Friday, May 29, 2015

ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் அறிமுகம்

அடியாரிடர் தீர்த்தருளு மானைமுகன் பாதங் கடிமலர்தூய்க் கைதொழுவாங் கண்டு

முற்பிறவிகளில் நாம் செய்த நற்செயல்களின் பலனே சிறப்புமிக்க மானிடப்பிறவி, இஃது பிறவியில் பிறந்தும் நாம் நற்கருமங்களை செய்யவேண்டும் அதுவே உத்தமம். உத்தமங்களின் சிரஸ் பகவானுக்கு சேவை செய்தல், பகவானின் பக்தர்களுக்கு உதவிகளை மனம் கோணாமல் செய்தல், வேதாகமசாஸ்திரங்கள் அல்லது வேதாகமசாஸ்த்திரங்களுக்கு முரணில்ல நூல்களை கற்று அதனை கற்பவனும் நடைமுறையில் இருத்தி, பிறருக்கும் அதன் தாற்பர்யங்களை விளக்கி கூறி அவர்களையும் உத்தம வழியில் கொண்டு செல்லல், இதுவே உத்தமங்களின் சிரஸ்.

இக்கொடிய கலிகாலமானது உலகமெங்கும் பரவி தனது மஹிமையால் வெகுவேறுபாடுகளை செய்துவிட்டதென்பது யாவருக்கும் தெரிந்த விஷயமே. இப்படியிருக்க பாரத்துவாஜ குலத்துக்கு மணிபோல பதினாராம் நூற்றாண்டில் வடஆற்காடு மாவட்டத்திலுள்ள அடையப்பலத்தில் ஸ்ரீமத் அப்பைய்ய தீக்ஷிதர் மற்றும் ஸ்ரீ நீலகண்டதீக்ஷிதர் என்ற இரு மஹான்கள் அவதரித்தார்கள்(அப்பைய்ய தீக்ஷிதர் அவர்களது தம்பி பேரனாக அவதரித்தவர் ஸ்ரீ நீலகண்ட தீக்ஷதர்).

ஸ்ரீமத் அப்பைய்ய தீக்ஷிதர், ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் பிறந்த வருடம், வாழ்ந்த காலம் பற்றிய விவரங்கள் திட்டவட்டமாக தெரியவில்லை. ஆராய்ச்சியாளர் பல கட்டுரைகளை எழுதியிருப்பினும் முரண் பாடுகளும் கருத்து வேறுபாடுகளும் உள்ளன.

கீழ்க்கண்டவை காலகட்ட நிர்ணயத்தில் கருத்தில் கொள்ளப்பட்டன

1) ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் ஜாதகம்: தெய்வசெயல்புரம் நாடி ஜோதிடத்தில் கிடைத்த ஸ்ரீ நீலகண்ட தீக்ஷதரின் ஜாதகத்தில்,  அவர் பிறந்தது ஜய ஆண்டு என்று தெரிகிறது. ஜய ஆண்டு 60 வருடங்களுக்கு ஒரு முறை வருவதால் இவர் பிறந்தது 1594 அல்லது 1654 ஆகவே இருக்க வேண்டும்.Date of birth ( 23 / 05 / 1594 ) ஜய வருஷம், வைகாசி மாதம், 8ஆம் தேதி பௌர்ணமி திதியன்று திங்கள் கிழமை, அனுஷ நக்ஷத்திரத்தில், ஸ்ரீ நீலகண்டதீக்ஷிதர் அவதரித்தார்

2) மதுரையை ஆண்ட திருமலைநாயக்க மன்னனின் ஆட்சிக்காலம் 1623ஆம் ஆண்டிலிருந்து 1659 வரை, என்பதற்கு சரித்திரச் சன்றுகள் உள்ளன. ஸ்ரீ நீலகண்ட தீக்ஷதர் வாலிப பருவத்தில் மதுரை மன்னால் அமைச்சர் பதவியில் அமர்த்தப் பட்டு பல ஆண்டுகள் பணி புரிந்தார். ஓய்வு பெற்று மன்னனால் தமக்கு மான்யமாக அளிக்கப்பட்ட தாம்ரபர்ணி நதிக்கரையில் அமைந்துள்ள பாலமடை கிராமத்தில் குடியேறி தமது அந்திம காலத்தை அங்கே கழித்தார். தமது எழுபதாம் வயதில் மார்கழி மாதம் சுக்ல அஷ்டமி அன்று மஹாஸித்தி அடைந்து சிவலோகம் எய்தினார். ஆகவே ஸ்ரீ நீலகண்டர் பிறந்தது 1594ஆம் ஆண்டு என்று நிர்ணயிக்கலாம்.

