Sunday, November 20, 2016

பகவானும் பாரதமும்!, இஃது பாரத தாற்பர்ய சங்கிரகம் - 2



பாரத தாற்பர்ய சங்கிரகம் என்னும் தொடரான பதிவில், சென்ற வாரம் மட்டிலே பகுதி ஒன்றானது பதிவிடப்பட்டது. ஆக, பாரத தாற்பர்ய சங்கிரகம் பகுதி ஒன்றைப் படிக்கத் தவறிய அன்பர்கள் தயவு கூர்ந்து முதலாவது பகுதியைப் படித்த பிற்பாடே  இந்தப் பதிவைப் படிக்குமாறு தயவுடன் கேட்டுக் கொள்கிறேன்.






முற்கிளந்த பிரமாது மோக வாழி
மூழ்கிடநீ யதுமூழ்கா விசேடத் தானே
யுற்பவமே யிருப்பிறப்புற் றார் களன்னோ
ருவர்க்குமுதற் காரணமா யுயர்வொப் பில்லாத்
தற்பரவுத் தமமான பொருணீ யென்னுஞ்
சங்கையிறத் துவஞானந் தலைப்பட் டானென்
றற்புத்தமங் கணிகன்வாக் கதனான் வாத
ராயணன்றெற் றெனவெளியிட் டருளி னனால்.(3)

பொருள்: வியாஸமுனிவர் முன்னர்க்கூறிய பிரம்மன் முதலாகவுடைய தேவர்கள் யாவரும் மையற்கடலிலே முழுக, நீ அத்துடக்கெய்யாத மேன்மையினால் ‘அவர்களெல்லாம் தோற்றம், நிலை, இறப்பென்னும் உபாதி மூன்றினையும் கொண்டு நிற்கும் பசுக்களாவார்கள்’. உவர்க்கெல்லாம் பரம காரணனாய் உயர்வொப்பின்றி விளங்கும் பசுபதியாகிய தனி முதற்பொருள் நீயே என்கின்ற ஐயப்பாடில்லாத உண்மையறிவை மங்கணிகன் எய்தினான் என்று அவனது ஞானத்துதியினால் பாரதத்தில் தெளிவாகப் புலப்படுத்தினார்.

குறிப்பு: மையற்கடலில் வீழ்ந்ததால் அயன் முதலிய தேவர்கள் யாவரும் பிறந்திறந்து வரும் பசுக்கள்; அஃதெய்தாமையால் சிவபிரானே பசுபதி என்று மங்கணிகன் மெய்யுணர்ந்தான் என்று பாரதத்தில் வியாஸமுனிவர் தங்கருத்தைத் தெற்றென வெளியிட்டாரென்க.



கண்ணனருச் சுனனிருவர் கயிலை நண்ணிக்
கருத்தனினைத் தரிசித்துப் பிரம பாவ
நண்நிறை சிவானந்த வெள்ள மூழ்கி
நாடுபிற சம்பந்த மின்றி யிற்றென்
றேண்னரிய பிரமசம் பந்த மாகி
யிலகுதரு மங்களெலா முடை நின்மாட்
டண்ணறடத் தச்சொருபப் பிரமவிலக் கணங்க
ளாயிரண்டுங் கூறிற்றை வியாதமுனி யறைந்தான்.(4)

(இது கண்ணனும் அருச்சுனனும் திருக்கயிலாயத்தினை அடைந்து சிவபிரானைத் தரிசித்துப் பிரம தியான முற்று உய்ந்தவாறு கூறுகின்றது)

பொருள்: இறைவனே!, வியாஸமுனிவர் ‘கண்ணன் அருச்சுனன் என்னும் இருவரும் கயிலையை அடைந்து, பரம காரணனாகிய நின்னைத் தரிசித்துப் பிரம பாவனையுற்று தம்முள்த் தோன்றி நிறைகின்ற சிவானந்த வெள்ளத்திற் படிந்து', ஆராய்ந்து நீக்கப்படும் பொது இயல்பிற்கு வேறாய், இன்ன இயல்புடையது என்று சிந்தித்தற்கரிய பிரம சமவாயமாய் விளங்குகின்ற சிறப்பியல்பும் முற்றறிவுடைய நினக்கு, பிரமத்தின் சிறப்பிலக்கணங்கள் இரண்டினையும் அணியாகக் கூறியதனை பாரதத்தில் உரைத்தார்.

குறிப்பு: கண்ணனும் அருச்சுனனும் கயிலை எய்திச் சிவபிரான் பிரமமாதல் தெளிந்து, சிவானந்தவநுபூதி கூடி இருவகைப் பிரம இலக்கணங்களும் சிவபிரானுக்குரியன என்னுந் துதிகூறி உய்ந்தாரென்று வியாஸர் பாரதத்தில் உரைத்தாரென்க.

'ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே சூழ்க'

தொடரும்...



சுபம்

No comments:

Post a Comment