Tuesday, May 12, 2015

உபநிஷத் உவமைகள்,உருவகங்கள், உட்பொருள்.

உபநிஷத் மந்திரங்கள் சொற் சுருக்கத்திற் பொருள் கனிவும் செய்யுள் சுவைநயமும் பயக்கும் உவமை உருவக உத்திகளை தழுவி அதிகம் அமைந்துள்ளன. அவை கருதும் பொருளடைவு(உள் கருத்தை) பெறுவதற்கு, அகல விசாரித்துப் பல்வேறு நூற்பகுதிகளை நாடவேண்டுவதும் உளதாம்.



முண்டகோபநிஷத்தில் இருமந்திரங்கள் பின்வருமாறு அமைகின்றன,
பிரியா நண்புள்ள இருபக்ஷிகள் ஒரே அரசமரத்தினை பற்றியுள்ளன.அவற்றுள் ஒன்று இனிமையான அரசம் பழத்தை புசிக்கிறது. மற்றைய பக்ஷி புசிக்காமல் பார்த்துக்கொண்டு இருக்கிறது.

:-த்வா ஸுபர்ணா ஸயுஜா ஸகாயா ஸமாநம் வ்ருக்ஷம் பரிஷஸ்வஜாதே |
தயோரந்ய​பிப்பலம் ஸ்வாத்வத்த்யநஶ்நந்நந்யோ அபிசாகஶீதி ||1||
(த்ருதீய முண்டகே ப்ரதம​: கண்ட)

ஒரே அரச மரத்தில் புருஷன் சுதந்திரமின்மையால் மயங்கித் துன்பத்தில் மூழ்கிக்கிடக்கிறான். எப்போது அவன் இன்பத்தையுடைய ஈசனை பதியாக அறிந்து, அவரது மகிமைக் குணத்தை அறிகிறானோ அப்போது துன்பம் நீங்கியவன் ஆகிறான் .

:-ஸமாநே வ்ருக்ஷே புருஷோ நிமக்நோ()நிஶயா ஶோசதி முஹ்யமாந​:|
ஜுஷ்டம் யதா பஶ்யத்யந்யமீஶமஸ்ய மஹிமாநமிதி வீதஶோக​: ||2||


இனி இதே பாங்கில் ரிக் வேத மந்திரத்தையும் கவனித்தல் தகும்,
ஸமான வ்ருக்ஷே புருஷோ நிமக்னோ அநீசயா ஸோசதி முஹ்யமான:|
யுஷ்டம் யதா பச்யதி அன்யமீசம் அஸ்ய மஹிமானம் இதி வீதசோக||” 

இஃது ரிக்கின் பொருளானதுயாதொரு வ்ருக்ஷத்தில் பிரபஞ்சாதீதமாகிய அக்கிரத்தில் தந்தையாகிய சிவனளிக்கும் இனிய அரசம் பழத்தைப் பெறுமாறு யார் போயடைகிறார்களோ அவர்கள் தந்தையாகிய சிவனை அறியாமல் அதை அடையமாட்டார்கள்என்பதாகும்.

மேல் குறிப்பிட்ட உபநிஷத் மந்திரங்களிரண்டில், முதலாவதில் பழம் புசித்தல் என்ற உருவகத்துள் சிக்கிக்கிடப்பதென்ன என்பது, துன்பத்தில் மூழ்கிக்கிடக்கிறான் என்பதனால் ஒருவாறு புலப்படுகிறது. இறுதி மந்திரத்தில் அரசம் பழத்தை பெறுமாறு போயடைகிறார்கள் என்பது இஃது அவனுடைய மகிமைக் குணத்தை அடைகிறார்கள் என்பதனால் ஒருவாறு விளங்குகிறது. எனினும் இவற்றை மூடியுள்ள உருவகத்திரை முழுதாக நீங்கியதில்லை,

இங்கே அரசமரம் என்பது மாயாகாரியமான சரீரம். இனிய பழம் என்பது கன்மம். உண்ணாத பக்ஷி ஈசன்உண்ணும் பக்ஷி ஆன்மா அதாவது நாம். அது சுதந்திரம் இல்லாமல் இருப்பதற்கும் மயங்குதற்கும் காரணம் அதை அநாதியாகவே மறைத்திருக்கும் ஆணவம் என்ற விளக்கம் அயல் நூலறிவு கொண்டே ஊகித்துணர வேண்டியுள்ளது. அதுமாத்திரமன்றி இங்கு ஈசனின் மஹிமைக்குணங்கள் யாவை என்பதும் வேறேதுக் கொண்டே அறிதற்பாலன.

இதனை...
“அஸப்தம ஸ்பர்ஸமரூப மவ்யயம்
ததாரஸம் நித்யமகந்த வச்சயத் |
அநாத்யநந்தம் மஹத​: பரம் த்ருவம்
நிசாய்ய தந்ம் ருத்யுமுகாத் ப்ரமுச்யதே || 15||
(இதி காடகோபநிஷதி ப்ரதமாத்யாயே த்விதீயா வல்லீ)

:-சப்தமில்லாதவரும், ஸ்பரிசமில்லாதவரும், உருவமில்லாதவரும், அழிவில்லாதவரும், இரசமில்லாதவரும், நித்தியரும், ஆதியில்லாதவரும், அந்தமில்லாதவரும், மஹத்துக்கு மேலானவரும், நிலையானவரும் என வரும் மேல் குறிப்பிட்ட கடோபநிஷத் மந்திரம் முதலியவற்றால் அறியலாம்.,இறுதி மந்திரத்தில் சிவனை அறியாமல் அதனை அடையமாட்டார்கள் என்ற கருத்து,

அவரை ஆத்மாவிலே இருப்பவராக எந்த அறிஞர் காண்கிறாரோ அவருக்கே நித்தியானந்தமாகிய சுபம் . ஏனையோர்க்கவ்விதமில்லை இதனை...                                                     
 “தமாத்மஸ்தம் யே(அ)நுபஶ்யந்தி தீரா
ஸ்தேஷாம் ஸுகம் சாஸ்வதம் நேதரேஷாம் ||12||
எனவரும் ஸ்வேதாஸ்வதரோபநிஷத் ஷஷ்டோத்யாய மந்திரம் முதலியவற்றாலும் விளங்கக் கிடத்தல் காண்க.

