Monday, January 23, 2017

பகவானும் பாரதமும்!, இஃது பாரத தாற்பர்ய சங்கிரகம் - 3


பாரத தாற்பர்ய சங்கிரகம் என்னும் தொடரான பதிவில் முன்னர் வெளியிடப்பட்ட இரு பகுதிகளையும் படிக்கத் தவறிய அன்பர்கள் தயவு கூர்ந்து முதல் வெளியிடப்பட்ட இரு பகுதிகளையும் படித்த பிற்பாடே  இந்தப் பதிவைப் படிக்குமாறு தயவுடன் கேட்டுக் கொள்கிறேன்.






நாரணன்றா னெடுங்கால முபாசித் துன்னை
நல்லருளாற் சிவோகம்பா வனைதலைப் பட்டத்தா
லாரணங்கண் முறையிடுமப் பிரம மாகு
மத்துவித நிலைச்செவ்வெ யடைந்தா னென்றுங்
காரணங்கற் பனைகடந்த பொருணீ யென்றுங்
கருத்துடைய துதியன்னோன் சொற்றா னென்றும்
பூரணனா யுயிர்க்குயிராய் நிற்குமுழு முதலே
புகன்றிட்டான் வியாதமுனிபா ரதத்திற் றானே. (5)

(இஃது நாராயணமூர்த்தி சிவபிரானை உபாசித்துப் பிரமஞானம் எய்தினமை கூறுகின்றது.)

பொருள்: பரிபூரணப் பொருளாயும் உயிர்களிடத்து அந்தரியாமியாயும் விளங்கும் முழுமுதற் கடவுளே!, நாராயணமூர்த்தி உன்னை நீண்டகாலமாக உபாசனை செய்து, உன்னுடைய நல்ல அனுக்கிரகத்தினாலே சிவோகம் பாவனையைப் பொருந்தி அதனால் வேதங்கள் ஏக்கற்றுரைக்கும் அந்தப் பிரமத்தன்மை கைவருதற்கு ஏதுவாகும் இரண்டற்ற சாமாதிநிலையைச் செவ்வையாகப் பெற்றானென்றும், அந் நாராயண மூர்த்தி தனக்கொரு நிமித்தமும் உபாதியும் இல்லாத பிரமப்பொருள் நீயே யென்னும் தாற்பரியத்தினைக்கொண்ட தோத்திரத்தினை அக்காலை உரைத்தா னென்றும் மாபாரதத்தில் ஒதினார்.

குறிப்பு: நாராயணமூர்த்தி பிரமஞானம் பெறல்வேண்டி சிவபிரானைக் குறித்து அருந்தவமிருந்து அச்சிவபிரான் றிருவருளினால் பிரமஞான நிட்டை யெய்தப் பெற்றவாறும், அக்காலையிற் காரணங் கற்பனை கடந்த பிரமப்பொருள் சிவபிரானே யென்னுந் துதிசொற்றவாறும், வியாசமுனிவர் பாரதத்தில் உரைத்தாரென்க.


தருமனொரு தாருவாச் சகோதரராம் வீரர்
சாகாதி பிறவுறுபாப் பசுநிரைகள் புரந்த
கருநெடுமால் பிரம்மே பிராமணர்க ளின்னோர்
காழ்ப்புறுவேரா கப்புனைந்து கட்டுரைத்த விடத்தே
அரயரவ ரைவர்க்கு மிடரகற்றி யென்று
மளிக்குமருட் பெருங்கடலே யறிவே நிற்குப்
பிரமபா வம்முண்மை பாரதத்திவ் வாற்றாற்
பிரகடனஞ் செய்திட்டான் வியாதமா முனியே.(6)

(இஃது பிரமசத்தம் சிவபிரானுக்குரிய பெயராதல் கூறுகின்றது)

பொருள்: குருகுல வேந்தராகிய பாண்டவர் ஐவர்க்கும் துன்பங்களை நீக்கி எக்காலமும் அருள்வழங்கும் பெரிய காருண்ணிய சமுத்திரமே! ஞான சொரூபியே!, வியாசமாமுனிவர் பாரத்தில் தருமபுத்திரனை ஒரு மரமாகவும், சகோதரர்களாகிய வீரர்களைச் சாகை முதலிய மற்றைய அவயவங்களாகவும், பசுக்கூட்டத்தினைக் காத்த கண்ணபிரானையும் பிரமத்தினையும் பிராமணர்களையும் வயிரம் பொருந்திய மூலமாகவும் அலங்கரித்து யாத்தெடுத்துக் கூறியவழி இம் முறையான பிரமசத்தப் பொருளாமுறை உனக்கு உண்மை வெளியிட்டார்.

