Thursday, May 21, 2015

சதுர்வேத விவரணம்


"எல்லா மன்வந்தரங்களிலும் வரும் துவாபரயுகங்கள் தோறும்  விஷ்ணுமூர்த்தியானவர் தர்மத்தை விரும்பி வியாசராய் அவதரித்து உயிர்களுடைய நன்மைகளை கருதியவராய் வேதத்தை சகோப சாகைகளாயும் விதிப்படி புராணங்களையும் இடைவிடாமற் செய்கின்றார். கலியுகத்தில் வேதமோதுகிறவர்கள் அற்பாயுளுள்ளவர்களாகவும், அற்ப புத்தியுடையவர்கலாகவும் இருப்பார்கள் என்று அறிந்து யுகந்தோறும்  புண்ணியமான சம்ஹிதைகளையும் செய்துவருகின்றார்."
தேவி பாகவதம் :- ஸ்காந்தம் ஒன்று;(புராண சங்கியை)அத்தியாயம் மூன்று: ஸ்லோகம் 17-24



வியாசர் வேதத்தை ரிக்,யஜுர்,சாம,அதர்வணம் என்று நான்குவகையாகப் பிரித்து முறையே அவற்றை பைலர், வைசாம்பாயனர், ஜைமினி, ஸுமந்து என்ற நான்கு சிஷ்யர்களுக்கு போதித்து அவரவர்கள் அந்தந்த வேதங்களை தத்தம் சிஷ்ய பரம்பரை மூலமாய் காப்பாற்ற வேண்டுமென்று உத்தரவளித்தார். அப்படியே இப்பவும் நடந்துவருகிறது; அதனால் தான் சிலர் ரிக் வேதிகளாகவும், சிலர் யஜுர்வேதிகளாகவும், சிலர் சாம வேதிகளாகவும், சிலர் அதர்வண வேதிகளாகவுமிருக்கிறார்கள்.


யாகத்தில் ஹோதா, அத்வர்யு, உத்காதா, பிரம்மா என்று நான்கு பேர்கள் முக்கியமானவர்கள்(ஒவ்வோர் யாகத்தை செய்யும் வேத வேதியர்கள் முறையே இந்த நாமங்களால் அழைக்கபடுவர்). அவர்கள் முறையே முற்கூறிய நான்குவேதங்களையும் தனித்தனியாக நன்றாய் கற்றவர்களாக இருக்கவேண்டும்.

ரிக் வேதம்: பசுபதியாகிய மகேஸ்வரனை  துதித்து,  யாகத்தின் அக்னியில் ஹோமம் செய்யவேண்டிய கிரியைகளைப் பற்றிச் சொல்கிறது. அவற்றையறிந்து செய்கிறவர் ஹோதா எனப்படுவார்.

யஜுர் வேதம்: பரம்பொருளின் பஞ்சாக்ஷர மந்திரத்தை ஹிருதயமாக கொண்டு, சர்வேஸ்வரனின் பரிவார தேவதைகளை அழைத்தல், தேவதைகளை ஸ்துதித்தல், வேதிகை, அதன் செங்கல்கள், யூபஸ்தம்பம் முதலியவற்றின் விவரணங்களையும், அக்னி ஹோத்ரம் முதலிய விஷயங்களையும் கூறுகிறது. அவற்றையறிந்து யாகத்தை நடத்துபவர் அத்வர்யு எனப்படுவார்.

ஸாம வேதம்: சர்வலோகத்துக்கும் அதிபதியாயும், யாகத்தின் அதிஷ்டான தேவனுமாகிய ஈசனை ஸ்துதித்து, செய்யவேண்டிய கிரியைகளைப் பற்றிக்கூறுகிறது. ஸாமகானம் செய்து கிரியைகளை செய்கிறவர் உத்காத எனப்படுவார்.

அதர்வண வேதம்: ஈஸ்வரனை உபாஷித்து யாகம் செய்யும் ஹோதா, அத்வர்யு, உத்காதா இவர்களால் செய்யப்படும் கிரியைகளில் சிறுபிழைகள் தவறி ஏற்படின் அதனை நிவிர்த்திகின்ற கிரியைகளைப் பற்றிக்கூறுகிறது.  அம் மூவர்களின் கிரியைகள் தப்பிதமில்லாமல் நடக்கும்படி அவற்றை மேல்பார்த்துகொண்டு இருப்பவர் பிரம்மா எனப்படுவார்.
பின்னும் அதர்வணவேதத்தில் நாட்டையாளும் மன்னருக்கும்(ஜனாதிபதி), நாட்டில் வாழும் மக்களுக்கும், நேரிடும் ஆபத்துக்களை நிவிருத்தி செய்யவும், உலகத்திற்கு துர்பிக்ஷத்தை போக்கி ஸுபிக்ஷத்தையுண்டுபண்ணவும், சாதனமான பற்பலவிதமான கிரியைகள் கூறப்படுகின்றது.

