Tuesday, October 13, 2015

☞ சைவத்தில் நவராத்திரி விரதம்



சோமவாரம், சுக்கிரவாரம், பிரதோஷம், அமாவாசை, பெளர்ணமி முதலியன மாதந்தோறும் வரும் விரதநாட்கள்.  சிவராத்திரி, நவராத்திரி, கேதாரகௌரி, திருவாதிரை, ஸ்கந்தசஷ்டி, விநாயகசதுர்த்தி முதலியன வருடந்தோறும் வரும் விரததினங்கள்.  உபவாச மிருந்து அவ்விரதங்களை விதிப்படி அனுட்டிக்க வேண்டும்.  அதனால் சைவமக்களிடம் மனிதவியல் நிலைக்கும்; சிவபத்தி வளரும்.  அவை சமயத்துறை பற்றிய இலாபம்.  இலெளகிக இலாபம் வேறு.  என்னை? உபவாசத்தால் சைவர் வீடு ஒவ்வொன்றிலும் உணவிற்காம் பண்டங்களிற் பெரும் பகுதி சேமிக்கப்படும்.  இந்நாட்டிலுள்ள சைவமக்களின் வீடுகளைச் சேரக் கணக்கிடுக.  மிஞ்சும் பண்டம் கொஞ்சமாகவாவிருக்கும்? பணமில்லாச் சைவரும் உபவாசம் இருக்கவேண்டியவரே.  இருந்தால் அவர் உண்ணும் நாட்கள் சுருங்கும்.  அப்பண்டங்களில் மிச்சம், இவ்வுண்ணுநாட்களின் சுருக்கம் ஆகியவற்றை ஓராண்டிற்குச் சேர்த்துக் கணக்குப் பார்க்கவேண்டும்.  நாட்டில் உணவுப்பஞ்சம் எவ்வளவோ குறையும்.  இதுவே இலெளகிக லாபம்.  சைவர் இதைக் கருதுவதில்லை.  உபவாசம் மறைகிறது, பரிகசிக்கப்படுகிறது.  ஒருசைவன் ஒருநாளில் பல தடவைகள் உண்கிறான், ஒவ்வொரு வேளையும் அதிகம் உண்கிறான்.  மனிதவியலுக்கு மாறாக உண்ணத்தகாத வற்றையெல்லாம் உண்கிறான்.  கண்ட விடங்களில் உண்கிறான்.  நாக்கை மகிழ்விக்கவும் வயிற்றை நிரப்பவுமே அவன் பிறந்தான் போலும்உபவாசத்தால் உயிருக்கு உறுதியுண்டு.  தேகமும் சுகமுறும்.  அதைப் பழித்த பாவம் நிர்ப்பந்தமான பட்டினிக்கிடக்கையைக் கொணர்ந்தது.  அதனால் உடலுயிர்களுக்குத் துன்பமே பலன்.  ஆகலின் நாட்டின் நலனைக் கருதியாயினும் சைவர் தம் சமய தருமமாகிய உபவாசத்தை மேற் கொள்வாராக.

இன்னொன்று, சைவத்தில் சமயானுட்டானங்களத்தனையும் உபவாசத்தோடு கூடியவை.  அவற்றில் கொண்டாட்டத்திற்கு சம்பந்தமில்லை.  தீபாவளி, தைப்பொங்கல் என இரண்டு பண்டிகைகளுள.  அவையும் சைவசமூகத்திற் புகுந்தன.  புகத்தொடங்கிய காலந் தெரியவில்லை.  பண்டிகையென்னுஞ் சொல்லுக்குப் பொருள் எதுவோ? அச்சொல் தமிழன்று; சம்ஸ்கிருதமாகவுந் தெரியவில்லை.  தீபாவளி வைணவ சம்பந்தமுடையது; உண்டாடுக் களியாட்டு மிகுந்தது.  சைவர் அதை ஆசரிக்க வேண்டுமா? ஆமென்பதற்குச் சைவநூற் பிரமாணமுண்டா? தைப்பொங்கலுக்கு மகரசங்கிராந்தி யென்று பெயர். அதுவும் உபவாசத்தோடு கூடியதே.  சைவரிடம் தம் சமயக் கற்புக் குலைந்தது.  சமயக் கலவை புகுந்தது. அதன் விளைவே அப்பண்டிகைக் கொண்டாட்டம்.  நான் ஒரு சைவன்.  எனக்கு சமயவழி என் சமயத்தாரிடம் தொடர்புண்டு.  அவரெல்லாம் சைவசமய வரம்பைப் பல்லாற்றானும் போற்றிக் கொள்ள வேண்டும்; அச்சமய ஆசார அனுட்டானபரராக வேண்டும்; நாட்டுக்கு நல்ல சேவகராக வேண்டும்; சிவபிரான் திருவருளுக்குப் பாத்திரராக வேண்டும். அவ்வாசைபற்றி யெழுந்தனவே மேலுள்ள வசனங்கள்.  உபவாச வகைகளைக் கொண்ட பிற சமயங்களு மிருக்கலாம்.  அச்சமயிகளும் குறையின்றி அவற்றை யாசரிப்பாராக.

