Saturday, May 16, 2015

சிந்துவெளி ஆராய்ச்சியும் சைவசமயத்தின் தொன்மையும்


இன்றைய காலகட்டத்தில் பலர் பலவிதமான எண்ணக்கருவூலங்களுடன் சிந்துவெளி நாகரீகத்தினை பற்றி எண்ணுகின்றனர், எழுதுகின்றனர் அதில் “இந்து, இந்துகள்” என்னும் சொற்பதமே போதிக்கபடுகிறது. இந்த போதனையானது முன் வரலாற்றை மறைக்க பூசப்படும் மேல் பூச்சு என்று கொள்ளலாம். இந்த கட்டுரையில் எனது எழுத்துக்கள் அதிகம் இல்லை, நான் படித்த நூல்கள், கிடைத்த பொக்கிஷமான துணுக்குகள் வைத்தே நிரப்பப்படுகிறது.

சைவசமயம் வரலாற்றுக்கு முந்திய சமயம். உலகில் முதற்தோன்றிய சமயம் இதுவேயாம். புராதன காலத்தில் இச் சமயம் உலகில் பல பகுதிகளிலும் விளங்கியுள்ளது. இதன் தொன்மைக்குப் பழம்பெரும் நூல்கள், வழிபாட்டு முறைகள், வரலாற்றுக்குறிப்புகள், தொல்பொருட்கள், அகழ்வாராய்ச்சிகள் என்பன சான்றாக உள்ளன. சைவம் சிவ சம்பந்தமானது. சிவம் - கடவுள், சமயம் – நெறி. வேதாகமங்களும், புராணங்களும் சைவத்தின் தொன்மைக்குச் சான்றாவன. வேதங்களின் காலம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன், வரையறை இன்னது என்று கூற இயலாது என வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
சிவபுராணங்கள் இறைவனது மஹிமைகளையும், உலகத்தோற்றங்களையும், தத்துவங்களையும், வரலாறுகளையும் கூறுவன. பழையகாலத்தில் மதுரையில் நடந்தனவாகத் திருவிளையாடற் புராணம் கூறும் செய்திகள் வரலாற்றினோடு தொடர்புள்ளவையாக காணப்படுகின்றன. கடல் கொண்ட தென் நிலப்பரப்பில் வாழ்ந்த சூரன் முதலியோரும், ஏனைய பகுதிகளில் வாழ்ந்ததோரும் சிவவழிபாட்டினர் என சமஸ்க்கிருத மஹா புராணமாகிய ஸ்காந்தமும், கச்சியப்பசிவாச்சாரியாரின் கந்தபுராணமும் கூறும். 
இராவணனும், வாலியும் நாள்தோறும் சிவவழிபாடு செய்தனர் எனவும், இராவணனைக் கொன்றதனால் இராமனுக்கு பிரம்மஹத்தி தோஷம் சூழ  அத் தோஷம் நீங்க இராமர் சிவவழிபாடு செய்தார் எனவும், பழைய இதிகாசமாகிய இராமாயணம் கூறுகின்றது. இவர்கள் வழிபட்ட தலங்கள் முறையே திருக்கோணேஸ்வரம், குரங்காடுதுறை, திருஇராமேஸ்வரம் என்பனவாகும். மற்றும் அருச்சுனன் தலயாத்திரை செய்து சிவ வழிபாடு செய்ததையும், அவன் தவமிருந்து சிவபிரானிடம் பாசுபதம் என்னும் படைக்கலத்தைப் பெற்றதையும், கண்ணனோடு திருக்கைலை சென்று வழிபட்டதையும் இன்னோர் மஹா இதிகாசமாகிய மஹாபாரதம் செப்புகிறது.( இராமயண பாரத காலங்கள் முறையே கி.மு. 3000 ^ , 1500 ^ )
பண்டைய ரிஷிகள், முனிகள், மக்கள் யாவருமே சிவ வழிபாட்டினராவர். ஆதிசோழ அரசனான முசுகுந்தன் பல இடங்களில் சிவலிங்கங்களை ஸ்தாபித்தான் என வரலாறு கூறுகிறது. திருக்கைலை, காசி, காளகத்தி, காஞ்சி, சிதம்பரம், திருவண்ணாமலை, மதுரை ஆகியவை மிகப்புராதனமான சிவஸ்த்தலங்கள் என புராணங்கள், வரலாறுகள் தெரிவிக்கின்றன.
கடவுட் திருவுருவங்கள், வழிபாட்டிடங்கள் ஆகியவைகளின் அமைப்புக்களின்படி சிவவழிபாடு இன்ன காலத்திலேயே உருவாகியது என்று திட்டவட்டமிட்டு கூறயியலாது. சிந்துவெளியின் அகழ்வாராய்ச்சியின்போது கிடைத்த சிவலிங்கங்களும், அதனோடு தொடர்புபட்ட ஏனைய தொல் பொருட்களும், திட்டவட்டமிட்டு கூற இயலாமல் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு அப்பால்^ பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் வெளிப்படுத்தி உள்ளனர். அதுமாத்திரமின்றி பரதகண்டத்திற்கு அப்பால் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் உலகின் பல பகுதிகளிலும் சிவவழிபாடு நிலவியதென்பதற்குப் போதிய சான்றுகள் பல கிடைத்துள்ளன...



