Wednesday, August 19, 2015

சைவசித்தாந்த ஸாரம் - பகுதி 2


சைவசித்தாந்தத்தில் இடம்பெறும் முக்கிய, அடிப்படை விடயம் இந்த பதிபசுபாசமென்னும் முப்பொருள்களும்.

1. பதி – பேரறிவுடைய சிவபெருமான்,
2. பசு – சிற்றறிவுடைய உயிர்,
3. பாசம் - உயிரைப் பிணிக்கும் கட்டு.

இனி தொடர்வோம்..
மெய்யறிவின்ப வடிவினனாகிய முழுமுதற் பரம்பொருள் ஒருவர் ஆவார். அவரே பதியாகிய சிவபெருமான். அவர் தமக்கென யாதொன்றும் வேண்டாதவர். அவர் பஞ்ச கிருத்தியங்களையுந்(ஐந்தொழில்கள்)தம் பொருட்டு செய்யவில்லை; ஆன்மாக்களுக்காக தனது சக்தியினாலே செய்தருளுகின்றார். இத்தன்மையால் இறைவன் அம்மையப்பர்(சிவமும் சக்தியும்)ஆவார்.
பஞ்ச கிருத்தியம்:

I. சிருஷ்டி-படைத்தல்

II. ஸ்திதி-காத்தல் 

III. சம்ஹார-அழித்தல்

IV. திரோபவ-மறைத்தல்

V. அனுக்கிரக-அருளல்

உயிர், என்றைக்குமுள்ள பொருள். அது புதிதாகப் பிறிதொன்றினின்று உண்டாக்கப்படுவதில்லை.ஆதலால்,
• படைத்தல், உயிர்க்கு உடம்பையும், மனமுதலிய உள்ளகக் கருவிகளையும், அது தங்குதற்குரிய உலகப்பகுதியையும், அது நுகர்தற்குரிய பொருள்களையும் தருவதேயாம். இதனை தனு கரண புவன போகங்கள் என்று கூறல் சாலப்பொருந்தும்.
தனு = உடம்பு.
கரணம் = மன முதலிய கருவி.
புவனம் = உடம்புக்கு ஆதாரமாகிய உலகம்.
போகம் = அநுபவிக்கப்படும் பொருள்.

• காத்தல்,உயிர் மேற்கூறியவைகளோடு பொருந்தி வேண்டிய காலம் வரை நிலவச் செய்தல்.

• அழித்தல், மேற்கூறியவற்றுள் ஒன்றோ பலவோ உயிரின் வேறாகப் பிரியும் வண்ணம் செய்தல்.

• மறைத்தல், நல்வினை தீவினைக்குரிய நுகர்ச்சிகளில் ஈடுபடச் செய்தல்.

• அருளல், பக்குவமடைந்த ஆன்மாக்களுக்குப்(பசுக்களுக்கு) பாசத்தை நீக்கிச் சிவத்துவத்தை விளக்குதல்.

சுபம்

No comments:

Post a Comment