சிவராத்திரிபோல் நவராத்திரியும் தேசமெங்கும் அனுட்டிக்கப்பட்டு வருகிறது.  அது உமாதேவியார்க்குரிய விரதம்.  அவ்வுண்மை எத்தனை பேருக்குத் தெரியும்?  உண்மைகண்டு அனுட்டிக்கப்படாத விரதம் அற்பப்பயனுடையதே.  ஆகலின் அதனை யனுட்டித்தற் குரியார் அதன் உண்மையைத் தெரிந்து கொள்ளுதல் அவசியம்.  பெயரளவில் அனுட்டிப்பவர் ஏமாற்றமடைவர்.  அவ்விரதத்தில் அன்னிய சமயக் கருத்துப் புகுத்தப்பட்டு விடும்.  அப்படித் தான் நவராத்திரி விரதம் இருந்து வருகிறது.  அவ்விரத வுண்மையைச் சைவப் பிரமாண நூல்களிலிருந்து எடுத்துக் காட்டுவோர் இன்றும் உளர்.  ஆனால் அதை ஏற்க விரும்பாத மனம் படைத்த சைவர் பலராய்விட்டனர்.  அநியாயம்.  யாரிட்ட சாபமோ அது! அல்லது கலிக்கொடுமை தானோ! 'ஆரியக் கூத்தாடினாலுங் காரியத்திற் கண் வேண்டும்' என்பது பழமொழி. அன்னிய சமயத்தவர் நம்மோடு நெருங்கி உறவாடுவர்.  ஆயினும் தம் சமயத்திற்றான் அவர்க்குக் கண்.  அதனொடு தமக்குள்ள தொடர்பை அவர் தளர்த்திக் கொள்ளவே மாட்டார்.  சைவருட்டான் பலர் அவருக்கு மாறாகவே யிருக்கின்றனர்.  அவர் சீர்ப்பட வேண்டும்.  நானும் பெரியோ ரடிச்சுவடு பற்றி ஊதுகிற சங்கை ஊதுகிறேன்.  விடிகிறபோது விடியட்டும்.  என்றாவது விடியாமலா போகும்? பார்க்கலாம்.


நவராத்திரி என்பதற்கு ஒன்பது இரவுகள் என்று பொருள்.  'நவராத்திரி உத்ஸவத்திற்கும் விஜயதசமி உற்சவத்திற்கும் சம்பந்த மேதேனு முண்டா? இன்றா?' என ஒருவர் கேட்டிருக்கிறார்.  பிரமாண சகிதம் அதற்கு விடை வேண்டும்.  அதுவரை தசரா என்ற பெயரை விலக்கி வைப்பதே தக்கது. தசரா - பத்து இரவுகள்.

முதலாவது, நவராத்திரிக்குரிய காலத்தை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். 'சிவோத்சவங்களுக்கெல்லாம் தீர்த்தத்தை நிச்சயம் செய்து கொண்டு ஆரம்பத்தைச் செய்ய வேண்டும்.  இந்த உத்ஸவத்துக்கு ஆரம்பம் முக்கியமென்று வாக்கியங்கள் மூலம் தெளிவாகிறது' என்கிறார் பிரமஸ்ரீ தெய்வசிகாமணிப் பட்டர். மானாமதுரை.  இந்த உத்ஸவம் என்றது நவராத்திரியை.

