Saturday, May 16, 2015

சிந்துவெளி நாகரீகமும் சிவவழிபாடும்

சிந்துவெளி என்பது சிந்து, பலுசிஸ்தான், பஞ்சாப், இராசபுத்தான், சௌராட்டிரம் என்னும் பகுதிகளை அடக்கிய நிலப்பரப்பு ஆகும். ரிக் வேதத்திலும், இதிகாசங்களிலும் இப்பகுதியின் தொன்மை பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்ததால், இதனை அறிதற்குப் பல அறிஞர்கள் ஆர்வமுற்றனர். 1922-22 ஆம் ஆண்டுகளில் யோன் மார்சல் என்பார் தலைமையில் இந்தியத் தொல்பொருள் ஆராய்வாளர் சிந்துவிலுள்ள மொஹஞ்சதாரோவிலும், பஞ்சாப்பிலுள்ள ஹரப்பாவிலும் உள்ள மண்மேடுகளை அகழ்ந்து ஆராய்ந்தனர். பின்பு மசும்தார்,மக்கே ஆகியோர் 30 க்கு மேலான இடங்களை ஆராய்ந்தனர். தொடர்ந்து இராசபுத்தானத்திலும்,  சௌராட்டிரத்திலும் 25 இடங்களை ஆராய்ந்தனர். இவைகளின் பேறாகப் புராதன நாகரீக காலப்பொருட்கள் பலவும், எழுத்துக்களும், கட்டடங்களின் சிதைவுகளும் கிடைத்தன.
இப்பொருள்களின் அமைப்புக்களையும், எழுத்துக்களையும் ஆராய்ந்த அறிஞர்கள் இவை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனவும், இங்கு வாழ்ந்த மக்கள் சிறந்த நாகரீகம் உள்ளவர் எனவும், இங்கு வாழ்ந்தவர்களே தொல்குடியினர் எனவும், உலகிலுள்ள மற்ற இனத்தவர்களுடன் இவர்கள் தொடர்பு உள்ளவர்களாக வாழ்ந்திருக்கின்றனர் எனவும் கூறியிருக்கின்றனர். இங்கு கிடைத்த பொருட்கள் பல சைவத்தின் தொன்மையை விளக்குவனவாகும். 
வரலாற்ராய்வாளர்கள் நூல் சான்றுகளை அதிகம் ஏற்பதில்லை தொல்பொருட் சான்றுகளையே அதிகம் ஏற்பார்கள், ஒப்புக்கொள்வார். அதனால் இவ் ஆராய்ச்சிக்கு முன் தொல்குடியினரின் மிகச்சிறந்த நாகரீகம் பற்றியும், சைவத்தின் தொன்மை பற்றியும் உலகம் நன்கு உணரவில்லை. உலக நாகரீகங்களுட் சிந்துவெளி நாகரீகமே தலையாயது எனவும், சைவம் பழமையான சமயம் எனவும் இவ்வகழ்வாராய்வின் பின்பே உலகம் உணரத்தொடங்கியது. ஆகவே இவ்வாராய்வு சைவத்தின் நீண்ட வரலாற்றில் ஓர் அரிய ஒளிவிளக்காகும்.
களிமண்ணினால் செய்து சுடப்பட்ட முத்திரைகள், தாயத்துக்கள், கல்லினால் செய்த சிவலிங்கங்கள், யோகநிலையில் உள்ள சிவ உருவம், கொம்புகள் உள்ள சிவ உருவம், பெண் தெய்வ வடிவங்கள், உருவகங்கள் பொறித்த செம்பு, வெண்கலத்தகடுகள், நந்தி உருவங்கள், ஆலய அமைப்புக்கள், பூசைக்குரிய பொருட்கள் ஆகியன இப் பிரதேசத்தில் கிடைத்தன.
