Wednesday, March 30, 2016

தமிழ்ச் சிவஞானபோதம் முதல் நூலன்று, மொழிபெயர்ப்பே!

திருச்சிற்றம்பலம்
ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க


தமிழ்ச் சிவஞானபோதம் முதல் நூலன்று, மொழிபெயர்ப்பே!
(120 காரண மறுப்பு)

'சிவஞான போதம் தமிழ் முதல் நூலே மொழி பெயர்ப்பல்ல.  120 காரணங்கள்' என்ற சிறு சுவடியை ம.பாலசுப்பிரமணிய முதலியார் பி.எ.,பி.எல். தலைவர், சைவசித்தாந்த மகா சமாஜம், சென்னை என்ற விலாசதார் ஆக்கிப் பதிப்புரிமையுடன் சென்னை-14, இராயப்பேட்டை, சாது அச்சுக் கூடத்தில் அச்சிட்டு 1949 இல் வெளியிட்டார்.  அக்காரணங்கள் சிறிதும் அறிவுக்குப் பொருந்தா, தமிழ்ச் சிவஞான போதம் மொழிபெயர்ப்பு நூலே முதல் நூல் அன்று எனக் காட்டுவது இக்கட்டுரை.



'ஆரியமா யறம்பொருளோ டின்பம்வீ டெல்லாம்
அறைந்துயிர்கட் கறிவுசெய லளிப்பதுநூ லந்நூல்
கூரியரா யுள்ளவர்க ளோத வோதிக்
கொண்டுவர லான்முன்னே குற்ற மின்றிச்
சீரியபே ரறிவுடையோன் செப்ப வேண்டும்....'

'வேதநூல் சைவநூ லென்றிரண்டே நூல்கள்
வேறுரைக்கு நூலிவற்றின் விரிந்த நூல்கள்
ஆதிநூ லநாதியம லன்றருநூ லிரண்டும்
ஆரணநூல் பொதுசைவ மருஞ்சிறப்பு நூலாம்
நீதியினா லூலகர்க்கு சத்திநி பாதர்க்கு
நிகழ்த்தியது.....'

'மெய்கண்டான்நூல் சென்னியிர் கொண்டு.....'

'ஆரண மாக மங்க ளருளினா லுருவு கொண்டு
காரண னருளா னாகிற் கதிப்பவ ரில்லை யாகும்
நாரணன் முதலா யுள்ள சுரர்நரர் நாகர்க் கெல்லாம்
சீரணி குருசந் தானச் செய்தியுஞ் சென்றி டாவே'

                                    (இவை சித்தியார்),

'தெரித்தகுரு முதல்வருயர் சிவஞான போதம்
செப்பினர்பின் பவர்புதல்வர் சிவஞான சித்தி விரித்தனர்....'

'தேவர் பிரான் வளர்கயிலை காவல் பூண்ட
திருநந்தி யவர்கணத்தோர் செல்வர் பாரிற்
பாவியசத் தியஞான தரிசனக ளடிசேர்
பரஞ்சோதி மாமுனிகள் பதியா வெண்ணை
மேவியசீர் மெய்கண்ட திறலார் மாறா
விரவுபுக ழருணந்தி விறலார் செல்வத்
தாவிலருண் மறைஞான சம்பந்த ரிவரிச்
சந்தானத் தெமையாளுந் தன்மை யோரே'
                                    (இவை சிவப்பிரகாசம்)

இப்பிரமாணங்களில்:-

1. வேத சிவாகமங்கள் வடமொழியில் உள்ளன.

2. அவற்றை அருளிச் செய்தற்குக் கர்த்தா ஒருவர் வேண்டும்.

3. அவர் சிவபெருமானாரே.

4. அந்நூற்களுள் வேதம் பொது நூல், உலகவர் பொருட்டுச் செய்யப்பட்டது.

5. சிவாகமம் சிறப்புநூல், சத்திநிபாதர் பொருட்டுச் செய்யப்பட்டது.

6. அவற்றைச் சிவபிரானாரிடமிருந்து தேவர்களும், அவர்களிடமிருந்து முனிவர்களும், அவர்களிடமிருந்து மனிதருட் பக்குவிகளும் பெற அவை உலகில் நிலவுவதாயின.

7.  அவை பிரபஞ்ச சிருட்டி முதல் சங்காரம் வரை யிருப்பன.

8.  அவை முதல் நூல்கள்.

9.  அவை அங்ஙனம் நின்று நிலவுவதற்குச் சற்குரு பரம்பரை இன்றியமையாது வேண்டப்படும்.

10. உயிர்வருக்கம் மூன்று வகை.  அவற்றுட் சகல வருக்கம் ஒன்று.

11. பிரபஞ்சத்தில் உடல்பெற்ற உயிர்கள் அச்சகல வருக்கத்து உயிர்களே.

12. அவற்றுள் மனிதப் பிறப்பெய்தியவ ரனைவரும் உபதேசம் பெற்றே முத்தியடைய வேண்டியவர்கள்.

13. உபதேசம் பெறுவார்க்கு நூலின் துணை அவசியம்.

14.  நூலின்றேல் உபதேசம் செய்யவும் பெறவும் முடியாது.

15.  சகல வருக்கத்துப் பக்குவ மெய்திய மாந்தருக்குச் சிவனாரே முதலாசிரியரும், சிவாகமே உபதேச முதல் நூலுமாகும்.

16. சிவனார் திருக்கயிலையில் எழுந்தருளியிருந்த ஸ்ரீ கண்டருத்திரரை அதிட்டிக்க அதனால் ஸ்ரீ கண்டருத்திரர் முதலாசிரிய ரானார்.

17. சிவாகமங்களுள் ஒன்றாகிய ரெளரவாகமப் பகுதி சிவஞானபோதம் என்பது.

18. ஸ்ரீ கண்டருத்திரர் அயன்மால் போலச் சகலரினன்றிப் பிரளயாகலரிற் பக்குவமுடையோனாய்க் கட்டு நீங்கி முத்தி பெற்ற கடவுள்.

19.  அவர் குருவாயிருந்து அச்சிவஞான போதத்தை நந்தி தேவருக்கு உபதேசித்தார்.

20.  அந்நந்தி தேவரிடமிருந்து கயிலாய பரம்பரை யென்ற குருசந்தானம் தொடங்குகிறது.

21.  அத்தேவரிடமிருந்து அந்நூலை உபதேசங் கேட்டவர் சனற்குமாரமா முனிகள் என்பவர்.

22. அம்முனிகளிடம் அவ்வுபதேசங் கேட்டவர்சத்தியஞான தரிசனிகள் என்பவர்.

23. அத்தரிசனிகளிடம் அவ்வுபதேசங் கேட்டவர் பரஞ்சோதி மாமுனிகள் என்பவர்.

24.  நந்திதேவர், சனற்குமார மாமுனிகள், சத்தியஞான தரிசனிகள், பரஞ்சோதி மாமுனிகள் ஆகிய நால்வரும் திருக்கயிலைவாசிகளாகலின் அகச் சந்தான ஆசிரியர்களாவார்கள்.

25.  பரஞ்சோதி மாமுனிகள் தமிழ் நாட்டுக்கு வந்து தமிழரிடம் பேரிரக்கங் கொண்டனர்.

26.  அப்போது தமிழ் நாட்டில் அவரிடம் உபதேசம் பெறப் பக்குவியா யிருந்து அந்நூலை உபதேசிக்கப் பெற்று அவருக்குச் சீடரான ஒரே தமிழர் திருவெண்ணெய் நல்லூர்ச் சுவேதனப் பெருமாள் என்பவர்.

27. அவரே மெய்(ப்பொருள்) கண்டார்.

28. அவரே அம்முனிகளின் கட்டளைப்படி அவ்வடமொழிச் சிவஞான போதத்த்தைத் தமிழில் மொழி பெயர்த்தார்.

29. பெயர்த்து, அவ்வாணைவழி அத்தமிழ்ச் சிவஞான போதத்துக்கு வார்த்திகம் என்றோ ரற்புதமான உரையையும் இயற்றினார்.

30. அவ்வுரையோடு சேர்ந்த தமிழ்ச் சிவஞான போதமே அருணந்திசிவனார் திருவாய் மலர்ந்த 'மெய்கண்டான் நூல்' என்பது.

31. அம் மெய்கண்டாரிடம் அம்மெய்கண்டான் நூலை உபதேசம் பெற்றவர் அருணந்தி சிவனார் என்பவர்.

32. அச்சிவனாரிடம் அந்நூலை உபதேசம் பெற்றவர் மறைஞான சம்பந்த சிவனார் என்பவர்.

33. அச்சிவனாருக்குச்சீடரானார் உமாபதிசிவனார் என்பவர்.

34. மெய்கண்டார், அருணந்தியார், மறைஞான சம்பந்த சிவனார் ஆகிய நால்வரும் தமிழ் நாட்டின ரானதால் புறச்சந்தான ஆசிரியர்க ளாவார்கள்.

35. இப்போதுள்ள திருவாவடுதுறை யாதீனம் அச்சீரணிகுரு சந்தான மாகும் என்ற உண்மைகள் கூர்த்த மதிகொண்டு கண்டு கொள்ளப்படும்.