'நவராத்திரி உற்சவத்திற்கு ஆரம்ப காலம் நிச்சயித்திருப்பதுபோல மகோற்சவத்திற்கு ஆரம்பம் சொல்லப்படாமல் உற்சவம் முடிவாக வேண்டிய நக்ஷத்திரம் திதி முதலிய காலமே சொல்லப்பட்டிருக்கிறது' என்கிறார் திரு. தி.க. உலகநாத பிள்ளை, திருநெல்வேலி வைதிக சைவ சம்மேளன அமைச்சர்.  ஆகவே நவராத்திரி விஷயத்தில் சிவாலயத்தில் ஒன்பது நாளுமே முக்கியமாத லறிக.  சிவாகமம் அவ்விரத காலத்தைச் சாந்திரமானப் படியே நிச்சயித்துள்ளது.  விநாயக சதுர்த்தி பாத்திரபத (சாந்திரமான புரட்டாதி) மாதத்திலும், நவராத்திரி ஆச்வீஜ (சாந்திரமான ஐப்பசி) மாதத்திலும், ஸ்கந்தசஷ்டி கார்த்தீக (சாந்திரமான கார்த்திகை) மாதத்திலும் அனுட்டிக்க வேண்டும் என்பது சிவாகமவிதி.

'நாம் அறிந்த அளவில் ஸ்ரீ காரணாகமத்தில் நவராத்திரி விதிப்படலத்தில், 'ஆச்வயுக் சுக்ல பக்ஷேது ப்ரதிபந் நவம் யந்தகே! ப்ரதிபத்தின மாரப்ய வ்ரதோத் ஸவம தாசரேத்!' என்று சொல்லப்பட்டிருகிறபடி ஆச்வீஜ (சாந்திரமான ஐப்பசி) மாதத்துச் சுக்கிலபக்ஷப் பிரதமையில் நவராத்திரி விரதோற்சவத்தை ஆரம்பித்து க்ஷ - நவமியில் முடிப்பதே முன்னோர் அனுஷ்டானத்திற்கும், சிவாகமங்கட்கும் பொருத்தமானதென்று தீர்மானிக்கின்றோம்" என்கிறார் திரு. தி.க. உலகநாத பிள்ளை.

இனி அவ்விரதத்தின் கருத்தைக் காணலாம்:  சிவபிரானுடைய அருட்சத்தியே உமாதேவி.  அச்சத்தியும் ஒன்றே.  ஆயினும் அது பலதொழில்களை யியற்றும்.  நெருப்புக்குச் சத்தியொன்றே.  அது தான் சூடு.  ஆயினும் அது வறுக்கும், பொரிக்கும், அவிக்கும், நீற்றும், உருக்கும், பொசுக்கும்.  அத்தனை பெயர்களை அது ஏற்கின்றது.  அப்படியே அச்சிவசத்தியும் பல பெயர்களைப் பெறும்.  அது சிருட்டிக்கிறது.  திதிக்கிறது, சங்கரிக்கிறது.  சிருட்டிக்கும்போது அதற்குச் ஜனனியென்று பெயர்.  திதிக்கும்போது அது ரோதயித்திரியாம்.  சங்காரத்தில் அது ஆரணியெனப்படும். 

பிரமன் சிருட்டிக்கிறான், விட்டுணு திதிக்கிறான், உருத்திரன் சங்கரிக்கிறான் என்றால் அத்தொழில்கள் அவர்களுக்குச் சொந்தமல்ல.  அவர்கள் தோன்றி மறைபவர்கள்.  ஒரு பிரமன் போனால் அப்பதவிக்கு இன்னொருவன் வந்து பிரமனாவன்.  அப்படியே விஷ்ணு முதலியோருக்குமாம்.  மேலும் அண்டந் தோறுமாகப் பிரமர் பலர் உளர்.  விஷ்ணு முதலியோரும் அங்ஙனமே.  ஆகலின் அவர்களைக் கணக்கிற் சேர்க்கக்கூடாது.  அப்பிரமரனைவரையும் அதிட்டித்துள்ள சிருட்டிசத்தியவ் ஜனனி யொன்றுதான், அவ்விட்டுணுக்களனைவரையும் அதிட்டித்துள்ள திதிசத்தி அந்தரோதயித்திரி யொன்று தான்.  அவ்வுருத்திரரனைவரையும் அதிட்டித்துள்ள சங்காரசத்தி அவ்வாரணி யொன்றுதான்.  அம்மூன்று சத்திகளும் சிவசத்தியின் வியாபார பேதங்களே, வியாபாரம் - தொழில். 
ஆரணி சத்தியை முதல் மூன்று தினங்களிலும், ரோதயித்திரி சத்தியை அடுத்த மூன்று தினங்களிலும், ஜனனிசத்தியைப் பின்மூன்று தினங்களிலும் வழிபட வேண்டும்.  அதற்கு வாய்ப்பில்லாதவர் ஒன்பதாந் தினமாகிய நவமியன்று அம்முச் சத்திகளின் மூலமாகிய சிவசத்தியை அதாவது உமாதேவியாரை கலச ஸ்தாபனஞ் செய்து உபவாசமிருந்து வழிபடவேண்டும்.  அதுபற்றியே அத்தினம் மஹாநவமியெனச் சிறப்பித்துக் கூறப்பட்டது.