குறிப்பு: வியாசமுனிவர் மாபாரதத்தில் பிரமபத்தினைச் சிவபரமாக ஓது முகத்தினால் அஃது சிவபிரானை உணர்த்து நாம மாதலை இனிது புலப்படுத்தினா ரென்க.



'ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே சூழ்க'

தொடரும்...



சுபம்

Sunday, November 20, 2016

பகவானும் பாரதமும்!, இஃது பாரத தாற்பர்ய சங்கிரகம் - 2



பாரத தாற்பர்ய சங்கிரகம் என்னும் தொடரான பதிவில், சென்ற வாரம் மட்டிலே பகுதி ஒன்றானது பதிவிடப்பட்டது. ஆக, பாரத தாற்பர்ய சங்கிரகம் பகுதி ஒன்றைப் படிக்கத் தவறிய அன்பர்கள் தயவு கூர்ந்து முதலாவது பகுதியைப் படித்த பிற்பாடே  இந்தப் பதிவைப் படிக்குமாறு தயவுடன் கேட்டுக் கொள்கிறேன்.






முற்கிளந்த பிரமாது மோக வாழி
மூழ்கிடநீ யதுமூழ்கா விசேடத் தானே
யுற்பவமே யிருப்பிறப்புற் றார் களன்னோ
ருவர்க்குமுதற் காரணமா யுயர்வொப் பில்லாத்
தற்பரவுத் தமமான பொருணீ யென்னுஞ்
சங்கையிறத் துவஞானந் தலைப்பட் டானென்
றற்புத்தமங் கணிகன்வாக் கதனான் வாத
ராயணன்றெற் றெனவெளியிட் டருளி னனால்.(3)

பொருள்: வியாஸமுனிவர் முன்னர்க்கூறிய பிரம்மன் முதலாகவுடைய தேவர்கள் யாவரும் மையற்கடலிலே முழுக, நீ அத்துடக்கெய்யாத மேன்மையினால் ‘அவர்களெல்லாம் தோற்றம், நிலை, இறப்பென்னும் உபாதி மூன்றினையும் கொண்டு நிற்கும் பசுக்களாவார்கள்’. உவர்க்கெல்லாம் பரம காரணனாய் உயர்வொப்பின்றி விளங்கும் பசுபதியாகிய தனி முதற்பொருள் நீயே என்கின்ற ஐயப்பாடில்லாத உண்மையறிவை மங்கணிகன் எய்தினான் என்று அவனது ஞானத்துதியினால் பாரதத்தில் தெளிவாகப் புலப்படுத்தினார்.

குறிப்பு: மையற்கடலில் வீழ்ந்ததால் அயன் முதலிய தேவர்கள் யாவரும் பிறந்திறந்து வரும் பசுக்கள்; அஃதெய்தாமையால் சிவபிரானே பசுபதி என்று மங்கணிகன் மெய்யுணர்ந்தான் என்று பாரதத்தில் வியாஸமுனிவர் தங்கருத்தைத் தெற்றென வெளியிட்டாரென்க.



கண்ணனருச் சுனனிருவர் கயிலை நண்ணிக்
கருத்தனினைத் தரிசித்துப் பிரம பாவ
நண்நிறை சிவானந்த வெள்ள மூழ்கி
நாடுபிற சம்பந்த மின்றி யிற்றென்
றேண்னரிய பிரமசம் பந்த மாகி
யிலகுதரு மங்களெலா முடை நின்மாட்
டண்ணறடத் தச்சொருபப் பிரமவிலக் கணங்க
ளாயிரண்டுங் கூறிற்றை வியாதமுனி யறைந்தான்.(4)

(இது கண்ணனும் அருச்சுனனும் திருக்கயிலாயத்தினை அடைந்து சிவபிரானைத் தரிசித்துப் பிரம தியான முற்று உய்ந்தவாறு கூறுகின்றது)

பொருள்: இறைவனே!, வியாஸமுனிவர் ‘கண்ணன் அருச்சுனன் என்னும் இருவரும் கயிலையை அடைந்து, பரம காரணனாகிய நின்னைத் தரிசித்துப் பிரம பாவனையுற்று தம்முள்த் தோன்றி நிறைகின்ற சிவானந்த வெள்ளத்திற் படிந்து', ஆராய்ந்து நீக்கப்படும் பொது இயல்பிற்கு வேறாய், இன்ன இயல்புடையது என்று சிந்தித்தற்கரிய பிரம சமவாயமாய் விளங்குகின்ற சிறப்பியல்பும் முற்றறிவுடைய நினக்கு, பிரமத்தின் சிறப்பிலக்கணங்கள் இரண்டினையும் அணியாகக் கூறியதனை பாரதத்தில் உரைத்தார்.