ஆனால் அவற்றுள் எதனையும் முதலியார் ஏற்றவராக அச்சுவடியில் தெரியவில்லை.  அவருடைய சைவம் அவருக்கு எப்படிக் கிடைத்ததோ? அதற்கொரு வரலாற்றை அவர் கற்பித்தாவது வெளியிட்டிருக்கலாம்.  அச்சுவடியில் அஃதில்லை.  கூடு கட்டத் தெரியவில்லை, கட்டிய கூட்டையழிக்கமுனைவது நியாயமா?

இனி அந்த 120 காரணங்களையும் வரிசையாக ஆராயலாம்.

1.  "தாம் அருளியது முதல் நூல் அல்ல, மொழிபெயர்ப்பே என்று மெய்கண்டார் எங்கும் கூறவே யில்லை" என்றார் அச்சுவடியார்.

மெய்கண்டார் வடமொழிச் சிவஞான போதத்தைத் தமிழிற் பெயர்த்தார் என்ற உண்மை அவரின் சீடபரம்பரையினர் அனைவராலும் நாளிதுவரைச் சம்மதிக்கப்பட்டு வருகிறது.  அவரெல்லாம் அறிவு மிக்க சான்றோர்.  அச்சான்றோர் பாரம்பரியமாய் அங்கீகரித்து வரும் உண்மையை இடைப்பட்ட வெளியார் சம்சயிப்பது நீதியாகாது.  அவர் தம் பரம்பரையிலும் பிறர் சம்சயங் கொள்ள வழிகாட்டியவராவர்.  வடமொழிச் சிவஞான போதத்தைத் தமிழிற் பெயர்க்க வேண்டுமென மெய்கண்டார் ஆசைப்படவில்லை.  அந்நூலுக்கு உரைகூறிச் சைவத் தமிழரை உய்விக்க வேண்டுமென்று தான் அவர் விரும்பினார்.  அவ்விருப்பமும் பரஞ்சோதி மாமுனிகளின் கட்டளைப்படியே யாகும்.  ஆனால் நூல் ஒரு பாஷையிலும், உரை இன்னொரு பாஷையிலும் இருப்பது பொருந்தாது.  ஆகலின் தமிழுரையின் பொருட்டு நூலையுந் தமிழ்ச் சொல்லாற் காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் நேர்ந்தது.  அதனால் அவர் அந்நூலைத் தமிழிற் பெயர்த்துச் சூத்திரந்தோறும் 'என்பது சூத்திரம்' எனக்காட்டியே வார்த்திகத்தைத் தொடங்கினார்.  அதுவே அந்நூல் பெயர்ப்பு என்பதற்குப் போதுமான சான்றாகும்.  அந்நூலை எம்மொழியிற் பெயர்த்தாலும் பொருள் எளிதில் விளங்காது.  ஆகலின் நூலை மாத்திரம் பெயர்த்தவர் மதிப்படையார்.  அதன் பொருளைத் தெள்ளத் தெளிந்தவர் மெய்கண்டார் என்ற சைவத் தமிழர் ஒருவரே.  அதனுரையைப் பிரகாசிப்பிப்பதற்காகவே அத்தமிழ்ப் பெயர்ப்பும் வேண்டுவதாயிற்று.

-----------

10. 'சைவர்களுக்கு எல்லையில்லாத நம்பிக்கையைத் தரக்கூடிய, பிரமாணமான ஸ்ரீ கண்ட ருத்திரர் திருவாக்கை உலக மக்கள் பசுவாக்காகவே மதித்து 'என்மனார் புலவர்என்று திரித்துக்கூறி, அவர்களுடைய நம்பிக்கையை வேண்டுமென்றே குலைக்கும் குற்றமும் மெய்கண்டரைச் சாரும்' என்றார் அச்சுவடியார்.

அச்சுவடியாருக்கு ஸ்ரீ கண்டருத்திரர் திருவாக்கென ஒரு நூலேனும் உண்டா? அதனை அவர் அப்படி விசுவசிக்கிறரா? அச்சுவடியில் அதற்கு ஆதாரங் காணப்படவில்லை.  மெய்கண்டார் 'சாக்கிரத்தே அதீதத்தைப் புரியுந் தமக்கு இடையூறு சிறிதுமணுகாமை அறிந்தாராயினும்...' என மாபாடியத்திற் போற்றப்பட்டவர்.  ஆகலின் அவரும் சிவமேயானவர்.  அவர் சொன்னது 'என்மனார் புலவர்' என்பது தமிழ்ச் சிவஞானபோதம் முதல்நூல் என்ற அச்சுவடியாருக்கு அத்தொடர் சம்மதமா யிருக்குமா? சிவமேயான மெய்கண்டாரும் அத்தொடர் மூலம் அச்சுவடியார் கிரகித்தபடி பசுவே.  அவர் மூலம் அச்சுவடியார் கிரகித்தபடி பசுவே, அவர் செய்த்தாகச் சொல்லப்பட்ட தமிழ்ச் சிவஞான போதமும் பசுவாக்கே என உலகத்து மக்கள் திரித்துப் பேசுதல் திண்ணம்.  அது மெய்கண்டார் மேல் வைத்த நம்பிக்கையையும் 'வேண்டுமென்றேகுலைக்குங் குற்ற'மாய் அச்சுவடியாரையே சாரும்.

11. 'வடமொழியிலுள்ள பன்னிரண்டாவது சூத்திரத்தில் 'ஏவம் வித்யாத் சிவஜ்ஞானபோதே சைவார்த்த நிர்ணயம்' என்ற பகுதியை, மெய்கண்டார் தமது பன்னிரண்டாம் சூத்திரத்தில் அடியோடு விட்டிருக்கிறார்.  தாம் மொழி பெயர்த்தது உண்மையானால், இதை விடாமல் சேர்க்கவேண்டிய அவசியமும் பொறுப்பும் மெய்கண்டாருக்கு உண்டு' என்றார் அச்சுவடியார்.

உள்ளத்தில் எழுந்த முனைப்பால் தாமே கற்பித்துக்கொண்டதொரு கொள்கைக்கு வசப்பட்டு, அவ்வடியின் மொழிபெயர்ப்பு எங்கிருக்கிறதென்பதையே அவர் தெரியாமற் போனார்.  7இல் தரப்பட்டுள்ளது அதற்கு விடை.

12. 'மொழி பெயர்ப்புக் கொள்கை உண்மையானால், பற்பல இடங்களில் ஸ்ரீ கண்டருத்திரர் திருவாக்கை மாற்றியும், விட்டும், வேறு பலவற்றை அத்திருவாக்கோடு சேர்த்தும், வேறு எந்த மொழி பெயர்ப்பாளரும் செய்யத்துணியாத, பல அடாத காரியங்களை மெய்கண்டார் செய்துள்ளார் என்று கொள்ள வேண்டிவரும் (விவரம் 61 முதல் 119 வரை பார்க்க)' என்றார் அச்சுவடியார்.

`தமிழ்ப் பெயர்ப்பாகலின் தமிழாக மாற்றினார், சொற்களை விட்டிருந்தால் அவற்றின் பொருளை வந்துள்ள சொற்களில் தொனிக்க வைத்தார், வேறு பலவற்றைச் சேர்த்திருந்தால் அவற்றை விளக்கத்தின் பொருட்டுச் சேர்த்தார் மெய்கண்டார்.  அறிவுள்ள பெயர்ப்பாளர் யாருஞ் செய்யத் துணியுங் காரியங்களே அவை.  அப்பெயர்ப்புக்களைத்தான் ஆங்கிலம் Free Translation  எனக் கூறி மதிக்கும்.  பெயர்ப்பில் மூலத்துக்கு முரணான கருத்துக்களும், மூலத்துக்கு வேண்டாத கருத்துக்களும், மூலத்தில் இல்லாத கருத்துக்களும் இருத்தல் கூடாது.  இருந்தால் அதுதான் அடாத செயல்.  61 முதல் 119 வரையுள்ள காரணங்களை யாராயும்போது அப்பெயர்ப்பின் சிறப்புக் காட்டப்படும்.

13. 'கண்ட இருதயகமல முகைகள் எல்லாம் கண்திறப்பக் காசினிமேல் வந்த அருட்கதிரோன்.....மெய்கண்ட தேவன் மிகு சைவநாதன்' என்று புகழ்ப்பெறும் சந்தான முதற்குரவர் இத்தகைய மோசம், குற்றம், அடாத செயல்களைச் செய்திருக்கவே மாட்டார்.  ஆகையால் மொழிபெயர்ப்புக் கொள்கையே தவறானது' என்றார் அச்சுவடியார்.

மெய்கண்டார் வடமொழிச் சிவஞான போதத்தைத் தமிழிற் பெயர்த்தார் என்ற வுண்மையில் அசூயை கொண்ட மோசம், குற்றம்.  அடாத செயல் என்ற தரக்குறைவான சொற்களை அவர் மேல் அள்ளி வீசினார் அச்சுவடியார்.  அவை வெறுஞ் சலசலப்பே.  அதனால் மொழிபெயர்ப்புக் கொள்கை தவறானதாய் விடாது.  மொழிபெயர்ப்பு வடமொழி மூலத்தோடு முற்றிலும் பொருந்துவதே.  அதுதமிழ் முதல்நூல் என்றதம் கொள்கையைத்தக்க காரணங்காட்டி அவர் மெய்ப்பிக்க.  அதுவே அவருக்குக் கடன்.

14. 'மெய்கண்டாருடைய தலை மாணக்கராகிய அருணந்தி சிவாசாரியார், தமது ஆசிரியரை, மொழிபெயர்ப்பாளராகக் கூறவேயில்லை' என்றார் அச்சுவடியார்.