'பெருகு காதலிற் புரட்டைமுற் பிரதமை முதலாப்
மருவி முன்புகல் விதிமுறை மணிக்குட மமைத்துச்
சொரிந றுந்துண ரருச்சனை வரன்முறை தொகுத்துப்
பரிவி னெண்பகற் பலாதியுண் டருண்முறை பயில்வார்,'

'நடந்த நாள்கழித் தீற்றிடை யெதிர்ந்தமா நவமி
தொடங்கு பிற்றைநாண் மறையவர்ப் போசனந் தொகுத்து
வடங்கொள் பூண்முலை மறையவர் மடந்தையர்க் கினிது
நுடங்கு கோசிக மளித்தபின் பாரண நுகர்வார்'
என்ற உபதேசகாண்டத்தால் அவ்விரதம் அனுட்டிக்கு முறை அறியப்படும்.

'சேந்த தாமரைத் தடங்கணா னத்திற நோற்று
மோந்த போர்முகத் தசுரரை முதலற முருக்கி
வாய்ந்த னன்கலா சத்தியை யடைந்தனன் மற்றோர்
பூந்த டங்கணோர் பாக்கிய சத்தியும் புரிந்தான்',

'இமய மீன்றெடுந் தளித்தவள் விரதமீ திழைத்தோ
ரமைய நல்கிய பெருவளந் துய்த்தன ராகி
யுமைத ரும்பெருங் கருணையா லருங்கதி யுவந்தார்
தமையெ டுத்தெடுத் துணர்த்துவ தியாருழைத் தகுமே'
என்ற அந்நூற் பாடல்கள் அவ்விரத மனுட்டித்தவர் பெற்ற பேறுகளை எடுத்துரைக்கின்றன.

இக்காலை அவ்விரதம் சாத்திரத்துக்குப் பொருந்த அனுட்டிக்கப்பட்டு வருவதாகத் தெரியவில்லை.  மேலே சொல்லப்பட்ட ஜனனியைச் சரசுவதி யெனவும், ரோதயித்திரியை இலக்குமியெனவும், ஆரணியை உமையெனவுஞ் சொல்வதுண்டு.  அங்ஙனமாயின் பிரமாவை அதிட்டிக்கிற சரசுவதி வேறு, அவருக்கு மனைவியாகிய சரசுவதி வேறு; விட்டுணுவை அதிட்டிக்கிற இலக்குமி வேறு, அவருக்கு மனைவியாகிய இலக்குமி வேறு; உருத்திரனை அதிட்டிக்கிற உமை வேறு, அவருக்கு மனைவியாகிய் உமை வேறு என்பது பெறப்படும்.  அப்பிரமனாதியோரை அதிட்டிக்கிற சரசுவதி, இலக்குமிம் உமை யென்போரைக் குறித்தது நவராத்திரி விசேடம் என்றால் அது பொருந்தும்.  இம்மும்மூர்த்திகளுட்பட்ட உருத்திரன் அவருக்கு மனைவியாகிய உமை என்பார்க்கு அம்மும்மூர்த்திகளின் தலைவராய சதுர்த்தப் பொருளாயும் சைவசமய தெய்வமாயும் உள்ள சிவபிரான் உமாதேவியார் வேறாவார்.  சிவராத்திரி விரதம் அச்சிவபிரானுக்கும், நவராத்திரி விரதம் அவ்வுமாதேவியார்க்குமே உரியன.  ஆனால் அம்மும்மூர்த்திகளின் மனைவிமாராகிய சரசுவதி முதலியோருக்குரியது அவ்விரதம் என்கிறார் சிலர்.  அது சரியன்று.  அவ்விரதத்தை அப்பிரம விட்டுணு வாதியரே அனுட்டித்ததால் அஃது அறியப்படும்.  அன்றியும் தக்க யாகத்தில் வீரபத்திரமூர்த்தியால் அச்சரசுவதியின் (பிரம்மாவின் மனைவி) மூக்கு அறுக்கப்பட்டது.  அவ்விலக்குமிக்குந் (விட்டுணுவின் மனைவி) தண்டனை கிடைத்தது, அங்ஙனம் பங்கப்பட்ட அத்தேவ ஸ்திரீகளைக் குறித்த விரதமாக அதனைக் கொள்வது பாவம்.  இனியாயினும் அன்ன ஆபாசக் கருத்துக்களைத் தள்ளுக.  ஸ்ரீ உமாதேவியாருக்குரியதே நவராத்திரி விரதமென்பதைக் கடைப்பிடிப்பதே உசிதம்.  சைவர் அது செய்து நலம் பெறுவாராக.