3) ஸ்ரீமத் அப்பைய்ய தீக்ஷிதர் தமது 72 ஆவது வயதில் சிதம்பர க்ஷேத்திரத்தில் சிவலோகம் சென்றார் என்றும், அப்போது நீலகண்டருக்கு வயது 12 என்றும் பல ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அவர் வேலூரை ஆண்ட சின்ன பொம்ம நாயக்க மன்னனின் ராஜ குருவாக பல ஆண்டுகள் பணி புரிந்துள்ளர். வேலூரில் ஸ்ரீ காலகண்டேஸ்வரர் தேவாலயம் மன்னனின் உதவியோடு 1578ஆம் ஸ்ரீ அப்பைய்ய தீக்ஷிதரால் கட்டப்பட்டது. ஸ்ரீ அப்பைய்ய தீக்ஷிதர் 1534ஆம் ஆண்டு பிறந்து 1606ஆம் ஆண்டு ஸித்தி அடைந்தார் என்று நிர்ணயிக்கலாம்.

ஸ்ரீமத் அப்பைய்ய தீக்ஷிதர் எதிரே சிறுபராயத்தில் ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் தேவி மஹாத்மிய ஓலைச்சுவடியை கொடுத்து நிற்கும் காட்சி  

ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் தமது பெரிய பாட்டனாரை(ஸ்ரீமத் அப்பைய்ய தீக்ஷிதரை) பற்றி தமது சிவலீலார்ணவ மஹா காவ்யத்தில்
பரத்வாஜ குலமென்ற கடலில் கௌஸ்துப மணி போல் ஜ்வலிப்பவரும்,
 ஸ்ரீகண்ட மதப்ரதிஷ்டாபனாசார்யரும்,  நூற்றுநான்கு கிரந்தங்களை இயற்றிய,
மஹாவ்ரதயாஜி ஸ்ரீ அப்பைய்ய தீக்ஷி தேந்திராள் என்று கூறிப் பிட்டுள்ளார்.

ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் பல கிரந்தங்கள் இயற்றினார் ஆனால் தற்காலத்தில் எமக்கு கிடைத்துள்ள நூல்கள் மிகச்சொற்பமே அவையாவன "சிவோத்கர்ஷம், சிவலீலார்ணவம், கங்கவதாரணம், சிவதத்வ ரஹஸ்யம், முகுந்தவிலாஸம், ரகுவீரஸ்தவம், சண்டீரஹஸ்யம், நளசரித்திர நாடகம், குருராஜ ஸ்தவம், அன்யாபதேச சதகம், நீலகண்ட விஜய சம்பு, கையட வியாக்கியானம்,கலி விடம்பனம், ஸபாரஞ்ஜன சதகம், வைராக்ய சதகம், சாந்தி விலாஸம், ஆனந்த ஸாகர ஸ்தவம்" ஆகும்.

ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதரின் பெரிய பாட்டனாரான ஸ்ரீமத் அப்பைய்ய தீக்ஷிதரின் நூற்றிற்கு மேல்பட்ட கிரந்தங்களும் மிகப் பிரஸித்தி பெற்றவை. அதில் சிவார்க்க மணி தீபிகையும் ஒன்று (இதனை பராட்டி ஸ்ரீ அப்பைய்ய தீக்ஷி தருக்கு ஸ்ரீகண்டமதபப் பிரதிஷ்டா பனாசார்யர் என்ற பட்டம் அளிக்கப் பட்டது), Sri Appayya Dikshtar Trust என்ற அறக் கட்டளை, ஜம்மு காஷ்மிர் முன்னாள் தலைமை நீதிபதியும், ஸ்ரீ அப்பைய்ய தீக்ஷிதரின் வம்சத்தில் வந்தவருமான ஸ்ரீரத்னமய்யர் தலைமையில் Pilathope, Myalapore, Chennai 600004, என்ற முகவரியில் இயங்கி வருகிறது. ஸ்ரீஅப்பைய்ய தீக்ஷிதரின் கிரந்தங்ளில் பிரசுரமானவை பற்றிய விவரங்களை இங்கு அறியலாம்.

இஃது வேதகாம சங்கிரக வலையில் எழுதப்பட்ட இச்சிறு அறிமுகமானது ஸ்ரீ சிருங்கேரி பீடத்தால் வெளியிடப்பட்ட அம்மன் தரிசனம் என்னும் மாதாந்த இதழில்(2009) டாக்டர் P.S.நடராஜன் அவர்களால் எழுதப்பட்ட ஸ்ரீ நீலகண்டதீக்ஷிதர் காலகட்டம் பற்றிய ஒரு கண்ணோட்டம் என்னும் கட்டுரையையே கருவாகக்கொண்டு,எனது சில எழுத்துக்களால் நிரப்பட்டது.

சுபமஸ்து

No comments:

Post a Comment