கூறியே யிருக்கிறார்.  17ஆவது காரண மறுப்பைக் காண்க.  அன்றியும், சிவஞானபோதம் தமிழ் முதல் நூல், அதற்காசிரியர் மெய்கண்டார் என்றாவது அவ்வருணந்தியார் எங்கேனுங் கூறியிருக்கிறாரா? அதனை அச்சுவடியார் காட்டட்டும்.

15. 'சகல ஆகம பண்டிதர் என்று புகழ் பெற்ற இவர், ரெளரவ ஆகமத்தில் இந்த சூத்திரங்கள் இருந்தால், மெய்கண்டார் இவைகளை மொழிபெயர்த்திருந்தால், இச்செய்தியைகளைக் கட்டாயமாகக் கூறியிருப்பார்' என்றார் அச்சுவடியார்.

ரெளரவாகமத்தில் இந்தச் சூத்திரங்கள் இல்லையென்பது அச்சுவடியார் கருத்தோ? அதுவும் அதிசயந்தான், அதுகிடக்க கட்டாயமாகக்கூறவேண்டுமென்ற அவசியம் என்ன? ஆகமம் படித்த எல்லாச் சைவரும் சிவஞானபோதம் அவ்வாகமத்திலுள்ள தென்பதைநன்கறிவர்.  அதனையுமா சொல்லி யாகவேண்டும்? சகலாகம பண்டிதரா யிருந்த அருணந்தியார்க்கும் அது தெரிந்தது தான்.  அது தமிழிலோவேறு மொழிகளிலோ வந்தால் மொழிபெயர்ப்பே.  இப்படி எல்லாருந் தெரிந்த வொன்றைப் பின்னுள்ள ஆசிரியரனைவருந் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டுமா? சொல்லாமையால் மொழி பெயர்ப்பு என்ற கொள்கை பொய்யாய் விடுமா? பரம்பரையாக எதிர்ப்பாரே யில்லாமல் சர்வ சத்ஜன அங்கீகாரமா யிருந்துவருகிற ஒரு கொள்கையை பலமான காரணமின்றி வாயில்வந்தது கூறி மறுப்பது செல்லாது.  அருணந்தியாரும் தமிழ்ச் சிவஞானபோதம் பெயர்ப்பெனக் கொண்டவரே.  அதனை ஆண்டாண்டு அறிக.

16. 'மெய்கண்டார் நூலை முதல் நூல் பிரமாணமாகக் கொள்வதைவிட, ஆகம சூத்திரங்கள் பன்னிரண்டையும் அசைக்க முடியாத பிரமாணமாகக் கொண்டிருப்பார்' என்றார் அச்சுவடியார்.

வடமொழியிலுள்ள ஆகம சூத்திரங்கள் பன்னிரண்டையும் அசைக்க முடியாத பிரமாணமாகக் கொண்டு சித்தியார் என்ற தமிழ்நூலை அதற்கு உரையாகச் செய்தார் அருணந்தியார் என்றால் அது அச்சுவடியாருக்குத்தான் பிடிக்குமா? நூல் முழுமையும் வடமொழியிலும், பன்னிரண்டு சூத்திரங்கள் மட்டும் தமிழிலும் இருந்தால் நன்றாயிராதென்று இயல்பாக எண்ணினார் போலும்' என 51 இல அவரே சொன்னார்.  வடமொழிச் சிவஞானபோதத்தைத் தமிழிலிருந்து மொழிபெயர்த்தார் சிவாக்கிர யோகிகள் எனக் கற்பித்துக் கொண்டு அதற்குக் காரணங் கூறு முறையில் அவர் அப்படிச் சொன்னார்.  அங்ஙனமாயின் அருணந்தியார் மாத்திரம் மூலம் வடமொழியி லிருக்க அதன் விரிவுரையைத் தமிழிற் செய்யலாமா?

17. 'வேதத்தைப்பொது என்றும் சிவாகமங்களையே சித்தாந்தம் என்று (சித்தியார் சுபக்கம் 8, 15ல்) கூறும் இவர், தமது ஆசிரியர் முதல் நூலுக்குப் பெரிதும் ஒத்த சூத்திரங்கள் பன்னிரண்டு ரெளரவ ஆகமத்தில் இவர் காலத்தில் இருந்திருந்தால், ஒரு போதும் விட்டிருக்கவே மாட்டார்' என்றார் அச்சுவடியார்.

ரெளரவாகமத்தில் சிவஞானபோத சூத்திரங்கள் இல்லாமலிருந்தாற்றான் தமது தமிழ் முதல் நூற்கொள்கை சீவிக்குமென அவர் கருதி அவ்வில்லாமையைச் சாதிக்கப் பகீரதப் பிரயத்தனஞ் செய்கிறார் அச்சுவடியார்பாவம்.  'ஸ்திரீபுந் நபும்ஸகாதித்வாத்' என்றது ரெளரவாகம சூத்திரம்.  'அவனவளதுவெனுமவை' என்றது அதன் தமிழ்ப்பெயர்ப்புச் சூத்திரம்.  அருணந்தியாரோ பெயர்ப்பிலுள்ள அவ்வடியை விட்டு 'ஒருவனோ டொருத்தி யொன்றென்றுரைத்திடு முலக மெல்லாம்' எனத் தம் சித்தியாரைத் தொடங்கினார்.  'அவனவளது' என்ற கட்டு அத்தொடக்கவடியிற் போயிற்று.  ஆகலின் அவ்வடி வடமொழி முதற் சூத்திரத்தின் மொழி பெயர்ப்பாயிருக்கிறது.  ஆனால் வடமொழிச் சூத்திரம் பெண்பாற் சொல்லிலும் தமிழ்ச் சூத்திரம் ஆண்பாற் சொல்லிலுந் தொடங்குகின்றன.  சித்தியாரும் 'ஒருவன்' என ஆண்பாற் சொல்லில் தொடங்குகிறது.  அஃது 'அவன்' என்ற தமிழ்ப்பெயர்ப்பை யாதரித்த படியாம்.  அங்ஙனமாக அருணந்தியார் காலத்தில் வடமொழிச் சிவஞானபோதம் ரெளரவாகமத்திலில்லை யென அச்சுவடியார் எப்படிச் சொன்னார்? பிரமாண மில்லாமல் எவர் பேசினும் அவர் பேச்சுப் பயனற்றதே.

18. 'மெய்கண்டான் நூல் சென்னியில் கொண்டு சைவத்திறத்தினைத் தெரிக்கலுற்றாம்' என்று (சித்தியார் சுபக்கம் பாயிரம் 3ல்) கூறுகிறாரே தவிர, ரெளரவ ஆகம சூத்திரங்களையோ, அவற்றின் மொழிபெயர்ப்பையோ சென்னியிற் கொள்வதாகக் கூறவில்லை' என்றார் அச்சுவடியார்.

மெய்கண்டான் நூல் என அருணந்தியார் எதனைச் சொன்னார்? அச்சுவடியார் அதனைத் தெரிந்திலர் "அவர் (பரஞ்சோதி மாமுனிகள்) தமிழ்நாடு செய்த தவத்தானே திருவெண்ணெய் நல்லூரின் அவதரித்தருளி மெய்யுணர்வின் முற்றுப்பேறுடையராய் எழுந்தருளியிருந்த மெய்கண்டதேவர்பால் வந்து சிவஞானபோதத்தை நல்கி, 'இதனை ஈண்டுள்ளோர் உணர்ந்து உய்தற்பொருட்டு மொழிபெயர்த்துச் செய்து பொழிப்பு முரைக்க' என்று அளித்தருளிப் பொழிப்புரைக்குமாறுஞ் சத்திய ஞானதரிசனிகள்பால் தாம் கேட்டவாறே வகுத்தருளிச் செய்து நீங்க, அவரும் அவ்வாறே மொழிபெயர்த்துப் பொழிப்புரையுஞ் செய்தருளித் தம்முடைய மாணாக்கர் பல்லோருள்ளுஞ் சிறந்த அருணந்திகுரவர்க்கு அளித்தருளினார்.  இஃது இந்நூல் வந்த வரலாறெனக் கொள்க" என்றது தமிழ் சிவஞானபோதச் சிறப்புப்பாயிரப்பாஷ்யம்.  'வார்த்திகமாகிய பொழிப்புரைப்பான் புகுந்து, சூத்திரத்தை மொழி பெயர்த்தருளிச் செய்கின்றார்', 'இங்ஙனம் பாடத்தை மொழிபெயர்த்துக் கொண்டு, என்பது சூத்திர மெனக்காட்டி' என்றது முதற் சூத்திர பாஷ்ய ஆரம்பம்.  ஆகவே மெய்கண்டாருக்கு உபதேசமானது வடமொழிச் சிவஞானபோதமே.  அதனைப் பொருளாற் சிறிதும் வேறுபடுத்தாமல் ஆனாற் குரு கட்டளைப்படி மொழியால்மட்டில் வேறுபடுத்தி அதாவது தமிழில் மொழி பெயர்த்துத் தாம் அருளிச் செய்த வார்த்திக வுரையோடு அருணந்தியார்க்கு மெய்கண்டார் உபதேசித்தார்.  அவர் செய்த மொழிபெயர்ப்பு அவ்வார்த்திகப் பொழிப்புரைக்குச் சாதகமாயிற் றத்தனையே.  'வார்த்திகமாகிய பொழிப்புரையுஞ் செய்யுளாகலின்' என்ற பாஷ்ய வசனத்தால் அவ்வுரையையும் நூலென்றல் குற்றமாகாது.  ஆனால் அது தன்னளவில் மூலமில்லாத வுரையாய்ப் போம்.  தமிழப்பன்னிரு சூத்திரமாத்திரம் மெய்கண்டான் நூலாயின் அது ரெளரவாகமப் பகுதியின் மொழிபெயர்ப்பாய் ஆகமத்திற் சேர்ந்து போம்.  ஆகவே அவ்வார்த்திக வுரையோடு கூடிய தமிழ்ப்பெயர்ப்புச் சிவஞான போதமே அருணந்தியார் சொன்ன மெய்கண்டான் நூல் ஆகும்.  அவ்வருணந்தியார்க்கு மெய்கண்டாரால் உபதேசமானதும் அம்மெய்கண்டான் நூலே.  அவ்வருணந்தியார் 'சென்னியிற் கொண்' டதும் அம்மெய்கண்டான் நூலே.  தமிழிலே சிவஞான போதம் என்பதும் அம்மெய்கண்டான் நூலே.

