட்டு கூறயியலாது. சிந்துவெளியின் அகழ்வாராய்ச்சியின்போது கிடைத்த சிவலிங்கங்களும், அதனோடு தொடர்புபட்ட ஏனைய தொல் பொருட்களும், திட்டவட்டமிட்டு கூற இயலாமல் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு அப்பால்^ பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் வெளிப்படுத்தி உள்ளனர். அதுமாத்திரமின்றி பரதகண்டத்திற்கு அப்பால் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் உலகின் பல பகுதிகளிலும் சிவவழிபாடு நிலவியதென்பதற்குப் போதிய சான்றுகள் பல கிடைத்துள்ளன...



ஆஸ்திரேலியாவிலலும், நியுசிலாந்திலும் உள்ள ஆதிமக்களின் மொழிகளில்”லிங்கம்” என்னும் சொல் காணப்படுகின்றது. நியூகினியாவில் காணப்படும் கிரியை முறைகள் சிவ வழிபாட்டின் தேய்வுகள் ஆகும். சுமாத்திராவிலும், ஜாவாவிலும், போர்னியாயோவிலும் பழைய சிவ வழிபாட்டிடங்களின் சிதைவுகள் காணப்படுகின்றன. பாலித்தீவில் சிவவழிபாடும், சிவாலயங்களும் இன்றும் உள்ளன. சீயத்திலும், கம்போடியாவிலும் பழைய சிவவழிபாட்டு உருவங்கள் கிடைத்திருக்கின்றன. சீயத்தில் பழைய ஆலயம் இருந்த ஓர் இடத்தில் மதவேறுபாடின்றி இன்றும் பொங்கல் பூசை செய்து வழிபடுகின்றனர்.
“ஜப்பானிய சிண்டோயிசிம்” என்னும் மதத்தில் சிவலிங்க வழிபாடு முதன்மையானது. பிற்காலத்தில் அவை நீக்கப்பட்டாலும், சில இடங்களில் இன்றும் இவை இருக்கின்றன. இவர்கள் குறிப்பிடும்”சிவோ” என்பது சிவனேயாம். திபெத் சீனாவினூடாகவே இவ்வழிபாடு ஜப்பானுக்குப் பரவியிருக்கலாம் என வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர்.பாபிலோனியாவில் நடந்த அகழ்வாராய்ச்சியின்போது ஆறாயிரம் ஆண்டுக்கு ^ முற்பட்டசிவலிங்கமும், சிவாலயத்தின் சிதைவுகளும் கிடைத்தன. இச் சிவ உருவம் மழுவுடனும், இருபுறமும் தலை உள்ள சூலத்துடனும் இடபத்தின் மீது காணப்படுகிறது. இங்கு கண்டெடுத்த களிமண் பட்டயத்தில் “சிவன்” என்னும் இடப்பெயர் காணப்படுகிறது.  இவர்களின் மாதம் ஒன்றிற்கு “சிவன்” எனப்பெயர் உண்டு. சுமேரியரின் கடவுளுக்கு “எல்” எனப்பெயர். தமிழில் “எல்” என்பது சூரியனைக்குறிக்கின்றது.

சீரியாவில் சிவன் சிலையும், சிவன் உருவம் பொறித்த வேண்கலத்தட்டும் கிடைத்துள்ளன. இச் சிவ உருவம் பாபிலோனியச் சிவ உருவம் போன்றது. சின்னாசியாவில் சிவன்-சக்தி-கோயில் என்பவைகளின் உருவங்கள் பொறித்த நாணயம் ஒன்று கிடைத்துள்ளது. எகிப்திய சமாதிச் சுவர்களில் சிவலிங்க உருவங்கள் காணப்படுகின்றன. லிபியப் பாலைவனத்தில் உள்ள பசுந்தரை ஒன்றிற்கு பெயர் சிவன். இங்கு பழைய ஆலயமும் வழிபாடும் இன்றும் உண்டு. கிறீட் தீவில் “சிவன்” என்னும் ஓர் இடம் இருக்கிறது. இங்கு சிவன்,சக்தி உருவங்களும், இவ்வுருவங்களுள்ள நாணயங்களும், சிவலிங்கங்களும் கிடைத்துள்ளன. இச் சிவ உருவமும் பாபிலோனியச் சிவ உருவம் போன்றதேயாம். இங்கு சிவாலயங்கள் பண்டை நாட்களில் இருந்திருக்கின்றன என்பதை மேற்கூறிய விபரங்கள் தெளிவுபடுத்துகின்றன. கிரேக்க நாட்டில் சிவவழிபாட்டுத் தொடர்பன கிரியைகள் ”விசா” என்னும் இடத்தில் இன்றும் நடைபெற்று வருகிறது. இவர்கள் லிங்கங்களை பொது இடத்தில் வைத்து எண்ணெய் இட்டு வழிபட்டனர் என கி.மு.4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க அறிஞரான தியோபிரேசியஸ் கூறியுள்ளார். உரோம் நாட்டிலும் சிவலிங்கங்களும் கிடைத்துள்ளன. உரோமர் சிவலிங்க வழிபாட்டை மேற்கு ஐரோப்பாவில் பரப்பியுள்ளனர் என்பதற்குப் பல ஆதாரங்கள் உண்டு.  