குறிப்பு: கண்ணனும் அருச்சுனனும் கயிலை எய்திச் சிவபிரான் பிரமமாதல் தெளிந்து, சிவானந்தவநுபூதி கூடி இருவகைப் பிரம இலக்கணங்களும் சிவபிரானுக்குரியன என்னுந் துதிகூறி உய்ந்தாரென்று வியாஸர் பாரதத்தில் உரைத்தாரென்க.

'ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே சூழ்க'

தொடரும்...



சுபம்

Tuesday, November 15, 2016

பகவானும் பாரதமும்!, இஃது பாரத தாற்பர்ய சங்கிரகம் - 1


பாரத தாற்பர்ய சங்கிரகம் என்பது வடமொழியில் ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதரால் அருளிச்செய்யப்பெற்ற நூலாகும். இந்நூலில் கூறப்படும் செய்தி ஸ்ரீவியாஸமஹரிஷி தாம் அருளிய மஹாபாரதம் ஆகிய இதிகாசம் தொனிவிருத்தியால் பகவான் பரமேஸ்வரன் பரத்துவத்தை வெளியிட்டுள்ளார் என்பதாகும். இந்நூலில் உள்ள ஸ்லோகங்கள் இருபது. இந்நூலுக்கு உரையும் நூலாசிரியரே இயற்றினார் என்ப.

தமிழ் மொழிபெயர்ப்பு:
திருக்கயிலாய பரம்பரைத்
திருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்துவான்
சபாபதி நாவலரவர்கள்.



கணபதி துணை.
திருச்சிற்றம்பலம்.

பாரத தாற்பர்ய சங்கிரகம்

தற்சிறப்புப் பாயிரம்

ஆரி யத்துய ரப்பதீக் கிதன்முன மறைந்த
பார தத்தின்றாற் பரியசங் கிரகத்தைப் பாடற்
சீரி யற்றமி ழாலுரை செய்யவருள் செய்ய
வீர மும்மதக் குஞ்சரப் பிரானடி விழைவாம்.

(இது தெய்வ வணக்கவும், செயப்படுபொருளும் உணர்த்துகின்றது.)

பொருள்: ஸ்ரீமத் அப்பய்யதீக்ஷித மஹான் இயற்றிய வடமொழிப் பாரத தாற்பர்ய சங்கிரகத்தினைத் தென்மொழிப் பாவினால் உரைக்கத் திருவருள் வழங்க மூத்தபிள்ளையார் திருவடிகளைத் த்யானஞ் செய்வாம்.



நூல்
உலகளந்த மாயனவ தார மாகி
யுற்பவித்த வியாதமுனி பாண்டு மைந்தர்
பலமுறுநற் கதைதெரிக்கும் வியாச வாற்றாற்
பங்கயக்கண் மாலையதி கரித்துச் செய்த        
அலகில்வர னுறுபார தத்தி னாண்டாண்
டவனித்த மருச்சிக்கப் படுதி யென்று
நிலவுவளர் சடைப்பகவ கூறுமுகத் தானீ
நித்தியதத் துவமென்று விளக்கினானால்.(1)

(இது விஷ்ணுவானவர் எல்லாம்வல்ல பரமேஸ்வரனைப் பூஜித்துய்ந்தமை கூறுவது.)

பொருள்: பிறை வளர்தற்கு இடமாகிய சடையையுடைய பகவானே! உலகத்தினை அளந்த திருமாலின் அவதார விஷேடராய்த் தோன்றிய வியாஸமஹரிஷி, பாண்டு புத்திரர்களுடைய பயன்மிக்க நல்ல சரித்திரத்தினை அறிவிக்கும் கபட நெறியினால் செந்தாமரை மலர் போலுங் கண்களையுடைய கண்ணனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இயற்றிய அளவில்லாத மஹிமை பொருந்திய மஹாபாரதம் என்னும் இதிகாசத்தில் அங்கங்கே அக்கண்ணன் நீயே நித்யமும் பூஜிக்கப்படுகின்றாய் என்று சொல்லும் வாக்கினால் நீயே நித்தியமாயுள்ள பரதத்துவம் என்று புலப்படுத்தினார்!.