முடிப்புரை
யாழ்ப்பாணத்து ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரை அறியாத சைவர் வெகு சிலரே.  அந்நாவலர் சைவ சமய ஆராய்ச்சி, அறிவு, ஆண்மை மிக்கவர்.  'சைவ வினா விடை' என இரண்டு நூல் அவரெழுதியிருக்கிறார்.  அவை அருமை பெருமையுடையன; ஒவ்வொரு சைவரும் ஊன்றிக் கற்றற்குரியன.  இரண்டாஞ் சைவ வினா விடையில் விரதவியல் என்றொரு பகுதியுண்டு.  அதிற் சைவ விரதங்களைத் தொகுத்தும், அவற்றை அனுட்டிக்கு முறைகளைச் சுருக்கியும் நன்கு கூறபட்டுள்ளன.  அவ்விரதங்களை அம்முறையில் அனுட்டிப்பதே சைவர்க்கு நெறி.  மாறானவற்றை விடுவதும் நெறிதான்.  அந்நூலிற் சொல்லப்படாத சில விரதங்களையும் நம்மவர் அனுட்டித்து வருகின்றனர்.  அவையும் பிரமாணமுடைவாயின் சரி தான்.

ஏகாதசி யென்றொரு விரதமுண்டு.  அதை வைணவரும் அனுட்டிப்பர், சைவரும் அனுட்டிப்பர்.  அவ்விரத விவரம் வைணவருக்கு ஒருவிதம், சைவருக்கு ஒரு விதம்.  இன்று வரை வைணவர் தம் சமயப் பாங்கில் அனுட்டிப்பாராயினர்.  சைவரும் தம் சமய நீதியிலன்றோ அனுட்டிக்க வேண்டும்.  அந்தோ! அவருட் சிலரோ பலரோ அன்று மாத்திரம் ஊர்த்துவபுண்டரம் அதாவது நாமம் போட்டுக் கொள்கின்றனர், வைகுண்ட யாத்திரையுஞ் செய்கின்றனர்.  தன்மானமென்பது அதுதான் போலும்.  அது சைவ விரதமாதலெப்படிதிருப்பாற்கடலைக் கடைந்தனர் பிரம விஷ்ணுவாதி தேவர்களும், அசுரர்களும், அதிலிருந்து எழுந்தது ஆலகால மென்னுங் கொடுவிடம்.  அவ்விட வெப்பத்தால் அப்பிரம விஷ்ணுவாதி சகலரும் பொசுங்கினர், கருகினர்.  உலகமே நடுங்கி விட்டது.  தேவரனைவரும் கயிலைக்கு ஓடிச் சென்று சிவபிரானிடம் சரண் புகுந்தனர்.  திருவுளம் இரங்கியது அப்பெருமானார்க்கு.  அவ்விடத்தைக் கொணர்வித்து வாங்கி உண்டு தம் படிகநிறமான கண்டத்தில் நிறுத்தி அவ்வனைவரையுங் காத்தருளினார் அவர்.  அந்நஞ்சையுண்ட காலம் ஏகாதசி.  திருநீலகண்டரின் திருவருள் பெற்றனர் அத்தேவர்.  அவர் மறுநாள் துவாதசியில் அக்கடலைக் கடைந்தபோது அமுதமெழுந்தது.  விடத்தைத் தாம் உண்டு அமுதத்தைத் தேவர்க்கீந்த காரணத்தால் அச்சிவ பரம்பொருள் அத்தேவரெல்லாராலும் திரயோதசியன்று உபாசிக்கப்பட்டனர்.  அங்ஙனம் சிவபிரான் ஆலாலமுண்டு தேவரைக் காத்தருளிய தினம் ஏகாதசி யாதலால் அத்தினம் சைவர்க்கு விரததின மாயிற்று.  அச்சரித்திரத்தை மறந்து அவ்விரதத்தைச் சைவர் அனுட்டித்தல் பரிதாபம்.  அவர் பரிகசிக்கவும் படுவர்.