அமெரிக்காவுக்கு ஐரோப்பியர் முதலில் சென்றபோது மெக்சிகோ, பெருகெயிற்றி ஆகிய இடங்களில் உள்ளவர்கள் சிவவழிபாடு உள்ளவர்களாக கண்டனர். அங்கு பல இடங்களில் சிவலிங்கங்கள் கிடைத்துள்ளன. கலிபோர்னியாவில் கொலரடோர் நதிக்கு அயலில் உள்ள சிவன் என்னும் பழைய பீடபூமியிலுள்ள மலையில் பழைய சிவாலயம் இருக்கிறது. இது பத்தாயிரம் ஆண்டு பழமையானது எனத் தொல்பொருளியலாளர்கள் கூறுகின்றனர். சிவ வழிபாடு பல நாடுகளில் பரவியிருந்தமையைத் தெளிவுபடுத்துவதில் ஆதர் லில்லி, டெயிலர், பல்பூர், கில்பேர்ட், சிலாற்றர், கெலோனல் டொட்வடல், ஸ்.ரீபன்சன், கிரையர்சன், முகர்சி ஆகிய அறிஞர்கள் உதவியுள்ளனர். இவ்வாறு பண்டு உலகின் பல நாடுகளிலும் சைவம் பரவியிருந்தமையை இவர்கள் எடுத்துக்காட்டுவதுடன், அதனது தொன்மை பற்றியும் உலகிற்கு உணர்த்தியுள்ளனர். 

சிவன் வழிபாடு மேற்காசியா, கிறீஸ், உரோம் முதலிய நாடுகளில் மிகப் பழைய காலத்தில் பரவியிருந்தது. பிற்காலத்து மக்கள் அதன் வரலாற்றை மறந்து போனமையாலும், தம் தேசத்திற்கும் மனப்பான்மைக்கும் பொருந்தாத பழங்கதைகளைப் புனைந்து விட்டனர் என அறிஞர் ஆதர் லில்லி கூறுவார்.சிவலிங்க வணக்கம் உலகில் எல்லா நாடுகளிலும் ஒருகாற் பரவியிருந்தது என்பதற்குப் போதிய சான்றுகள் கிடைத்துள்ளன. சீனா, ஜப்பான், பசுபிக் கடற்தீவுகள் முதலிய இடங்களில் இவ்வழிபாடு இன்னும் முற்றிலும் மறைந்துவிடவில்லை என முகர்சி என்பவர் கூறுகின்றார்.
இங்கு நாம் அறிந்தவற்றால் சைவசமயம் எவராலும் தோற்றுவிக்கப்படாதது என்பதும், அது சிவபெருமானைப் போல அனாதியானது என்பதும், சர்வசங்கார காலத்தின் பின் மீள் ஸ்ருஷ்டியின் போது ஆன்மாக்களது அறிவிலே இறைவனருளால் அது தோன்றுமென்பதும், அவ்வாறு தோன்றிய சைவசமய உணர்வையே சிந்துவெளிப் பழங்குடி மக்களும், சங்ககால மக்களும் பெற்றிருந்தார்களென்பதும்,  அவர்கள் சிவபெருமானின் அருள் மூர்த்தங்கள் பலவற்றை வழிபட்டார்களென்பதும் தெளிவாம்.


குறிப்பு : “இந்து மதம்” என்ற சொல் தற்காலத்திலே நவீனர்களால் கொள்ளப்படும் சொல்லே அன்றி அது தனித்து ஓர் சமயமன்று என்பதை இங்கு விளங்கிக்கொள்ளவேண்டிய விடயமாகும்.