குறிப்பு: வியாஸமஹரிஷி பாண்டவர் சரித்திரங் கூறுவார் போன்று கண்ணன் மஹிமைகள் விளங்க இயற்றிய மஹாபாரதத்தில் அக்கண்ணன் எல்லாம் வல்ல சிவபிரானைப் பூஜித்த வரலாறு கூறுமுகத்தால்சிவபிரானே பூஜிக்கற் பாலனாகியுள்ள பரதத்துவம் என்பதை வெளியிட்டார்.



பிரமாதி சகலசக மோகத் தானே
பிணிப்புண்டங் கவமானப் பட்ட தென்றும்
பரமேச பகவநீ தானே யற்றாற்
பாட்டிலைமற் றஃதென்று முனி வியாதன்
தவரீச மங்கணிகன் றனாது காதைச்
சம்பந்தத் தாலினிது விளக்கிக் கூறி
உவமானங் கடந்தபரப் பிரம நீயென்
றுணர்த்திடவு மூர்க்கர்பிணங் குறுவ ரந்தோ.(2)

(இது சிவபிரான் இயல்பாகவே மோக வினையில் நீங்கி விளங்கும் ஏக முதலாயுள்ள பரப்பிரமப் பொருளென்பது கூறுகின்றது.)

பொருள்: பரமேஸ்வரனாகிய பகவானே! வியாஸ முனிவர் வேள்விக்களத்து பிரம்மன் முதலாகவுள்ள தேவக்கூட்டங்கள் யாவும் மயக்கத்தினாற் றுடகுற்று அவமதிப்பினை எய்திற்று. நீ ஒருவன் தானே அங்கே மயக்கத்தினை அடையவில்லை என்றும், தவத்தர்க்கு தலைவனாகிய மங்கணிகனது சரித்திர இயைபு பற்றி நன்கு தெளிவாகச் சொல்லி, ஒப்பில்லாத பரப்பிரமப் பொருள் நீயே என்று பாரதத்தில் அறிவுறுத்திடவும் அச்சோ! மூர்க்கர் உன் பரத்துவந் தேறமாட்டாது பிறந்து இறந்து உழலும் தேவர்களைப் பரமென்று மாறாடுவர்.

குறிப்பு: அயன் முதலாகவுள்ள தேவர்கள் எல்லாம் மங்கணிகன் மாயையிற் கட்டுற்று உழலுதலானும், சிவபிரான் அத்துடகுறாமல் மோகம் நீங்கி அருளுதலானும் அவனே பரப்பிரமப் பொருளாவான் என்று வியாஸ முனிவர் பாரதத்தில் கூறுதல் கேட்டுவைத்தும் உண்மை தேறாது பிணங்குவார்கள் பாசாண்டிகள்.

'ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே சூழ்க'

தொடரும்...


சுபம்



Sunday, November 13, 2016

உமையோர் பாகனும் பாகவதமும்!

விஷ்ணு புராணமாகிய பாகவதம்
விஷ்ணுவின் நவையைமறைத்து சிவபெருமையை
உரைத்தல்!

Note:- நவை= இழிவு, குற்றம், சிறுமை.

தேவர்கள், அசுரர்கள், மந்தரமலையை மத்தாக நாட்டிச் சமுத்திரத்தைக் கடையும்போது, மந்தரமலையானது வீழ ஆட்டம் காண, அப்போது விஷ்ணுவானவர் கூர்மவடிவெடுத்து மந்தரமலையை நிறுத்தினதும், கடலைக் கடையும்போது, இளைத்த அசுரரையுஞ் சுரரையுங் கடையாமல் நிறுத்தி, தான் ஆயிரங்கரத்தைப் பொருந்திக் கடலைக் கடைந்ததும் இவைகள் விஷ்ணுவிற்குப் பெருமையேயாம். விஷ்ணு ஆயிரங்கரங்களால் அதிக வேகத்தோடு கடலைக் கடையும்போது அங்கு வெளிப்பட்ட ஆலகால விஷத்தை அடக்கித் தேவர்கள் அசுரர்களைக் காவாமல் விட்டது விஷ்ணுவின் சிறுமையேயாம்!. விஷ்ணுவானவர் அவ்விடம் இருந்து புறப்பட்ட ஆலகாலவிஷத்தினால் தேவர்கள் அசுரர்கள் காணும்படி மூடப்பட்டு, அவ்வாலகால விஷமயமா யிருத்தல் விஷ்ணுவின் சிறுமையினுஞ் சிறுமையேயாம்!.