இத்தகு மந்திரங்களில் அவ்வவற்றுக்கு இன்றியமையா விளக்கங்கள் அவ்வவற்றை சார்ந்திலா கொள்கை வேறுபாடுகளை உள்ளவர்கள் தமக்கேற்றவாறு இவற்றைப் பொருள் செய்வது விபரீதம் விளைய உதவியமையுமொன்று . குறித்த “த்வா ஸுபர்ணா…”  என்ற மந்திரத்தை உருத்திரதாபினி, அன்னபூரணி உபநிஷத்களில் மேற்கோள் காட்டும் ஏகான்மவாதிகள், பின்வருமாறு அவற்றுக்கு விளக்கம் கொடுத்திருத்தல் கண்கூடு..
“இரு பக்ஷிகளில் ஒன்று புசிக்க மற்றது பார்த்துக்கொண்டிருக்கிறதென்பது, ஆகாசமானது கடாகாசம் எனவும் மகாகாசம் எனவுங் கற்பிக்கப்பட்டு. சிவ – சீவ ரூபமாகக் காட்டப்பட்டுள்ளது என்பது அவ்விளக்கமாம்.

புசிக்கும் பக்ஷி, பார்த்துக்கொண்டிருக்கும் பக்ஷி விஷயத்துக்குக் கடாகாச மகாகாசம் யாதொரு தொடர்பில் கற்பிக்கப்பட்டது என இன்றுவரை எவருந் தெரிந்திலர்.

மேலும் “தஸ்மின் ஹம்சோ ப்ராம்யதே ப்ரஹ்மசக்ர” அந்தப் பிரம சக்கரத்தில் ஹம்சம் சுழல்கிறது என்பதில், ‘ஹம்ச’ என்பது யாது ? ‘பிரஹ்ம சக்கரம்’ என்பது யாது ? இவை விசாரனைக்குரியவையேயாம். காரணாகமத்தில் ‘ஹம்சோ நாம சதாசிவ’ என்பதுமுண்டு. சந்தர்ப்பாநுசார அடிப்படையில் இங்கு ‘ஹம்ச’ என்பது சீவான்மாவையே குறிக்கும் என்பது ஸ்வேதாஸ்வதரத்திற்கு விளக்கஞ் செய்துள்ள அ.விசுவநாதன், ஐ.பொன்னையா என்போர் கருத்தாகும்.  மறுபொருளாகிய பிரஹ்ம சக்கரம் பற்றிய செய்தி கைலாச சங்கிதையால் அறியப்படவேண்டிய ஒன்று.. இஃது நிற்க.

இனி, ஆன்மா, சிவசக்தி என்பவை இலகுவாக இனங்கண்டு கொள்ளப்படாவகையில் பல்வேறு மறை நாமங்களால் வேதநூல்களில் குறிக்கப்பட்டுள்ளமையும் ஒன்று.

“யஸ்ய விஜ்ஞானம் சரீரம்” இதில் விஞ்ஞானம் என்ற பெயரிலும் ‘யஸ்ய ஆத்மா சரீரம்’ என மாத்தியந்தினசாகையில் ஆத்மா என்ற பெயரிலும் குறிக்கப்பட்டவை ஒன்றே. அதாவது ஜீவாத்மாவே என்பது இவற்றின் பொருளொப்புவமையான் அறியப்படும்.

“வித்யாவித்யே ஈசதே யஸ்துஸோzய” வித்தை அவித்தை என்ற இரண்டையும் ஆள்கிறவர் இவ்விரண்டுக்கும் வேறாயுள்ளவர். இதில் , வித்தை – சேதனம் -- ஆன்மா., அவித்தை – அசேதனம் –- பிரபஞ்சம். ஆதலால், இங்கு ஆன்மா வித்தை என்ற பெயரால் குறிக்கப்பட்டமை தெளிவு.

“ஜ்ஞாஜ்ஞெளத்வெள அஜெள ஈசானீசெள” அறிவோனாகிய பிரமமும், அறியானாகிய ஆன்மாவும் பிறவாதவை. அவை முறையே ஆள்வோனும் ஆளப்படுவோனுமாம். ஜ்ஞ – அறிபவன். அஜ்ஞ – அறியாமையிலுள்ளவன்.
ஈசன்- ஆள்பவன். அநீசன் – ஆள்பவனல்லாதவன் அதாவது ஆளப்படுபவன்.
இதில், அஜ்ஞன் – ஆன்மா.

“த்வே ப்ரஹ்மணீ வேதிதவ்யே பரஞ்சா பரஞ்ச” இரு பிரமங்களும் பரப்பிரமம் என்றும் அபரப்பிரமம் என்று அறியற்படற்பாலவை. ஆன்மா அபரப்பிரமம். பிறகு பிரமத்துவம் பெறுதற்குரியது என்ற பொருளில் ஆன்மா அபரப்பிரமம் என்னும் பெயரில் வந்துள்ளது.

“யேஷாமீஷே பசுபதி:பசூனாம்” எவ்வகைப் பசுக்களையும் பசுபதியே ஆளுகின்றார். இங்கு ஆன்மாவைக் குறித்த பெயர் பசு.


சுபமஸ்து            

No comments:

Post a Comment