உலகத்து மொழிகளில் பெருநூற்கள் பலப்பல.  அவற்றுள் எத்தனையோ நூற்களுக்கு உரையெழுதியவர் எத்தனையோ பேராயிருப்பர்.  அவரெல்லாம் போற்றற்குரிய பேரறிவாற்றல் படைத்த வுரையாசிரியர் மெய்கண்டா ரொருவரே.  அவரருளிய வார்த்திகமே சித்தியார், சிவப்பிரகாசம், சிற்றுரை, மஹாபாஷ்யம் முதலிய அறிவுரைக் களஞ்சியங்கள் கிடைப்பதற்கு மூலமா யிருந்தது.  இம்முடிவு அபிமானம் பற்றிய தன்று; கூர்ந்து படித்தாய்ந்து காணத்தக்கது.  சைவசமூகம் அதனை மறப்பது நன்றி கொன்ற லாகும்.  மெய்கண்டார் காலத்துத் தமிழ்நாட்டில் வடமொழிப் பயிற்சிகுன்றத் தொடங்கிவிட்டது.  ஆதலின் ஈண்டு (தமிழ் நாட்டில்) உள்ளார் உய்தற் பொருட்டுச் சிவஞான போதத் தமிழ்ப் பெயர்ப்பும் வார்த்திகப்பொழிப்பும் (மெய்கண்டான் நூல்) வேண்டப்படுவனவாயின.

19. "தாம் அருளிய 'இருபா இருபது' என்ற சாத்திரத்திலும், மெய்கண்டாரைச் சிவமாகவே புகழ்கின்றாரே தவிர, மொழிப்பெயர்ப்பாளர் என்று எண்ணவேயில்லை" என்றார் அச்சுவடியார்.

சிவமாகவே புகழ்ந்தது சரியா? தவறா? சரியென்றால், 'என்மனார்புலவர்' என ('அளவை நூல் உணர்ந்த உலகத்து மக்கள்மேல் வைத்துக் கூறுவது பெருந்தவறு' 9) என்ற அச்சுவடியார்க்கு மெய்கண்டாரைச் சிவமாகவே அருணந்தியார் புகழ்ந்தது எப்படிப் பிடித்தது? தவறென்றால், சிவமாகாமல் பசுவாகவே யிருந்த மெய்கண்டாரைச் சிவமாக அருணந்தியார் புகழ்ந்தது எப்படிப் பிடித்தது? சொல்லும் பொருளுஞ் சேர்ந்ததே நூல்.  பெயர்ப்புக்களில் சொல் பெயர்ப்பாசிரியருடையதும், பொருள் மாத்திரம் நூலாசிரியருடையதுமாகும். சிவ முதல் நூலை சிவமல்லாதவர் மொழிபெயர்த்தால் அம்மொழி பசுவாக்காகி அதற்கேற்பவே அந்நூற்பொருளிலும் தவறுகள் புகும்.  சிவஞானபோத விஷயத்தில் முதல் நூல் சிவவாக்கும், பெயர்ப்பு நூல் சிவமேயான மெய்கண்டார் வாக்கு மாபின.  ஆகலின் அவ்விருநூற்பொருளிலும் முரண் சிறிது மிருக்க முடியாது பெயர்ப்பில் தமிழன் ரஸனையும் விட்டுப்போகாது.  முதல் நூலிற்போலவே அதனிலும் அவ்வினிமையிருக்கும்.  ஆகவே வடமொழிச் சிவஞானபோதத்தைத் தமிழில் மொழிபெயர்க்கச் சிவமேயான மெய்கண்டாரொருவரே முற்றிலுந் தகுதிபெற்றவ ரென்க. அச்சுவடியார் போன்றவர் எவ்வளவு மேதைகளாயினும் முக்குணவசத்தராகலின் அம்மொழி பெயர்ப்பைச் செய்யச் சிறிதும் அருகதை யுடையவ ரல்லர்.

20. 'இந்த சாத்திரத்தில், பலவினாக்களை விண்ணப்பம் செய்யும் இடத்தில், வடமொழி சூத்திரங்களுக்கும் மெய்கண்டார் சூத்திரங்களுக்கும் உள்ள வேறுபாடுகளில் ஒன்றையேனும் பற்றி ஒரு வினாவிலேனும் எழுப்பவேயில்லை' என்றார் அச்சுவடியார்.

வடமொழிச் சூத்திரங்கள் சிவ வாக்கு மெய்கண்டார் சிவமே யானவர் அவரது பெயர்ப்புத் தமிழ்ச்சிவஞானபோத சூத்திரங்கள்.  அங்ஙனமாக அவ்விரு மொழிச் சூத்திரங்களிலும் வடமொழி தமிழ் என்ற மொழி வேறுபாடன்றிப் பொருள் வேறுபாடு ஒன்றுதானுமிருக்க முடியுமா? வேறுபாடு ஒன்றையேனும் அருணந்தியார் எழுப்பாமையால் வேறுபாடு ஒன்றேனு மில்லை யென்பதே தேற்றம்.  அச்சுவடியார் குருவுக்கு மிஞ்சின சீடன் என்பது போல் அவ்வருணந்தியாரை விடப் பெருமேதை போலும்.  அதனாற்றான் வேறுபாடுகளே அவர் கண்ணுக்குத் தோன்றலாயின.

21.  'குருமரபு கூறும் இடத்திலும் (சித்தியார் பரபக்கம் பாயிரம் 10) வடமொழி சூத்திரங்களும் மொழிபெயர்ப்புச் செய்தியும் கூறப்படவே யில்லை' என்றார் அச்சுவடியார்.

கூறப்பட்டேயிருக்கிறது.

22. "முன்நாள் இறைவன் அருள்நந்தி தனக்கியம்ப நந்திகோதில் அருட்சனற் குமாரற்குக் கூறக், குவலயத்தில் அவ்வழி எம் குருநாதன் கொண்டு, தீதசல எமக்களித்த ஞான நூலைத் தேர்ந்து' என்ற சொற்றொடரை ஆராயும் இடத்து, மெய்கண்டார் கொண்டது வழி என்றும், கொடுத்தது நூல் என்றும் தெளிவாகப் புலப்படும்" என்றார் அச்சுவடியார்.

இதுவே அப்பாயிரம் 10 ஆம் பாடலின் பிற்பகுதி.  'போதமிகுத்தோர்' என்று தொடங்கும் பாடல் அது.  'போதமிகுத்தோ' ராவார் சாம்ஸித்தர்.  அவர் ஸம்ஸித்தி யடைந்தவர்.  'பேதைமைக்கே பொருந்தினோ' ராவார் பிராகிருதர்.  அவர் உலக வாழ்வே பொருளெனக் கொண்டவர்.  இவ்விரு வகையார்க்கும் நூல் வேண்டாம்.  'கதிப்பாற் செல்ல ஏதுநெறியெனு மலர்க' ளாவார் வைநயிகர்.  'முத்திவழிச் செல்லுதலுக்கு யாது வழியென் றராயுஞ் சத்திநிபாதர்' என்றார் உரைகாரர்.  அவர்க்கே நூல் வேண்டப்படும்.  அது 'பண்டைநற் றவத்தால்' எனத் தொடங்கும் பாடலாலும் அறியப்படும்.  'போதமிகுத்தோர்' எனத் தொடங்கும் பாடலிலுள்ள 'இயம்ப', 'கூற', 'கொண்டு', 'அளித்த' என்பவற்றிற்கு 'ஞான நூல்' என்பதே செயப்படு பொருள். 'அறிய' என்ற வினையெச்சம் இயம்ப, கூற, கொண்டு, அளித்த என்ற எச்சங்களிலுள்ள வினை கொண்டு முடிந்தது.  கொடுப்பாரின்றிக் கொள்வா ரில்லை.  கொடுக்கப்பட்டதும் கொள்ளப்பட்டதும் ஞான நூலே.  வழியாவது கயிலையிலிருந்து குவலயத்திலுள்ள தமிழ் நாட்டிற்கு வந்த வழி.  அதாவது அந்த ஞான நூல் அகச் சந்தானத்தினிடமிருந்து புறச்சந்தானத்துக்கு வந்த வழி.  அந்நூல் அகச்சந்தானத்தினிடம் வடமொழியி லிருந்து புறச்சந்தானத்து முதலாசிரியருக்கு வந்தது.  அதனை அம்முதலாசிரியர் தமிழில் மொழிபெயர்த்து வார்த்திகப்பொழிப்போடு அருணந்தியார்க்கு இறக்க அவ்வழி மற்றை யிருவர்க்கும் ஒருவர்பின் ஒருவராக அம்மெய்கண்டான் நூல் இறங்கலாயிற்று.