இவைகளுள் சிவலிங்கங்களும், யோகநிலையில் உள்ள சிவ உருவமும் முக்கியமானவை. அறுநூற்றுக்கு மேலான சிவலிங்கங்கள் இங்கு கிடைத்துள்ளன. இவை மாக்கல்லினாலும், மரத்தினாலும் செய்யப்பெற்றவை, சில லிங்கங்கள் பீடம் இல்லாமலும் கிடைத்தது, சில சிவலிங்கங்களில் உருவங்கள் உள. இதனால் பரவலாக இவ்விடங்களில் சிவலிங்க வழிபாடு அக்காலத்தில் இருந்திருக்கிறது என்பது தெள்ளத்தெளிவு. யோகநிலையில் உள்ள சிவ உருவம் சிந்துவெளி மக்களின் உயர்ந்த நிலைச் சிவநெறிக் கோட்பாட்டை உணர்த்துகிறது. மக்களும், விலங்குகளும் சூழ்ந்திருக்கும் நிலையில் உள்ள சிவ உருவமும் காணப்படுகின்றது. இது சிவன் உலகின் உயிர்கள் அனைத்திற்கும் தலைவன் எனச் சிந்துமக்கள் கொண்டிருந்த கொள்கையை உணர்த்துகிறது. இன்னொரு உருவத்தில் சிவனின் தலையில் இரு கொம்புகள் காணப்படுகின்றது இதன் அர்த்தம் சிவன் முதன்மையும், அதிகாரமும் உள்ளவன் என்பதை உணர்த்துகிறது. இங்கு பல நந்தி உருவங்களும், பெண் தெய்வ உருவங்களும், மர உருவங்களும் கிடைத்துள்ளன. இவற்றைக்கொண்டு அந்நாளிலே இங்கு சக்திவணக்கம், நந்தி வணக்கம், நாக வணக்கம் போன்றவை இருந்திருக்கின்றன என்பதை அறிந்துகொள்ளலாம்.
கிடைத்த பொருட்களுள் தகடொன்றில் நந்தியோடு கூடிய ஊர்வலக்காட்சி ஒன்று காணப்படுவதில் இருந்து அக்காலத்தில் சிந்துவெளி மக்கள் சமய விழாக்களை சிறப்பாகக் கொண்டாடி வந்திருக்கின்றனர் என்பதை உணர்ந்து கொள்ளக்கிடக்கிறது. இன்னொரு தகட்டில் பெண்தெய்வத்தின் முன் சில பெண்கள் உணவுப்பண்டத்தைக் கொண்ட தட்டுகளை ஏந்தியபடி நிற்குங் காட்சி காணப்படுகிறது. இக்காட்சி தெய்வத்திற்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வழக்கம் இருந்ததைக் காட்டுகின்றது.
மண்மேடுகள் மூவகை அடுக்குகளைக் கொண்டிருந்தமையாலும், கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் கல், மரம், செம்பு, வெண்கலம் ஆகியவைகளால் செய்யப்பெற்றிருந்ததாலும், சிந்து வெளியில் சிவவழிபாடு கற்காலம், செம்புக்காலம், வெண்கலக்காலம் ஆகிய மூன்று வகைக்காலங்களிலும் நீடித்து இருந்திருக்கிறது. சிவவழிபாடு மேற்காசியாவில் பரவச் சிந்துவெளி மக்கள் உதவினர் எனவும் அறிஞர் பலர் கூறுகின்றனர். அங்கு கிடைத்த எழுத்துக்களைத் தெளிவாக வாசித்தறியக்கூடிய (பல எழுத்துக்கள் மங்கிய, வித்தியாசமான குறியீடுகள் கொண்ட நிலையில் உள்ளது) நிலை  ஏற்படின் அங்கு நிலவிய சிவவழிபாட்டைப் பற்றிய உண்மைகள் பல மேலும் உலகிற்கு கிடைக்கும். அக்காலம் சிந்துவெளிச் சிவவழிபாட்டின் பெருமையையும், அதன் தொன்மையையும் மேலும் நன்கு அறிய வாய்ப்பு உண்டாகும்.   


சுபமஸ்து

No comments:

Post a Comment