நான்குவேதங்களும் முறையே இருபத்தொன்று, நூறு, ஆயிரம், ஒன்பது என்ற எண்ணிக்கையுற்ற சாகை(பிரிவு)களுள்ளன. முற்கூறிய வேதங்களில் சிலபாகம் மந்த்ரங்களாகவும், சிலபாகம் விதிகளாகவும், சிலபாகம் நிஷேதங்களாகவும், சில பாகம் அர்த்தவாதங்களாகவுமிருக்கின்றன.

ஜபம், ஹோமம், ஸ்துதி, தானம், ஆராதனம், யாகம் முதலியவற்றை செய்யுங்காலங்களில் பிறர்கட்குத் தெரியாமல் மெள்ள உச்சரிக்கக் கூடியவைகள் மந்திரங்கள் எனப்படும். மந்த்ரம் என்பதற்கு மனனம் செய்கிறவரை காப்பாற்றுவது என்று பொருள். இறைவனை வணங்கு, சத்தியத்தைச் சொல், தர்மத்தைச் செய், மாமிஷத்தை உண்ணாதே இவை போன்ற ஸத் காரியங்களில் நியமனம் செய்கின்றவைகள் விதிகள் எனப்படும். இஃதில் விதி என்பதற்கு ஏவுதல் என்று பொருள். பொய்யைச் சொல்லாதே, மயக்கவஸ்துக்களை சாப்பிடாதே, கள் குடியாதே, பிறர் பத்னிகளிடம் செல்லாதே, என்ற இவை போன்றவற்றை விலக்குபவைகள் நிஷேதங்கள் எனப்படும். நிஷேதம் என்பதற்கு தடுத்தல் என்று பொருள். விதித்த கர்மங்களை ஸ்துதி செய்வதால் அவை மேலானவை என்றும் நிஷேதித்த கர்மங்களை நிந்திப்பதால் அவை தாழ்ந்தவை என்றும் நமக்கு போதிப்பவைகள் அர்த்தவாதங்கள் எனப்படும். சிரத்தையுடன் தானம் செய்யவேண்டும் என்பது விதி. தானம் செய்வதினால் எல்லாக் காரியமும் சித்தியாகின்றது என்பது விதியின் ஸ்துதி. பொய்யை சொல்லகூடாது என்பது என்பது நிஷேதம். பொய் சொல்லுகிறவன் அடியோடு நசிவான் என்பது நிஷேதத்தின் நிந்தை. இதனால் விதித்த கர்மங்கள் செய்யத்தகுந்தனவென்றும், நிஷேதித்த கர்மங்கள் தள்ளத்தகுந்தனவென்றும் நாம் தெரிந்துகொள்ளுகிறோம். அர்த்தவாதம் என்பதற்கு விஷயத்தை விளக்கிச் சொல்லுதல் என்று பொருள். 


பின்னும் வேதங்களில், கர்மகாண்டம், உபாஸனா காண்டம், ஞான காண்டம் என்ற மூன்று பிரிவுகள் உள. கர்மகாண்டம் கர்மங்களின் ஸ்வரூபத்தையும், உபாஸனா காண்டம் யோகத்தின் ஸ்வரூபத்தையும், ஞானகாண்டம் பிரம்மத்தின் ஸ்வரூபத்தையும் விளக்குகின்றன. ஞானகாண்டம் வேதாந்தங்கள் என்றும், உபநிஷத்துக்கள் என்றும் கூறப்படும். உபநிஷத் என்பதற்கு பிரம்மமாகிய ஈசன் சமீபத்தில் சேர்ப்பிவிக்கிறது என்று பொருள்.  முற்கூறிய வேதமென்ற ஒரு பெரிய விருக்ஷம் கடர், கெளதுமர், திரித்திரி முதலியவர்களால் காடகம், கெளதுமம், தைத்ரீயம் முதலிய அநேக கிளைகளுடன் பிரிக்கப்பட்டு இப்பொழுதும் விளங்கிக்கொண்டிருக்கிறது.

சுபமஸ்து

No comments:

Post a Comment