23. 'மெய்கண்டார் வடமொழி சூத்திரங்களைப் பெற்றது உண்மையானால், அவ்வழி என்னாமல் அம்மொழி என்று கூறியிருப்பார்' என்றார் அச்சுவடியார்.

சொல்லும் பொருளும் பேதாபேதமென்பர் ஒரு சாரார்.  ஆயினும் மொழிவேறு அதனை அச்சுவடியார் அறிந்திலர்.  உபதேசத்துக் குரியது பொருளே, மொழியன்று.  ஆகலின் அப்பாடலில் அம்மொழி யென்றிருக்குமானால் அது தவறேயாம்.  அவ்வழி யென்பதற்கு 22 இல் பொருள் கூறப்பட்டது.

24.  'மேற்கூறிய பத்து (14-23) காரணங்களில் இருந்து, ரெளரவ ஆகமத்திலுள்ள பன்னிரண்டு சூத்திரங்களும், அவைகளை மெய்கண்டார் மொழிபெயர்த்தார் என்ற வரலாறும், அருணந்தி சிவாசாரியார் காலத்தில் இல்லவே யில்லை என்று துணிந்து கூறலாம்' என்றார் அச்சுவடியார்.

நடுவர் அப்பத்துக் காரணங்களையும் அவற்றின் அடியில் வந்துள்ள மறுப்புக்களையும் சேரவைத்து ஆராய்க.  ஆராய்ந்தால் வடமொழிச் சிவஞானபோதப் பன்னிரண்டு சூத்திரங்களும் ரெளரவாகமப் பகுதியாய் என்றும் உள்ளனவே.  அவற்றை மெய்கண்டார் தமிழில் மொழி பெயர்க்கவே செய்தார் என்பது நன்கு துணியப்பட்ட வுண்மை யாகும் எனக்காண்பர்.

25. 'இவ்வரலாறு அவர் காலத்தில் இருந்திருப்பின் இதைத் தழுவியேனும் அல்லது மறுத்தேனும், தெளிவாக ஒரு சொல்லேனும் அவர் அருளியிருப்பார்' என்றார் அச்சுவடியார்.

இவ்வரலாறாவது மொழிபெயர்ப்பு வரலாறு.  மெய்கண்டார் மொழிபெயர்த்து வார்த்திகமுஞ் செய்து அருணந்தியாரிடங் கொடுத்தார்.  அஃது அவ்வருணந்தியாரொருவருக்கே தெரிந்திருக்கும். கூடுமாயின் இன்னுஞ் சில மாணவருக்குந் தெரிந்திருக்கலாம்.  அஃது அக்கூட்டமல்லாத மற்றைச் சைவத் தமிழருக்கு அப்போது தெரிந்திருக்க முடியாது.  அவ்வருணந்தியாரும், மற்றை மாணாக்கரும் பிரஸ்தாபித்த பிறகுதான் அது பலருக்குந் தெரியவரும்.  மேலும் அச்சாத்திர ஞானம் சாமானியருக்கு உபதேசிக்கப்படுவதன்று.  ஆகலின் இவ்வரலாறு அவர் (மெய்கண்டார்) காலத்தில் இருந்திருப்பின்' என அச்சுவடியார் பேசுவதில் அர்த்தமில்லை.  'மறுத்தேனும் தெளிவாக ஒரு சொல்லேனும் அவர் அருளியிருப்பார்' என்றாரவர்.  அதனால் தமிழ்ச்சிவஞான போதம் மொழிபெயர்ப்பு என்ற வரலாற்றை அருணந்தியார் மறுக்கவில்லை என்றாயிற்று.   தழுவினாரென்பது மேலே (22, 23இல்) காட்டவும் பட்டது.  மறுக்கவு மில்லை, தழுவவுமில்லை யென்றால் மொழி பெயர்ப்புக் கொள்கை அருணந்தியாரின் உதாசீனத்துக் குரியதாயிற் றெனவே அச்சுவடியார் கொள்ள வேண்டும்.  அதனை விட்டு மொழிபெயர்ப்புக் கொள்கையை அருணந்தியார் உடன்படவேயில்லை யென அச்சுவடியார் எப்படிச் சாதித்தார்? அதனால் அவர் எடுத்த செப்பென்னை? அஃது அவ்வாசாரியரின் திருவுள்ளத்துக்கு மாறான முனைப்பு மாகும்.

26. 'மெய்கண்டாருடைய மாணாக்கருள் மற்றொருவர் ஆகிய திருவதிகை மனவாசகம் கடந்தாரும், தாம் அருளிய உண்மை விளக்கம் என்ற சாத்திரத்தில் இந்த வரலாற்றைக் கூறவே யில்லை' என்றார் அச்சுவடியார்.

'தொன்மைய வாம்' என்று தொடங்கும் சிவப்பிரகாச அவையடக்கப் பாடலை அச்சுவடியார் ஊன்றிப் படித்திருப்பாரானால் தம் சுவடியையே செய்திருக்க மாட்டார்.  எந்த நூலும் பழைமையானது என்ற காரணத்தால் நல்லதாய் விடாது.  நேற்றை நூல்தானே யென்று தள்ளி விடத் தக்கதுமன்று நூலிலுள்ள சொற்கள் இனியவாயினும் பொருளைவிட முக்கியமல்ல.  பொருளாவது பதி பசுபாசங்களின் உண்மை விளக்கம்.  நூல் என்ற மாத்திரத்தில் அது தொன்மையதானா லென்ன புதியதானா லென்ன என்றல்போல் அது தமிழானாலென்ன? ஆரியமானா லென்ன? ஆங்கிலமானாலென்ன? வேறெம்மொழியானாற்றா லென்ன? பதிபசு பாசம் பற்றிப் பேசாத சுவடிதமிழா யிருப்பினும் அது தமிழா யிருப்பதொன்றே பற்றி அதனைப் போற்றற்க வென்பது அவ்வுமாபதி சிவனார் சைவ சமயிகளுக்கு இட்ட ஆணை.  அச்சுவடியாரும் சைவராயின் அன்ன ஆசிரியன்மாருக்கு அடங்கவே வேண்டும்.

வார்த்திகப் பொழிப்புத் தமிழ்ச் சிவஞான போத சூத்திரங்களுக்கே யிருந்தது.  சித்தி முதலிய வழி நூல் சார்பு நூல்களுக்கு அப்பொழிப்புரையும் பேருபகாரமாயிற்று.  நூல் மரபு கூறும் பாடலில் வடமொழிச் சூத்திரங்கள் விடப்பட்டதற்கு அன்னதொரு பொழிப்பு அச்சூத்திரங்களுக்கு இல்லாமையே காரணம்.  ஆனால் அச்சூத்திரங்கள் அவ்வுமாபதி சிவனாரின் காலத்திலில்லாமையே காரணம் என்றார் அச்சுவடியார்.  தம் புதுக் கொள்கையில் அவர் கொண்ட மோகத்தாலேயே அப்படிச் சொன்னார்.

'செப்பினர்' என்பதை முதல் நூலாகச் செப்பினரென்றுதான் கொள்ள வேண்டுமா? மொழி பெயர்த்துச் செப்பினரெனக் கொள்ளக்கூடாதா?

30.  மேலே கூறிய செய்யுளில் சிவஞான போதத்தையும் சிவஞான சித்தியையும் 'விரும்பி நோக்கிக் கருத்தில் உறை திருவருளும் இறைவன் நூலும் கலந்து' என்னும் இடத்தில், பொதுவாகச் சிவாகமங்களை கூறுகின்றாரே தவிர, ரெளரவ ஆகம சூத்திரங்களைக் குறிக்கவே யில்லை.  குறிக்காமல் விட்டதற்குத் தகுந்த காரணம் ஒன்றுமே இல்லை" என்றார் அச்சுவடியார்.

இறைவன் நூல் - ஸ்ரீ கண்டருத்திரர் தந்த சிவஞானபோதம்.  அம்முதல் நூல் மெய்கண்டான் நூல், சிவஞான சித்தி என்னும் மூன்று நூற் பொருளையுந் தெளிந்து சிவபெருமான் திருவருளையுந்தங் கருத்தில் நிறைத்துத் தம் புடைநூலை உமாபதி சிவனார் ஆக்கியருளினார்.  இறைவன் நூல் என்பது பொதுவாகச் சிவாகமங்களையே குறிப்பதானால் கருத்திலுறை திருவருளும் பொதுவான திருவருளாகவே யிருக்க முடியும்.  பொதுவென்ற சொல்லைத் 'திருவருள்' என்ற சொல்லுக்கு முன்னும் அச்சுவடியார் போட வேண்டும்.  அஃதாவது அச்சுவடியார் போல்வார் கருத்திலும் எம்போல்வார் கருத்திலும் இருக்கு மளவிற்கே உமாபதிசிவனார் கருத்திலும் அத்திருவருள் இருந்திருக்கும்.  அதனால் உமாபதி சிவனார் கருத்துக்கு விசேட மொன்றுமில்லை.  நூலுக்கு முன் பொதுவான என்ற சொல்லை அச்சுவடியார் போட்டது சிறிதும் பொருந்தாது, அவ்வுமாபதிசிவனாரைக் குறை பேசினதுமாகும்.