ஆஸ்திரேலியாவிலலும், நியுசிலாந்திலும் உள்ள ஆதிமக்களின் மொழிகளில்”லிங்கம்” என்னும் சொல் காணப்படுகின்றது. நியூகினியாவில் காணப்படும் கிரியை முறைகள் சிவ வழிபாட்டின் தேய்வுகள் ஆகும். சுமாத்திராவிலும், ஜாவாவிலும், போர்னியாயோவிலும் பழைய சிவ வழிபாட்டிடங்களின் சிதைவுகள் காணப்படுகின்றன. பாலித்தீவில் சிவவழிபாடும், சிவாலயங்களும் இன்றும் உள்ளன. சீயத்திலும், கம்போடியாவிலும் பழைய சிவவழிபாட்டு உருவங்கள் கிடைத்திருக்கின்றன. சீயத்தில் பழைய ஆலயம் இருந்த ஓர் இடத்தில் மதவேறுபாடின்றி இன்றும் பொங்கல் பூசை செய்து வழிபடுகின்றனர்.
“ஜப்பானிய சிண்டோயிசிம்” என்னும் மதத்தில் சிவலிங்க வழிபாடு முதன்மையானது. பிற்காலத்தில் அவை நீக்கப்பட்டாலும், சில இடங்களில் இன்றும் இவை இருக்கின்றன. இவர்கள் குறிப்பிடும்”சிவோ” என்பது சிவனேயாம். திபெத் சீனாவினூடாகவே இவ்வழிபாடு ஜப்பானுக்குப் பரவியிருக்கலாம் என வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர்.பாபிலோனியாவில் நடந்த அகழ்வாராய்ச்சியின்போது ஆறாயிரம் ஆண்டுக்கு ^ முற்பட்டசிவலிங்கமும், சிவாலயத்தின் சிதைவுகளும் கிடைத்தன. இச் சிவ உருவம் மழுவுடனும், இருபுறமும் தலை உள்ள சூலத்துடனும் இடபத்தின் மீது காணப்படுகிறது. இங்கு கண்டெடுத்த களிமண் பட்டயத்தில் “சிவன்” என்னும் இடப்பெயர் காணப்படுகிறது.  இவர்களின் மாதம் ஒன்றிற்கு “சிவன்” எனப்பெயர் உண்டு. சுமேரியரின் கடவுளுக்கு “எல்” எனப்பெயர். தமிழில் “எல்” என்பது சூரியனைக்குறிக்கின்றது.

சீரியாவில் சிவன் சிலையும், சிவன் உருவம் பொறித்த வேண்கலத்தட்டும் கிடைத்துள்ளன. இச் சிவ உருவம் பாபிலோனியச் சிவ உருவம் போன்றது. சின்னாசியாவில் சிவன்-சக்தி-கோயில் என்பவைகளின் உருவங்கள் பொறித்த நாணயம் ஒன்று கிடைத்துள்ளது. எகிப்திய சமாதிச் சுவர்களில் சிவலிங்க உருவங்கள் காணப்படுகின்றன. லிபியப் பாலைவனத்தில் உள்ள பசுந்தரை ஒன்றிற்கு பெயர் சிவன். இங்கு பழைய ஆலயமும் வழிபாடும் இன்றும் உண்டு. கிறீட் தீவில் “சிவன்” என்னும் ஓர் இடம் இருக்கிறது. இங்கு சிவன்,சக்தி உருவங்களும், இவ்வுருவங்களுள்ள நாணயங்களும், சிவலிங்கங்களும் கிடைத்துள்ளன. இச் சிவ உருவமும் பாபிலோனியச் சிவ உருவம் போன்றதேயாம். இங்கு சிவாலயங்கள் பண்டை நாட்களில் இருந்திருக்கின்றன என்பதை மேற்கூறிய விபரங்கள் தெளிவுபடுத்துகின்றன. கிரேக்க நாட்டில் சிவவழிபாட்டுத் தொடர்பன கிரியைகள் ”விசா” என்னும் இடத்தில் இன்றும் நடைபெற்று வருகிறது. இவர்கள் லிங்கங்களை பொது இடத்தில் வைத்து எண்ணெய் இட்டு வழிபட்டனர் என கி.மு.4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க அறிஞரான தியோபிரேசியஸ் கூறியுள்ளார். உரோம் நாட்டிலும் சிவலிங்கங்களும் கிடைத்துள்ளன. உரோமர் சிவலிங்க வழிபாட்டை மேற்கு ஐரோப்பாவில் பரப்பியுள்ளனர் என்பதற்குப் பல ஆதாரங்கள் உண்டு.  