'ஏகா தசியின் மாலைதனி லெல்லாம் வல்ல வெம்பெருமான்
ஆகா வாலா கலவிடத்தை யருந்தி யமார்க் காத்தனர்பின்
வாகா வீரா றாந்திதியின் வாரி யமிழ்த மெழவானோர்
ஏகா துண்டு பதின்மூன்றா வெண்ணுந் திதிசா யும்போழ்தில்,'

'அரனார் சபரி மரபுளியே யாற்றி வணங்கிப் போற்றினர் முப்
புரனார் பகைவ ரல்வேல்வை போத விடைமே னின்றருளி
வரனா ரருளை வழங்கினரால்---'
என்ற சிவாலய தரிசனவிதிப் பாடல்களில் மேற்காட்டிய உண்மை புலனாம்.  சபரி - பூசை. 
ஆகவே சைவமக்கள் இனியாயினும் சிவாகம பண்டிதர்களை நாடுக.  அவர்களைக் கொண்டு சைவ விரதங்களையும், அனுட்டான முறைகளையும் சிவாகமப் பிரமாண சகிதம் ஆராய்ச்சி முறையில் எழுதுவித்து வாங்குக.  அதனை அச்சிட்டுப் பரப்புக.  சிறந்த சைவ சேவையாகும் அது.


சொன்னேன் அதுவே சுகம்,

சுபம்

Tuesday, October 6, 2015

☞ சைவசித்தாந்த ஸாரம் - பகுதி 8



• வித்தியேசுவர தத்துவம்

♋அனந்தர் என்னும் வித்தியேசுவரர் ஸர்வேசுவரரானதால் மற்றைய வித்தியேசுவரர்களுக்கும் சுத்தவித்தியா தத்துவத்தில் அடங்கியவர்களுக்கும் (இவர்) ஈசுவரர்; மாயையைக் கலக்குபவர்; மாயாதத்துவத்தில் உள்ள புவனங்களைப் படைப்பவர். ஆனால் இவர் எல்லாவற்றிற்கும் தலைவரான பரமேசுவரரினின்றும் வேறானவர்; அதிகார மலம் பக்குவமடைந்ததால் அந்த பரமேசுவரரால் அருளப்பட்டவர்.

♋இந்த சிருஷ்டிக் கிரமத்தில் ஆணவமலம் கருமமலமென்னும் இரு பாசங்களால் கட்டுண்டவர்கள் பிரளயாகலரென்றழைக்கப்படுவர்.

♋இவர்களுள் மலபரிபாகம் அடைந்தவர்கள் மீது பரமேசுவரரின் அருட்கண் பார்வை வீழ்ச்சியினால் அருளப்பட்ட நூற்றிப் பதினெட்டு உருத்திரர்கள் அடங்குவர். இவர்களுள் ஒருவரான ஸ்ரீகண்டருத்திரர் மத்திமப் பிரளயத்தின் இறுதியில் பிரகிருதி தத்துவத்தின் மேலமைந்த புவனங்களையெல்லாம் தோற்றுவிப்பார்.