31, 32, 33 'மெய்கண்டார் காலத்திற்கு ஏறக்குறைய இருநூறு ஆண்டுகள் முன்பிருந்த திரிலோசன சிவாசாரியார், சித்தாந்த சாராவளி என்ற தமது வடமொழி நூலில், இந்தப் பன்னிரண்டு சூத்திரங்களில் ஒன்றையேனும், இவற்றை ஸ்ரீகண்டருத்திரர் நந்தி தேவருக்கு அருளிய வரலாற்றையேனும் கூறவே இல்லை.

"தமது நூலில் சரியாபாதத்தில் முன்றாவது நான்காவது சுலோகங்களில் ஆகமங்களின் வகை, பெயர், வரலாறு முதலியன கூறும் இடத்தில், ரெளரவ ஆகமத்தின் பெயர் கூறப்படுகின்றதே தவிர இந்த சூத்திரங்கள் பன்னிரண்டும் அதில் உள்ளன என்ற செய்தியோ, அவைகளை நந்தி தேவர் பெற்றார் என்ற வரலாறே கூறப்படவில்லை.  சகல ஆகமங்களின் சாரமாக, நந்தி தேவருடைய மலைவு தீர்தற்பொருட்டு இச்சூத்திரங்கள் அருளப் பெற்றிருப்பின், இவர் இச் செய்திகளைக் கூறாமல் விடுதற்கு நியாயமில்லை;

இச்சூத்திரங்களும் இவற்றின் வரலாறும் இவர் காலத்தில் இருந்திருப்பின் சித்தாந்தத்தின் சாரத்தைப் பிழிந்து, சித்தாந்த சாராவளி என்றே பெயரிட்ட தமது நூலில், சித்தாந்த சாரமாகிய இப் பன்னிரு வடமொழி சூத்திரங்களை மிக விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்து ஆண்டிருப்பார்' என்றார் அச்சுவடியார்.

ஆமர்த்தகம் 'புஷ்பகிரி, கோளகீ, ரணபத்திரம் என ஆதி சைவ மடங்கள் நான்கு.  கோதாவிரி தீர்த்தில் மந்திரகாளி யென்னும் பட்டணத்தில் அந்நான்கு மடங்களும் இருந்தன.  அவற்றுள் ஆமர்த்தக மடத்துக் கதிபதி ஸநத்குமாரர்.  அம்மடத்தில் வியாபகசம்பு வென்னும் மஹா குருவானர் உளரானார்.  அவர் பரம்பரையில் வந்தவர் திரிலோசன சிவாசாரியார் எனத் தெரிகிறது.  அவரே சித்தாந்த சாராவளி யென்னும் நூலுக்காசிரியர் வேறு மடத் தவராகிய அவர் கயிலாய பரம்பரையாகிய துறைசை யாதீன வரலாற்றை அதாவது சிவஞானபோத பரம்பரையைப் பற்றி ஏனோ பேச வேண்டும்? அந்தந்த மடத்து வரலாற்றை அந்தந்த மடத்துப் பரம்பரையினரிடமிருந்துதான் தெரிந்துகொள்ள வேண்டும்.  அதுவே தெரிந்து கொள்ளுமுறை.  சித்தாந்த சாராவளியில் ஞானபாதம், கிரியாபாதம், யோகபாதம், சரியாபாதம் என்ற நான்கு பாதங்களின் சாரமும் சொல்லப்பட்டது.  ஞான பாதத்தை மாத்திரம் சொல்ல வந்த நூலன்று அது.  அதன் உள்ளுறை தெரிந்திலர் அச் சுவடியார்.  சித்தாந்த சாரமாகிய இப் பன்னிரு வடமொழி சூத்திரங்களை என்றாரவர்.  அச்சூத்திரங்கள் சித்தாந்த சாரம் பேச வரவில்லை, சித்தாந்த நிர்ணயம் பண்ண வந்தன. சாரம் வேறு நிர்ணயம் வேறு.  அந்நிர்ணயத்தை மிக விரிவாகவும் விளக்கமாகவும்' எடுத்துப் பேசுவது சிவாக்கிர பாஷ்யம்.  அப்படியே நாலு பாதத்தையும் சித்தாந்த சாராவளி எடுத்துப் பேசவில்லை யென்கிறார் அச்சுவடியார்.  நூலில் இருப்பதைப் படித்து ஆராய்வதே அவருக்கு அடுப்பது.

'சரியாபாதத்தில் மூன்றாவது நான்காவது சுலோகங்களில் ஆகமங்களின் வகை.  பெயர் வரலாறு முதலிய கூறும் இடத்தில்' என்றார் அச்சுவடியார்.  வரலாறு கூறவே யில்லை.  எல்லா ஆகமங்களின் பெயர் கூறப்பட்டது.  அப்படியே ரெளரவத்தின் பெயருங் கூறப்பட்டது.

34.  'அஷ்ட பிரகரணங்களுள் ஒன்றாகிய தத்துவ சங்கிரகம் என்ற நூலை இயற்றிய சத்தியோஜோதி சிவாசாரியார் என்பவர், ரெளரவ ஆகமத்திற்கு எழுதிய சுவிருத்தி என்ற உரையில், இப்பன்னிரு சூத்திரங்களேனும் இவற்றின் உரையேனும் காணப்படவில்லை' என்றார் அச்சுவடியார்.

சைவத்தமிழர் அநேகமாக வடமொழிக் கண்ணையிழந்தனர், வடமொழிப் பகைமையே பற்றி அம்மொழியிலுள்ள எத்தனையோ சிறந்த சித்தாந்த சைவ நூற்களை வெறுத்தனர்; உதாசீனஞ் செய்தனர், தன்கையாயுதமும் தன்கைப் பொருளும் பிறன்கையிற் கொடுத்த பேதையும் பதரே' என்பது போலாயினர்.  சுவிருத்தியில் அச்சூத்திரங்கள் காணப்படவில்லையானால் அவை அந்நிய சமயத்தாரால் நீக்கப்பட்டிருக்கும் சைவப் பகுதிகள் அந்நிய சமயத்தாரால் நீக்கப்பட்டிருப்பதை இராமாயண பாரதாதிகளில் இன்றும் அச்சுவடியார் காணலாம்.

35. அகோர சிவாசாரியார் (கி.பி. 15-ம் நூற்றாண்டு) தமது நூல்களிலும் உரைகளிலும் ரெளரவ ஆகமப் பகுதிகள் பலவற்றை மேற்கோள் காட்டினும், இப்பன்னிரு சூத்திரங்களுள் ஒன்றையேனும் காட்டவேயில்லை' என்றார் அச்சுவடியார்.

அகோரசிவாசாரியார் பெரிய உரையாசிரியர், ஆகலின் வேண்டுமிடங்களில் பொருத்தமான மேற் கோள்களையே யெடுத்துக் காட்டுவர்.  அச்சுவடியார் கொள்கையை எதிர்பார்த்து அதற்கு ஆதாரமாகவுமிருக்கட்டும் எனக் கருதிச் சம்பந்தமில்லாத வற்றையும் தம் நூலுரைகளில் மேற்கோள்களாக எடுத்துக் காட்டமாட்டார்.

36. 'நாராயண கண்டர் பட்டராமகண்டர் முதலிய பல பெரியார்களும், தங்கள் நூலிகளிலும் உரை களிலும் இச்சூத்திரங்களில் ஒன்றையேனும் எடுத்தாளவில்லை' என்றார் அச்சுவடியார்.

எடுத்தாளாம லிருந்தால் அவர்களும் அகோர சிவாசாரியார் போன்றவரே.

37. சைவத்திற்குப் பெரிதும் தொண்டுபுரிந்த ஹரதத்தாசாரியார் இச்சூத்திரங்களை மேற்கோளாகக் காட்டவில்லை என்றார் அச்சுவடியார்.

ஹரதத்தாசாரியர் சிவஞானபோத சூத்திரங்களை அச்சுவடியாருக்காக மேற்கோளாக எடுக்கும் பொருட்டு நூற்கள் எழுதவில்லை.

38, 39, 40, 41, 42 'ஆகமங்களைப் போற்றி நிரம்பவும் ஆதரித் தெழுதிய நீலகண்ட சிவாச்சாரியார் தமது பாஷ்யத்தில் இச் சூத்திரங்களைக் குறிக்கவில்லை'

'அப்பைய தீக்ஷிதர், நீலகண்ட தீக்ஷிதர் முதலியோரும் குறிக்கவில்லை';

'ஆதி சங்கராசாரியார் தக்ஷினாமூர்த்தி ஸ்தோத்திரத்திலேனும், பாஷ்யத்திலேனும் பிற நூல்களிலேனும் இச்சூத்திரங்களையும் வரலாற்றையும் பற்றி ஒன்றும் குறிக்கவில்லை';

'மாதவாசாரியார் தாம் இயற்றிய சர்வதரிசன சங்கிரகத்திலேனும், பிற நூல்களிலேனும் இவைகளைப்பற்றி ஒன்றும் கூறவில்லை';

கி.பி.1400ல் இருந்தவராகக் கூறப்படும் ஸ்ரீபதி பண்டிதாசாரியார் தமது ஸ்ரீகரபாஷ்யத்தில், பல ஆகமவாக்கியங்களை மேற்கோள்களாகக் காட்டிய போதிலும், இச்சூத்திரங்கள் பன்னிரண்டினுள் ஒன்றையேனும் காட்டவில்லை' என்றார் அச்சுவடியார்.