அமெரிக்காவுக்கு ஐரோப்பியர் முதலில் சென்றபோது மெக்சிகோ, பெருகெயிற்றி ஆகிய இடங்களில் உள்ளவர்கள் சிவவழிபாடு உள்ளவர்களாக கண்டனர். அங்கு பல இடங்களில் சிவலிங்கங்கள் கிடைத்துள்ளன. கலிபோர்னியாவில் கொலரடோர் நதிக்கு அயலில் உள்ள சிவன் என்னும் பழைய பீடபூமியிலுள்ள மலையில் பழைய சிவாலயம் இருக்கிறது. இது பத்தாயிரம் ஆண்டு பழமையானது எனத் தொல்பொருளியலாளர்கள் கூறுகின்றனர். சிவ வழிபாடு பல நாடுகளில் பரவியிருந்தமையைத் தெளிவுபடுத்துவதில் ஆதர் லில்லி, டெயிலர், பல்பூர், கில்பேர்ட், சிலாற்றர், கெலோனல் டொட்வடல், ஸ்.ரீபன்சன், கிரையர்சன், முகர்சி ஆகிய அறிஞர்கள் உதவியுள்ளனர். இவ்வாறு பண்டு உலகின் பல நாடுகளிலும் சைவம் பரவியிருந்தமையை இவர்கள் எடுத்துக்காட்டுவதுடன், அதனது தொன்மை பற்றியும் உலகிற்கு உணர்த்தியுள்ளனர். 

சிவன் வழிபாடு மேற்காசியா, கிறீஸ், உரோம் முதலிய நாடுகளில் மிகப் பழைய காலத்தில் பரவியிருந்தது. பிற்காலத்து மக்கள் அதன் வரலாற்றை மறந்து போனமையாலும், தம் தேசத்திற்கும் மனப்பான்மைக்கும் பொருந்தாத பழங்கதைகளைப் புனைந்து விட்டனர் என அறிஞர் ஆதர் லில்லி கூறுவார்.சிவலிங்க வணக்கம் உலகில் எல்லா நாடுகளிலும் ஒருகாற் பரவியிருந்தது என்பதற்குப் போதிய சான்றுகள் கிடைத்துள்ளன. சீனா, ஜப்பான், பசுபிக் கடற்தீவுகள் முதலிய இடங்களில் இவ்வழிபாடு இன்னும் முற்றிலும் மறைந்துவிடவில்லை என முகர்சி என்பவர் கூறுகின்றார்.
இங்கு நாம் அறிந்தவற்றால் சைவசமயம் எவராலும் தோற்றுவிக்கப்படாதது என்பதும், அது சிவபெருமானைப் போல அனாதியானது என்பதும், சர்வசங்கார காலத்தின் பின் மீள் ஸ்ருஷ்டியின் போது ஆன்மாக்களது அறிவிலே இறைவனருளால் அது தோன்றுமென்பதும், அவ்வாறு தோன்றிய சைவசமய உணர்வையே சிந்துவெளிப் பழங்குடி மக்களும், சங்ககால மக்களும் பெற்றிருந்தார்களென்பதும்,  அவர்கள் சிவபெருமானின் அருள் மூர்த்தங்கள் பலவற்றை வழிபட்டார்களென்பதும் தெளிவாம்.


குறிப்பு : “இந்து மதம்” என்ற சொல் தற்காலத்திலே நவீனர்களால் கொள்ளப்படும் சொல்லே அன்றி அது தனித்து ஓர் சமயமன்று என்பதை இங்கு விளங்கிக்கொள்ளவேண்டிய விடயமாகும்.


பார்க்க : - 5000 year old shiva linga
               ancient shiva linga in ireland
               shiva lingam in vatican

சுபமஸ்து

No comments:

Post a Comment