பார்க்க : - 5000 year old shiva linga
               ancient shiva linga in ireland
               shiva lingam in vatican

சுபமஸ்து

Friday, May 15, 2015

வேத மந்த்ரங்கள் - II




||கிருஷ்ண யஜூர் வேதம்:தைத்திரீய ஆரண்யகம் - 4.10.2 (துர்க்கா சூக்தம்) ||

तमाक्ऩि वर्णाम् तपसा ज्वलन्तीम् वैरोचऩीम् कर्मपलेषु जुष्टाम् |
तुर्क्काम् तेवीम् चरणमहम् प्रपत्ये चुतरसि तरसे नमह || 

தமாக்னி வர்ணாம் தபஸா ஜ்வலந்தீம் வைரோசனீம் கர்மபலேஷு ஜுஷ்டாம் |
துர்க்காம் தேவீம் சரணமஹம் ப்ரபத்யே சுதரஸி தரஸே நமஹ || 

மந்த்ர தாற்பர்யம் : - அக்னி வண்ணம் கொண்டவளும் தவத்தினால் ஒளிர்பவளும் இறைவனுக்கு உரியவளும், செயல்கள் அவற்றின் பலன்கள் என்பவற்றில் ஆற்றலாக உறைபவளுமான துர்க்காதேவியை நான் சரணடைகிறேன். துன்பக்கடலிலிருந்து எங்களை கரைசேர்ப்பவளே ! எங்களை காப்பாய், உனக்கு நமஸ்காரம்.


||ஸ்ரீ சூக்தம்: ஸ்லோகம் 3-4||

अश्वपूर्वाम् रतमत्याम् हस्तिनातप्रपोतिनीम् |
स्रियम् तेवीमुपह्वये श्रीर्मा तेवी जुषताम् ||||
काम् सोस्मिताम् हिरण्यप्राकारामार्त्राम् ज्वलन्तीम् त्र्प्ताम् तर्पयन्तीम् |
पत्मे स्तिताम् पत्मवर्णाम् तामिहोपह्वये स्रियम् ||||

அஶ்வபூர்வாம் ரதமத்யாம் ஹஸ்திநாதப்ரபோதிநீம் |
ஸ்ரியம் தேவீமுபஹ்வயே ஸ்ரீர்மா தேவீ ஜுஷதாம் ||3||
காம் ஸோஸ்மிதாம் ஹிரண்யப்ராகாராமார்த்ராம் ஜ்வலந்தீம் த்ர்ப்தாம் தர்பயந்தீம் |
பத்மே ஸ்திதாம் பத்மவர்ணாம் தாமிஹோபஹ்வயே ஸ்ரியம் ||4||

மந்த்ர தாற்பர்யம் :- முன்னால் குதிரைகளும், நடுவில் தேர்களும் புடைசூழவருபவளும், யானைகளின் ஒலியைத் தன் வரவின் அறிகுறியாகக் கொண்டவளுமான  ஸ்ரீ தேவியை அழைக்கின்றேன். திருமகளே நீ என்னிடம் மகிழ்ந்து உறைவாய். புன்முறுவல் பூத்தவளும், பொற்கோட்டையில் உறைபவளும், கருணை நிறைந்தவளும் ஒளி பொருந்தியவளும், மகிழ்ச்சி நிறைந்தவளும், மகிழ்ச்சியைத் தருபவளும், தாமரையில் வீற்றிருப்பவளும், தாமரை நிறத்தவளுமாகிய அந்தத் திருமகளை எழுந்தருளுமாறு பிரார்த்திக்கிறேன்


||மஹாநாராயணோபநிஷத்:ஏகோநசத்வாரிம்ஸோநுவாக||

मतुवाता रुतायते मतुक्षरन्ति सिन्तव: |  
मात्वीर्न:सन्त्वोषती: ||
मतु नक्तमुतोषसि मतुमत्पार्तिवम् रज: |  
मतुत्यौरस्तु न: पिता ||
मतुमान्नो वनस्पतिर्मतुमाम् अस्तु सूर्य: |  
मात्वीर्कावो पवन्तु न: ||

மதுவாதா ருதாயதே மதுக்ஷரந்தி ஸிந்தவ:
மாத்வீர்ந:ஸந்த்வோஷதீ: ||
மது நக்தமுதோஷஸி மதுமத்பார்திவம் ரஜ:
மதுத்யௌரஸ்து ந: பிதா ||
மதுமாந்நோ வநஸ்பதிர்மதுமாம் அஸ்து ஸூர்ய:
மாத்வீர்காவோ பவந்து ந: ||