நீலகண்ட சிவாசாரியார், அப்பைய தீக்ஷிதர், நீலகண்ட தீக்ஷிதர், ஆதி சங்கரர், மாதவாசாரியார், ஸ்ரீபதிபண்டிதாசாரியார் ஆகியோரும் தாம் எழுதிய நூலுரைகளில் சம்பந்தமில்லாத மேற்கோளையோ வரலாற்றை யோ எடுத்துக் காட்டமாட்டார்.  அவர்மாத்திர மென்ன? ரெளரவ சிவஞானபோத சூத்திரங்களை எடுத்தாளாத ஆசிரியன்மார் வடமொழியில் நூறு நூறாயிருப்பர் அவர் நூற்களை எடுத்துக்காட்டி அவற்றில் இல்லை இல்லையென இல்லைப் பாட்டுப் பாடுவதில் அச்சுவடியார் முதல்வரானார் அதற்குக் காரணமுண்டு என்னை? அவரது கற்பனைக் கொள்கைக்குத் தமிழச்சை வாசிரியன்மா ரனைவரும் எதிரானவர்.  அதனால் வெறும் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டும், காலம் சூழ்நிலைகளுக்கு இரையாகியும், பதிஞானமின்றிப் பசுஞான பாசஞான முனைப்போடு ஒருவர் பின் ஒருவராய்க் குரு பரம்பரையென வொன்றை வைத்துக்கொண்டும் இல்லாத பலவற்றை உள்ளன போலக் காட்டித் தம் நூற்களில் அவர் எழுதி வைத்திருக்கின்றனர் என்றார் அச்சுவடியார் அவற்றைக் குலைத்து விடவேண்டும்; அதற்கு வழி அவ் வடமொழி யாசிரியரெல்லாம் அவ்வடமொழிச் சூத்திரங்களைத் தம் நூற்களிற் பிரஸ்தாபிக்கவில்லை யெனக் காட்டுவதொன்றுதான் என்பது அவரது முடிவு.  அவர் தமிழராயிருக்கலாம்.  ஆனாற் சைவ சமய பரம்பரையினரா யிருப்பரா என்பதை நடுவர்தான் யோசித்துக் கூறவேண்டும்.  மெய்கண்டாரது மொழிபெயர்ப்பைத் தவறானதென்பர் மாயாவாதியர்.  அவரும் வடமொழிச் சூத்திரங்களை ரெளரவாகமத்தில் இல்லையென மறுத்துரையார்.  அவரெழுதிய 'முதற்குறள் வாத நிராகரண சததூஷணி' முதலிய மறுப்பு நூற்களைக் காண்க.  ரெளரவ சிவஞான போத சூத்திரங்களுக்கு உரையொன்று வடமொழியில் வித்யாரண்யரால் அவர் மதச் சார்பாக எழுதப்பட்டுள்ளது என்ற செய்தியை அச்சுவடியார் தெரிவாரோ? மாட்டாரோ?

42ஐ அடுத்து 'எனவே' எனத் தொடங்குந் தனிப் பாராவில் 'மெய்கண்டார்....காலத்திற்குப் பின் சுமார் 200 ஆண்டுகள் வரையில், இவ்வடமொழிச் சூத்திரங்கள் பன்னிரண்டும் இவை வந்த வரலாறும், இவைகளை மெய்கண்டார் தமிழில் மொழிபெயர்த்தார் என்ற வரலாறும், எந்த நூலிலும், எந்த ஆசிரியர் ஆட்சியிலும் காணப்படவில்லை.  இனி, இவை தோன்றிய வகையைக் கவனிப்போம்.  கி.பி. 1400க்குப் பிறகு 'கர்ண பரம்பரை' என்ற இடத்தில் கருவுற்று, நூல்களில் கொஞ்சம் கொஞ்சமாகத் தலைகாட்டி ஏறக்குறைய ஒரு நூற்றாண்டிற்குள் மெய்ப்பாடு நிரம்பிய பல விவரங்களோடு (Full and graphic details) முழு உருப் பெற்றது என்று கூறலாம்' என்றார் அச்சுவடியார்.  அதனையும் பார்க்கலாம்.

43. 'உமாபதி சிவாசாரியார் அருளிய சிவப்பிரகாசத்திற்கு மதுரைச் சிவப்பிரகாசத் தம்பிரான் ஓர் உரை யெழுதி.....(கி.பி.1487ல்) வெளியிட்டனர்.  இவ்வுரையில் தான், யாம் அறிந்த மட்டில், இவ்வரலாறு சுருக்கமாக முதன் முதலில் தலை காட்டிற்று' என்றார் அச்சுவடியார்.

கி.பி. 1400க்குப் பிறகு கருவுற்ற சிசு கி.பி.1497 வரையுள்ள 87 வருஷங்களாகக் கருவில் வளர்ந்து 1487 இல் தான் தம்பிரானுரையில் தலைக்காட்டி வரலாறாக வெளிப்பட்டது.  அதுவரை 'நூல்களில்கொஞ்சம் கொஞ்சமாகத் தலைகாட்டி ஏறக்குறைய ஒரு நூற்றாண்டிற்குள்' என்றார் அவர்.  அந்த நூற்கள் எவை? அவர் ஒரு நூலையுங் காட்டவில்லை.  87 வருஷமாய் எந்தெந்த நூலில் கொஞ்சங் கொஞ்சமாக அக்கரு வளர்ந்தது என்பதற்குச் சான்று காட்ட மாட்டாத அவர் கருக்கொண்டதை எப்படிக் கண்டார்?

தம்பிரான் தம் உரையில் காட்டிய வரலாற்றில் கூர்ந்து கவனிக்க வேண்டியவையென 7 விஷயங்கள் சொன்னார் அச்சுவடியார்.  அவற்றை அச்சுவடியிற் காண்க.  அவை பசையற்றனவென்பது இங்கே காட்டப்படுகிறது.

1) ஸ்ரீகண்ட பரமேசுவரன் ஞான காண்டமாகிய பதிபசு பாசத்தின் உண்மையை நந்திதேவருக்குக் கடாக்ஷித்தருள, நந்திதேவர் அவ்வுபதேசத்தின் பயனா யிருக்கப்பட்ட சிவஞான போத மூலக்கிரந்தம் பன்னிரண்டையும் ______________________________________  _____________________________________________ ஒருவருக்குக் கடாக்ஷித்தருள எனக் கடாக்ஷித்தருள என்பது ஆறு முறை ஒரே பொருளில் வருகிறது.  அருளிச் செய்தார் என்றேனும் கொடுத்தார் என்றேனும் கூறப்படவில்லை யென்றார் அச்சுவடியார்.  கடாக்ஷித்தருள என்பதற்கு அருளிச் செய்ய அல்லது கொடுக்க எனப் பொருள் சொல்லப்படாதா? நன்றாகச் சொல்லலாம்.  கடாக்ஷித்தருளினார் என்பதற்கு உபதேசித்தாரெனப் பொருள் கொண்டாலும் நூலைக் கொடுத்தே உபதேசித்தாரென்பதுதான் சைவ சித்தாந்த வுண்மை.  மெய்கண்டார் அருணந்தியார்க்குச் சிவஞான போதம் என்னும் நூலைக் கொடாமலா கடாக்ஷித்தருளினார்? சிவாகமங்களுக்குச் சதாசிவ மூர்த்தியே முதலாசிரியர், ஸ்ரீகண்ட ருத்திரரல்லர்.

2) அத்தியாயம், படலம், பக்கம் முதலியவற்றை ஸ்ரீகண்டமுதல்வர் சொல்லவில்லை யென்றால் அவர் நூலையே உபதேசிக்க வில்லை யென்றாகாது.  நூலிற் பயிற்தியுள்ளவர் நூலைப்பார்த்து அவற்றை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.  நந்திதேவர் கடைமாணாக்கரல்லர்.

3) பதிபசு பாசத்தின் உண்மையை என்றில்லாமல் 'முன்னூலாகிய சிவாகமத்தில் ஞானகாண்டமா யிருக்கப்பட்ட பதிபசு பாசத்தின் உண்மையை' என்றே தம்பிரான் காட்டிய வரலாற்றில் இருக்கிறது.  ஞானகாண்டம் என்ற மாத்திரத்தில் அது நூலேயாகும்.  மூலக்கிரந்தம் பன்னிரண்டு என்றதால் அது மொழிபெயர்ப்பு அன்று என்பது தெரிக.

4) நாவலர் பதிப்புக் கந்தபுராண முதற் புத்தகத்துச் சிவபுராண படன விதி என்ற அவரது வசனப் பகுதியில் 'இவற்றுள், சைவ புராணம் இருபத்து நாலாயிரயிரங் கிரந்தமும், பவிடிய புராணம் முப்பத்தோராயிரங் கிரந்தமும்,...' எனப் பதினெண் புராணங்களுக்குங் கிரந்தக் கணக்குச் சொல்லியுள்ளார்.  ஆண்டுக் கிரந்தம் என்றால் அர்த்தம் என்ன? அது வேறு.  சுலோகம் வேறா? 'முப்பத்திரண்டு எழுத்துக்களின் தொகுதியைக் கிரந்தம் என்பது வடமொழி வழக்கு', 'வடமொழியில் இந்தச் சூத்திரங்கள் எனப்படும் சுலோகங்கள் பன்னிரண்டும் அனுஷ்டுப் சந்தசில் (32 எழுத்துக்கள் கொண்டனவாக) யாக்கப் பெற்றமைக்கும்......'(55) என அச்சுவடியாரே விளக்கந் தந்தார்.  ஆகவே கிரந்தம், சுலோகம், சூத்திரம் என்பன தனித்தனி 32 எழுத்துக்களால் ஆக்கப்பட்ட செய்யுள் வகை யெனத் தெரிகிறது.