விஷ்ணுவின் புராணமாகிய நாலும் விஷ்ணுவின் நவையை(தவறு,இழிவை,சிறுமையை) மறைத்ததென்றது எதனால் எனின் கடலின்கண்ணிருந்து புறப்பட்ட ஆலகாலவிஷத்தைக்கண்ட தேவர்கள் அசுரர்கள் அஞ்சும்போது விஷ்ணுவானவர் அவர்களை நோக்கி நீங்கள் அஞ்சவேண்டாம் என்று சொல்லி வேகமாய்வந்த ஆலகாலவிஷத்திற்கெதிரே ஒருகணப்போது நின்று அதன் உக்கிரத்தை அடக்க, அவ்வாலகாலவிஷமானது அடங்காமல் தமக்கெதிரே வந்தெதிர்த்த விஷ்ணுவைமூடி மறைக்க விஷ்ணுவானவர் தேகமானது கருகப்பெற்று அந்த இடத்தைவிட்டு நீங்கி விரைவாக கயிலாயம் சென்று சிவபெருமானிடத்திலே அடைக்கலம்புகுந்து, உயிர்பெற்ற செய்தியையும், விஷ்ணுவானவர் அநேகமாகவே சிவபெருமானைத் துதித்துத் தம்மைக் கொள்ளவந்த ஆலகால விஷத்தையுண்டு எமது உயிரைக் காத்தருள வேண்டும் என்று துதித்ததையுமாம்.



வைஷ்ணவர் வாய்மத கண்டனம்!

விஷ்ணுவானவர் தேவர்களும் அசுரர்களும் ஆலகாலவிஷத்திற்கஞ்சித் தம்மைவிட்டு நீங்கிக் கைலாயத்திலே சென்று சிவபெருமானிடத்தில் அடைக்கலம் புகுந்து, அச்சிவபெருமானால் உயிர்பெற்றுய்ந்து தமது பக்கத்தின்கண் வருங்காறுந் காத்தல் தொழிலை நடத்திக் கொண்டிருந்தாரோ ?; அல்லது பரமேஸ்வரனையும், சிவாகமங்களையும், சிவசின்னங்களையும், சிவனடியார்களையும் நிந்தனை செய்கின்ற தமது அடியார்களாகிய வைஷ்ணவர்களுக்கு அருள் புரிந்துகொண்டிருந்தாரோ?; அல்லது, நமது பக்தர்களாகிய வைஷ்ணவப் பிணங்களைச் சுடுகின்ற சுடலையுள் நின்று கூத்தாடிய ருத்திரன் இருக்கும் கைலாயத்திலே தேவர்களும் அசுரர்களும் சென்றார்கள் என்று துக்கம் பொருந்தி இருந்தாரோ?; அல்லது தேவர்களும் அசுரர்களும் நஞ்சுக்கஞ்சி ஓடத் தாம் அந்த வேடிக்கையைப் பார்த்துக் கொண்டிருந்தாரோ?; அல்லது, திருப்பாற்கடலில் ஆதிசேடன் மீது நித்திரை செய்துகொண்டிருந்தாரோ?; அல்லது, ஸ்ரீரங்கம், திருப்பதி, திருவல்லிக்கேணி முதலாகிய திருப்பதிகளிலே தமது அடியார்களாகிய வைஷ்ணவர்கள் கொடுத்த புளியோதனம், ததியோதனம், வடை, தோசை, சர்க்கரைப்பொங்கல் ஆகிய இவைகளை உண்டு கொண்டிருந்தாரோ?; அல்லது, தமது புகழை விளக்கவந்த ராமானுஜர் வேதசூத்திரத்திற்குச் செய்த பாஷ்யத்தை வாசித்துக் கொண்டிருந்தாரோ ? இச்செய்திகளில் ஒன்றையாவது விஷ்ணுவின் புகழைக் கூறவந்த பாகவத புராணம் பேசாமல் இருந்தது வஞ்சகமோ?; அல்லது நூற் குற்றமுண்டாகுமென்றோ அறியேம்!.

மேல் பதிவிற்குப் பிரமாணமும், தேவர்களும் அசுரர்களும் பிரமனும் விஷ்ணுவும் ஆகிய இவர்கள் எல்லாம் வல்ல சர்வேஸ்வரனுடைய திருவருள்பெற்றுக் கடலைக் கடையாத காரணத்தினால் கொடிய ஆலகாலவிஷம் எழுந்தது என்பதற்குப் பிரமாணமும்:-
  •        பாகவதம்; கூர்மப்படலம்,
  •        உபதேசகாண்டம்;கூர்ம அவதாரப்படலம்,
  •        கந்தபுராணம்; ததீசி யுத்தரபடலம்.


'ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே சூழ்க' 

சுபம்