மந்த்ர தாற்பர்யம் : - காற்று இனிமையாக வீசட்டும், நதிகள் இனியவைகளாக ஓடட்டும், மகத்துவம் கொண்ட மூலிகைகள் நமக்கு இன்பம் தருபவைகள் ஆகுக, இரவிலும் பகலிலும் இனிமையே நிறைந்திருக்கட்டும், நிலத்தின் புழுதியும் இன்பம் பொலிக, நம் தந்தையாகிய வானுலகில் இன்பம் ஓங்குக, கனி கொடுக்கும் மரங்களில் இன்பம் ததும்புக. சூரியன் இன்பத்தை தோற்றுவிப்பானாக,சாந்தமான பசுக்களினின்று நமக்கு இன்பம் சுரப்பதாகுக.


||அதர்வண வேதம் : அதர்வஸிரோபநிஷத்||

ओम् पत्रम् कर्णेपि: श्रुणुयाम तेवा पत्रम् पश्येमाक्षपिर्यजत्रा: |
स्तिरैरङ्कैस्तुष्टुवाम्सस्तनूपि र्व्यशेम तेवहितम् यतायु: ||
स्वस्ति न इन्त्रो व्रूत्तश्रवा:स्वस्ति न: पूषा विश्ववेता: |
स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमि: स्वस्ति नो प्रुहस्पतिर्ततातु ||
ओम्  शान्ति:  शान्ति:  शान्ति:

ஓம் பத்ரம் கர்ணேபி​: ஶ்ருணுயாம தேவா பத்ரம் பஶ்யேமாக்ஷபிர்யஜத்ரா​: |
ஸ்திரைரங்கைஸ்துஷ்டுவாம்ஸஸ்தநூபி ர்வ்யஶேம தேவஹிதம் யதாயு​: ||
ஸ்வஸ்தி ந இந்த்ரோ வ்ரூத்தஶ்ரவா​:ஸ்வஸ்தி ந​: பூஷா விஶ்வவேதா​: |
ஸ்வஸ்தி நஸ்தார்க்ஷ்யோ அரிஷ்டநேமி​: ஸ்வஸ்தி நோ ப்ருஹஸ்பதிர்ததாது ||
ஓம் சாந்தி சாந்தி சாந்தி

மந்த்ர தாற்பர்யம் : - தேவர்களே, காதுகளால் நாங்கள் நல்ல விஷயங்களைக் கேட்கவேண்டும். பூஜிக்கத்தகுந்தவர்களே,கண்களால் நாங்கள் நல்ல விஷயங்களைக் காணவேண்டும். உறுதியான அங்கங்களுடன் கூடிய உடலுடன் ஆயுள் முழுவதும் உங்களைத் துதிக்கவேண்டும். தேவர்களுக்கு நன்மை செய்தவண்ணம் வாழவேண்டும். பழம் புகழ் பெற்ற இந்திரன் நமக்கு நன்மையைச் செய்யட்டும். எல்லாம் அறிகின்ற சூரியன் நமக்கு மங்களம் செய்யட்டும். தீமையை அழிக்கின்ற கருடன் நமக்கு நன்மையை செய்யட்டும். பிரஹஸ்பதி நமக்கு நன்மையைத் தரட்டும்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி.


||சாந்தி மந்த்ரம்||

ओम् तच्चम् योराव्रुणीमहे कातुम् यज्ञाय कातुम्
यज्ञपतये तैवी: स्वस्तिरस्तु न: स्वस्तिर् मानुषेप्य:
ऊर्त्वम् जिकातु पेषजम्  सन्नो अस्तु त्विपते सम्
चतुष्पते
ओम्  शान्ति:  शान्ति:  शान्ति:


ஓம் தச்சம் யோராவ்ருணீமஹே காதும் யஜ்ஞாய காதும்
யஜ்ஞபதயே தைவீ: ஸ்வஸ்திரஸ்து ந: ஸ்வஸ்திர் மாநுஷேப்ய:
ஊர்த்வம் ஜிகாது பேஷஜம்  ஸந்நோ அஸ்து த்விபதே ஸம்
சதுஷ்பதே
ஓம் சாந்தி சாந்தி சாந்தி