அங்ஙனமாகத் தம்பிரான் 'மூலக்கிரந்தம்' என்று கூறியதில்  'சாதுரியம்' என்ன இருக்கிறது? (5) அப்படியே 'அந்த மூலக்கிரந்தம் பன்னிரண்டின் வழியே பன்னிரண்டு சூத்திரமாக வகுத்து' என்ற தம்பிரானது மற்றைக் கூற்றிலும் சாதுரியம் எதுவுமில்லை.  (6) 'வழியே', 'வகுத்து' என்பவற்றுக்கும் மொழி பெயர்த்து என்பதே காவற்ற பொருள்.  அச்சுவடியாரைவிடத் தம்பிரானும் பன்மடங்கு தமிழ்ப் பற்றுடைய தமிழரேயாவர்.  (7) 'மெய்கண்டார் வகுத்ததற்கே சூத்திரம் என்ற பெயர் தரப்பட்டுள்ளது' என அவ்வாக்கியத்தைச் செயப்பாட்டுவினையில் முடித்தார் அச்சுவடியார்.  அப்பெயரைத் தந்தவர் யார்? அவரைச் சொல்ல அச்சுவடியார்க்கு அச்சம் போலும்.

சிவாக்கிர யோகிகளுக்கு 100 வருஷத்துக்கு முந்தியவர் மதுரைச் சிவப்பிரகாசர் என்றார் அச்சுவடியார்.  அவ் யோகிகளால் தமிழ்ச் சிவஞான போதம் வடமொழியில் பெயர்த்து இரெளரவாகமப் பகுதியாய் நுழைக்கப்பட்டது (52) என்பதும் அவர் சொன்னது தான்.  அதனால் அச்சிவப்பிரகாசரின் காலத்தில் அவ்வடமொழிச் சிவஞான போதம் அவ்வாகமத்திலில்லை என்பது தெரிகிறது.  ஆனால் தமிழ்ச் சிவஞான போதத்துக்கு வடமொழியில் சிற்றுரையும் பாஷ்யமும் செய்யென்ற குரு கட்டளையை நிறைவேற்றத் தமிழ்ச் சிவஞான போதத்தை வடமொழியில் பெயர்த்து இரெளரவாகமத்தில் செருக வேண்டிய நிர்ப்பந்தம் அவ் யோகிகளுக்கு உண்டாயிற்று.  அந்நிர்ப்பந்தம் அவ் யோகிகளுக்கு அந்நுழைப்பு விஷயத்தில் ஹேதுவாகலாம்.  ஆனால் அச் சிவப் பிரகாசர்' ....சிவாகமத்தில் ஞானகாண்டமாயிருக்கப்பட்ட....மூலக்கிரந்தம் பன்னிரண்டின் வழியே பன்னிரண்டு சூத்திரமாக வகுத்து....' எனக் கூறி அச் சூத்திரங்களை அவ்யோகிகள் நுழைப்பதற்கு முந்தியே அவை ஆகமங்களில் இருந்தன வென இல்லதை உள்ளதுபோற் கற்பித்து வரலாறு பேசும் விஷயத்தில் ஹேதுவாக இருந்தது எது? அஃது  அச்சுவடியிற் காணப்படவில்லை.  ஹேதுவாதியன இல்லாமலே மேற்கோளைச் சாதிப்பது என்பது அபத்தம்.  மதுரைச் சிவபிரகாசர் அப்படிப் பேசினவருமல்லர்.  ஆகலின் அவர் காலத்துக்கு முன்பே வடமொழிச் சிவஞான போதம் இரெளரவாகமப் பகுதியா யிருந்த தென்பதே உறுதி இல்லாத வொன்று உருப்பெற்று நிலைத்ததென்பது அசற்காரியவாதம்.

44. "சிவஞான போதத்தின் தொடக்கத்தில் உள்ள 'மலர்தலை உலகில்' என்று தொடங்கும் சிறப்புப் பாயிரத்திலும் 'நந்தி முனிகணத்தளித்த உயா சிவஞான போதம்' என்றே கூறப்பட்டுள்ளது" என்றார் அச்சுவடியார்.

அச்சிறப்புப் பாயிரத்துக்கு ஆசிரியர் யார்அவர் பெயரை அச்சுவடியார் கண்டு சொல்லவில்லை.  சந்தர்ப்பம் போல் அவ்வாசிரியராவார் இவர் அல்லது.  அவர் என யாரையேனுஞ் சொல்லிக்கொள்ளலாம் என்பது அவர் எண்ணம் போலும் அவர் அவ்விஷயத்தைச் சாதுரியமாகவே விட்டிருக்கிறார்.  அச்சிவஞான போதமாவது நூலா? பொருளாநூலெனின்.  அதற்காசிரியர் யார்? அந்நூல் வடமொழியா? தமிழா? பொருளெனின், உபதேசம் எம் மொழியில் நடந்தது? அதற்கு ஆதாரம் என்ன?

45.  'மதுரைச் சிவப்பிரகாசர் காலத்திற்கு நூறாண்டுகள் பிந்தியவர் - - ஆகிய சிவாக்கிர யோகிகள் - - இவ்வரலாற்றில் பல புதிய விஷயங்களைச் சேர்த்தனர்' என்றார் அச்சுவடியார்.  அவற்றைக் காட்டி, அவை புதியனவா என்பதை ஆராயலாம்.

(a) வேதாகமங்களைப் பயில்வதில் பல சந்தேகங்கள் ஏற்படுவதால், அவற்றை நீக்கி மோக்ஷம் அடைவதற்குச் சுருக்கமாக உபதேசிக்க வேண்டும் என்று நந்தி தேவர் ஸ்ரீ கண்டருத்திரரை வேண்டிக் கொள்ளுதல்' என்பது.

கேட்டலுக்குப் பிறகு சிந்தித்தல் நிகழ வேண்டும்.  சிந்தித்தலாவது ஞானத்திற்கிரியை சிந்தித்தலில் பல சந்தேகங்கள் தோன்றலாம்.  மெய்கண்டாரிடம் உபதேசங் கேட்ட அருணந்தி யாருக்குத் தோன்றிய சந்தேகங்களின் தொகுதியே இருபா விருபஃது என்னும் நூல்.  அதனைக் கண்டும் கேட்டலுக்குப்பின் சிந்தித்தலும் அதிற் பல சந்தேகங்கள் எழுதலும் உள என்பதை அச்சுவடியார் அறியாமற் போயினார்.  ஆகலின் அவருக்கு அது புதிய விஷமாயிற்று.

(b) 'தமது சந்தேகங்களை ஐம்பத்தொரு வினாக்களாக அவர் விவரித்தல்' என்பது.

தமிழிலுள்ள இருபா விருபஃது போல் தமக்குத் தோன்றிய சந்தேகங்களைத் திரட்டியுள்ள தொரு நூலை வடமொழியில் நந்திதேவர் செய்யவில்லை யாயினும் ஸ்ரீகண்டருத்திரரிடம் உபதேசங்கேட்ட அவருக்குச் சிந்தித்தலில் பல சந்தேகங்கள் தோன்றியது உண்மையே.  இல்லையென்றால் அவர் சிந்திக்கவில்லையென்பது ஆகும்.  அந்த 51 வினாக்களும் அர்த்த மற்றனவா? சிந்தித்தலில் அவை எழக் கூடியனதானே? அதிற் புதியதொன்று மில்லையே.  அச்சுவடியாருக்காயின் சிவஞானபோதம் தமிழா? வடமொழியா? என்பது போன்ற போது போக்கு விஷயங்களே சந்தேக விஷயங்களாகப் புலப்பட்டுக் கொண்டிருக்கும்.

(c) 'ஸ்ரீகண்ட ருத்திரர் ரெளரவ ஆகமத்தில் பாச விமோசனப் படலத்தில் அநுஷ்டுப்சந்தசில் உள்ள சர்வாகம சாரமாயிருக்கும் பன்னிரண்டு சூத்திரங்களை நந்திதேவருக்கு உபதேசித்தல்' என்பது.

அஃது அச்சுவடியாருக்குப்பிடியாததொன்று.  அகச்சந்தான பரம் பரையே அவருக்குச் சம்மதமன்று.  சிவப்பிரகாசத்திலுள்ள 'தேவர் பிரான்' எனத் தொடங்கும் பாடலை என்ன செய்யலாமென அவர் யோசிப்பதாகத் தெரிகிறது.  குருசந்தான மில்லாதது அவரது சைவம் அவருக்குச் குருசந்தான முள்ள சைவம் புதிய விஷயமாயிற்று.



முற்றிற்று.

ஸ்ரீமத் சிவஞானசுவாமிகள்  திருவடி வாழ்க.




சுபம்



1 comment:

  1. Plz present Tamil prose writing in very easy form your Tamil writing style is so tough confusing one.

    ReplyDelete