ஆணவம்,கருமம்,மாயை ஆகிய மும்மலங்களுடன் கூடிய சகலர்களுள் ஞானம்,யோகம்,தவம்,தியானம் முதலியவற்றை அநுஷ்டிப்பதால் அடையப்படும் பிரஹ்மா,விஷ்ணு ஆகியோரின் பதவிகளையும் நிர்வகிப்பவர்; மத்திமப் பிரளயத்தில் இவர் ராகதத்துவத்தில் அடங்குவார். பின்பு சிருஷ்டிக் காலத்தில் அசுத்தாத்துவசிருஷ்டியைச் செய்து அதன் பின்பு[மேற்கூறிய] பிரஹ்மா,விஷ்ணு ஆகியோர்களின் சிருஷ்டிக்கும் காரணமாக விளங்குகிறார். அவர்களுக்குக் கீழுள்ள புவனேசுவரர்கள், முப்பத்து முக்கோடி தேவர்கள், ஈசுவரர்கள் ஆகியோரின் பிரஹ்மாண்டங்க்ளையும் சிருஷ்டி செய்கிறார்.

♋அந்தப் பிரஹ்மாண்டத்தில் சகலர்கள் வாழும் பதினான்கு உலகங்கள் அடங்கும்.

சுபம்

☞ சைவசித்தாந்த ஸாரம் - பகுதி 7



• சூக்கும தேகம்

♋ [முன்னைய சைவசித்தாந்த ஸாரம் தத்துவ விளக்கப்  பகுதியில் கூறப்பட்ட] முப்பத்தியொரு தத்துவங்கள் அடங்கியது சூக்ஷ்மதேகம் என வழங்கப்படுகிறது; இது ஒவ்வொரு ஆன்மாவிற்கும் தனித்தனியே வேறுபட்டது. முப்பது தத்துவங்கள் பற்பல புவனங்களில் உண்டாகும் உடல்களுக்கும் அவற்றிற்கு ஆதாரமாக விளங்கும் பற்பல புவனங்களுக்கும் ஆதாரமாக அமைவது; இவை எல்லா ஆன்மாக்களுக்கும் பொதுவானவை. இவையெல்லாவற்றிற்கும் காரணமாயிருப்பது அசுத்த மாயை; இது அழிவற்று எக்காலமும் இருப்பது; வியாபித்திருப்பது; எல்லா ஆன்மாக்களின் கருமங்களுடனும் தொடர்புடையது; தன்னுடைய தொழிலால் ஆன்மாக்களை மோஹமடையச் செய்வது.

• சுத்த தத்துவங்கள்

♋மேல் கூறிய தத்துவங்களுக்கு மேல் முப்பத்திரண்டாவது தத்துவம் சுத்தவித்தியை எனப்படும்; அதற்கு மேல் ஈசுவர தத்துவம் முப்பத்தி மூன்றாவது.

♋இந்த சுத்தி வித்தியை தத்துவத்தில் ஸப்தகோடி மஹாமந்திரங்கள்,காமிகம் முதலான இருபத்தெட்டு ஆகமங்கள்(=ஸம்ஹிதைகள்) சைவ சித்தாந்த சாஸ்த்திரங்களினால் போற்றி வணங்கப்படும் நந்தி முதலான எட்டு கணேசுரர்கள், இந்திரன் முதலான எட்டு லோக பாலகர்கள், அவர்களது ஆயுதங்களான வஜ்ரம் முதலானவை இருக்கின்றன. ஈசுவர தத்துவத்தில் அனந்தர் முதலான வித்தியேசுவரர்கள் இருக்கின்றனர்.

சுபம்

☞சைவசித்தாந்த ஸாரம் - பகுதி 6


• மிசிராத்துவா

♋இருபத்தியைந்து தத்துவங்களுக்கு மேலாக உள்ளது ராகம் என்னும் தத்துவம்; இதன் தொழிலாவது பிரகிருதியினின்றும் தோன்றும் அனைத்துப் பொருள்கள் மீதும் ஆன்மாவிற்கு விருப்பம் உண்டாக்குவது.

♋ ராக தத்துவத்திற்கு மேலாக இருப்பது நியதி தத்துவம்; அந்தந்த ஆன்மாவினால் செய்யப்படும் செயல்களின் பலனை அந்தந்த ஆன்மாவே நுகரவேண்டும் என்று நெறிப்படுத்துவதே இதன் தொழில்.

♋ இதற்கு மேல் கால தத்துவம்; புருஷன் என அழைக்கப்படும் ஆன்மாவானது மிக நீண்டகாலம் அனுபவிக்கிறது அல்லது குறைந்த காலம் அனுபவிக்கிறது எனப் புருஷதத்துவத்தின் போக நுகர்ச்சியை அளவிடுவது இதன் தொழில்.