மந்த்ர தாற்பர்யம் : - யார் மங்கலத்தை தருபவரோ ! அந்த இறைவனை பிரார்த்திக்கிறோம். யஜ்ஞம் சிறப்பாக நிறைவுற வேண்டுகிறோம்,  யஜ்ஞம் செய்பவருக்காக வேண்டுகிறோம். நமக்குத் தேவதைகள் நன்மையை செய்யட்டும், மனிதர்கள் எல்லோருக்கும் நன்மை உண்டாகட்டும். செடி,கொடிகள் மேலோங்கி வளரட்டும். நம்மிடமுள்ள இரண்டுகால் ஜீவன்களுக்கு மங்களம் உண்டாகட்டும், நான்கு கால் பிராணிகளுக்கு நன்மை உண்டாகட்டும்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி



||தைத்ரீயாரண்யகம்: ஸ்ரீ மேதா ஸூக்தம் 4:10:41-44||

मयि मेताम् मयि प्रजाम् मयि अक्निस् तेजो ततातु मयि
मेताम् मयि प्रजाम् मयि इन्त्र इन्त्रियम् ततातु मयि मेताम्
मयि प्रजाम् मयि सूर्यो प्राजो ततातु

மயி மேதாம் மயி ப்ரஜாம் மயி அக்நிஸ் தேஜோ ததாது மயி
மேதாம் மயி ப்ரஜாம் மயி இந்த்ர இந்த்ரியம் ததாது மயி மேதாம்
மயி ப்ரஜாம் மயி ஸூர்யோ ப்ராஜோ ததாது

மந்த்ர தாற்பர்யம் : - உள்ளுணர்வு, மக்கட்செல்வம், (வேதங்களை படிப்பதால் வருகின்ற) தேஜஸ் இவற்றை அக்கினி தேவன் எனக்குத் தரட்டும்.  உள்ளுணர்வு, மக்கட்செல்வம், (புலனடக்கத்தால் வருகின்ற) வலிமை இவற்றை இந்திரன் எனக்குத் தரட்டும். உள்ளுணர்வு, மக்கட்செல்வம், (எதிரிகளின் மனத்தில் பயத்தை உண்டாக்குகின்ற) வலிமை இவற்றை சூரியன் எனக்குத் தரட்டும்.


||சுவேதாஸ்வதரோபநிஷத் உபநிஷத்6:14||

तत्र सूर्यो पाति चन्त्रतारकम्
नेमा वित्युतो पान्ति कुतोयमक्नि: |
तमेव पान्तमनुपाति सर्वम्
तस्य पासा सर्वमितम् विपाति ||

ந தத்ர ஸூர்யோ பாதி ந சந்த்ரதாரகம்
நேமா வித்யுதோ பாந்தி குதோயமக்நி​: |
தமேவ பாந்தமநுபாதி ஸர்வம்
தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி ||

மந்த்ர தாற்பர்யம் : - அங்கே சூரியன் பிரகாசிப்பதில்லை. சந்திரனும் நக்ஷத்திரங்களும் பிரகாசிப்பதில்லை. மின்னல்கொடிகளும் பிரகாசிப்பதில்லை. இந்த அக்னி எங்ஙனம் பிரகாசிக்கும்? ஸ்வயம் பிரகாசமுள்ள ஈசனைப் பின்பற்றியே அனைத்தும் பிரகாசிக்கின்றன. அவனொளியாலேயே இவையனைத்தும் விளங்குகின்றன.



||ரிக்வேதம்:அகமர்ஷண சூக்தம்||

यऩ्मे मऩसा वाचा कर्मणा वा तुष्क्रुतम् क्रुतम्
तऩ्ऩ इन्त्रो वरुणो प्रुहस्पतिस्सविता पुऩन्तु पुऩ:पुऩ: ||

யன்மே மனஸா வாசா கர்மணா வா துஷ்க்ருதம் க்ருதம்
தன்ன இந்த்ரோ வருணோ ப்ருஹஸ்பதிஸ்ஸவிதா ச புனந்து புன​:புன​: ||

மந்த்ர தாற்பர்யம் : - மனத்தாலும், பேச்சாலும், செயலாலும், என்னாலோ என்னை சேர்ந்தவர்களாலோ எந்தப் பாவச் செயல்கள் செய்யப்பட்டனவோ அவற்றை இந்திரனும் வருணனும் பிரஹஸ்பதியும் சூரியனும் முற்றிலுமாக தூய்மையாக்குவார்களாக. 


சுபமஸ்து