♋ இதற்கு மேல் வித்யா தத்துவம்; இதன் தொழிலாவது அந்தந்தப் பொருள்களின் உருவத்தைக் கொள்ளும் புத்தியினை ஆன்மா பற்றும் படி செய்வது.

♋இதற்கு மேல் உள்ளது கலாதத்துவம்; இதன் தொழில் தாமிரத்தில் படியும் களிம்பு போல் ஆன்மாவின் இயல்பான ஞான சக்தியினை முழுவதும் மறைத்து நிற்கும் சகஜமலமென்றழைக்கப்படும் ஆணவமலத்தைச் சிறிது விளக்கி ஆன்மாவின் உண்மைச் சொரூபம் சிறிது வெளிப்படும் படி செய்தல்.இக் கால தத்துவத்திற்கு காரணமாயிருப்பது மாயாதத்துவம்.

♋ மேற்கூறிய தத்துவங்களின் வரிசை: மாயாத்துவத்தில் கலா,வித்தியா,காலம்,நியதி,அராகம் ஆகிய ஐந்தும் அடங்கும்; இவற்றினால் மறைக்கப்பட்டு[சுக துக்கங்களை] அனுபவிக்கும் ஆன்மாவிற்கு புமான் என்றும், மலமறைப்புள்ளதால் புருஷ தத்துவமென்றும் வழக்கு.[ஆனால்] ஆன்மா ஜடப்பொருளன்று. அராகம் முதல் கலாதத்துவமீறாக உள்ள ஐந்தும் மிசிராத்துவா என அழைக்கப்படுவன.

சுபம்

சைவசித்தாந்த ஸாரம் - பகுதி 5



• அஹங்கார சிருஷ்டி

1. புத்தி தத்துவத்தில் இருந்து சாத்வீகம்,இராஜஸம்,தாமஸம் என [மூன்று]வகைப்பட்ட அஹங்காரம் தோன்றுகிறது.

2. சாத்வீக அஹங்காரத்தில் இருந்து மனம்,செவி முதலிய ஐந்து அறிவுப் புலன்கள் தோன்றும்.

3.  இராஜஸ அஹங்காரத்தில் இருந்து வாக்கு முதலிய ஐந்து தொழிற் கருவிகள் தோன்றும்.

4. தாமஸ அஹங்காரத்தில் இருந்து நாற்றம் முதலிய ஐந்து தன்மாத்திரைகள் உண்டாகும். இவ்வைந்து தன்மாத்திரைகளில் இருந்து மண் முதலிய ஐம்பூதங்கள் தோன்றுகின்றன. இவ்வைந்து பூதங்களின் செயல்கள் முறையே எல்லாவற்றையும் தாங்குதல், ஒருசேர வைத்திருத்தல், எரித்தல், பொருள்களின் உறுப்புகளோடு ஒரு சேர இணைத்திருப்பது, எல்லாப் பொருள்களுக்கும் இருப்பிடம் அளித்தால் ஆகியன.

• குணதத்துவம்

1. இருபத்திரண்டு தத்துவத்திற்கு அப்பாற்பட்டு விளங்கும் புத்திதத்துவத்திற்கு காரணமான குண தத்துவமானது[இருபத்துநான்காம் தத்துவம்] ஸத்துவம்,இராஜஸம்,தாமஸம் என மூன்று பகுப்புக்களைக் கொண்டது;[இது] சுகம்,துக்கம்,குழப்பம் முதலியவற்றுக்குக் காரணமாக உள்ளது.[இது] இருபத்தி நான்காவது தத்துவம்.

2. குணதத்துவத்திற்கு காரணமாக விளங்கும்.பிரகிருதி தத்துவமானது இருபத்தியைந்தாவது தத்துவம். புத்தி,குணம் ஆகியற்றில் பிரகிருதியின் காரியமாகக் கொள்ளப்படுவது  குணதத்துவமே. இக் குணதத்துவமானது சுகம்,துக்கம்,மன மயக்கம் முதலியவற்றிற்குக் காரணமாகவும், அதற்குக் கீழுள்ள புத்தி முதல் நிலம் ஈறாகவுள்ள இருபத்தி மூன்று தத்துவங்களுக்கும் காரணமாகவும் விளங்குகிறது. இவ்வாறான இருபத்தியைந்து தத்துவங்களும் அசுத்தாத்துவா என வழங்கப்படுகின்றன.

சுபம்