Tuesday, November 15, 2016

பகவானும் பாரதமும்!, இஃது பாரத தாற்பர்ய சங்கிரகம் - 1


பாரத தாற்பர்ய சங்கிரகம் என்பது வடமொழியில் ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதரால் அருளிச்செய்யப்பெற்ற நூலாகும். இந்நூலில் கூறப்படும் செய்தி ஸ்ரீவியாஸமஹரிஷி தாம் அருளிய மஹாபாரதம் ஆகிய இதிகாசம் தொனிவிருத்தியால் பகவான் பரமேஸ்வரன் பரத்துவத்தை வெளியிட்டுள்ளார் என்பதாகும். இந்நூலில் உள்ள ஸ்லோகங்கள் இருபது. இந்நூலுக்கு உரையும் நூலாசிரியரே இயற்றினார் என்ப.

தமிழ் மொழிபெயர்ப்பு:
திருக்கயிலாய பரம்பரைத்
திருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்துவான்
சபாபதி நாவலரவர்கள்.



கணபதி துணை.
திருச்சிற்றம்பலம்.

பாரத தாற்பர்ய சங்கிரகம்

தற்சிறப்புப் பாயிரம்

ஆரி யத்துய ரப்பதீக் கிதன்முன மறைந்த
பார தத்தின்றாற் பரியசங் கிரகத்தைப் பாடற்
சீரி யற்றமி ழாலுரை செய்யவருள் செய்ய
வீர மும்மதக் குஞ்சரப் பிரானடி விழைவாம்.

(இது தெய்வ வணக்கவும், செயப்படுபொருளும் உணர்த்துகின்றது.)

பொருள்: ஸ்ரீமத் அப்பய்யதீக்ஷித மஹான் இயற்றிய வடமொழிப் பாரத தாற்பர்ய சங்கிரகத்தினைத் தென்மொழிப் பாவினால் உரைக்கத் திருவருள் வழங்க மூத்தபிள்ளையார் திருவடிகளைத் த்யானஞ் செய்வாம்.



நூல்
உலகளந்த மாயனவ தார மாகி
யுற்பவித்த வியாதமுனி பாண்டு மைந்தர்
பலமுறுநற் கதைதெரிக்கும் வியாச வாற்றாற்
பங்கயக்கண் மாலையதி கரித்துச் செய்த        
அலகில்வர னுறுபார தத்தி னாண்டாண்
டவனித்த மருச்சிக்கப் படுதி யென்று
நிலவுவளர் சடைப்பகவ கூறுமுகத் தானீ
நித்தியதத் துவமென்று விளக்கினானால்.(1)

(இது விஷ்ணுவானவர் எல்லாம்வல்ல பரமேஸ்வரனைப் பூஜித்துய்ந்தமை கூறுவது.)

பொருள்: பிறை வளர்தற்கு இடமாகிய சடையையுடைய பகவானே! உலகத்தினை அளந்த திருமாலின் அவதார விஷேடராய்த் தோன்றிய வியாஸமஹரிஷி, பாண்டு புத்திரர்களுடைய பயன்மிக்க நல்ல சரித்திரத்தினை அறிவிக்கும் கபட நெறியினால் செந்தாமரை மலர் போலுங் கண்களையுடைய கண்ணனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இயற்றிய அளவில்லாத மஹிமை பொருந்திய மஹாபாரதம் என்னும் இதிகாசத்தில் அங்கங்கே அக்கண்ணன் நீயே நித்யமும் பூஜிக்கப்படுகின்றாய் என்று சொல்லும் வாக்கினால் நீயே நித்தியமாயுள்ள பரதத்துவம் என்று புலப்படுத்தினார்!.

குறிப்பு: வியாஸமஹரிஷி பாண்டவர் சரித்திரங் கூறுவார் போன்று கண்ணன் மஹிமைகள் விளங்க இயற்றிய மஹாபாரதத்தில் அக்கண்ணன் எல்லாம் வல்ல சிவபிரானைப் பூஜித்த வரலாறு கூறுமுகத்தால்சிவபிரானே பூஜிக்கற் பாலனாகியுள்ள பரதத்துவம் என்பதை வெளியிட்டார்.



பிரமாதி சகலசக மோகத் தானே
பிணிப்புண்டங் கவமானப் பட்ட தென்றும்
பரமேச பகவநீ தானே யற்றாற்
பாட்டிலைமற் றஃதென்று முனி வியாதன்
தவரீச மங்கணிகன் றனாது காதைச்
சம்பந்தத் தாலினிது விளக்கிக் கூறி
உவமானங் கடந்தபரப் பிரம நீயென்
றுணர்த்திடவு மூர்க்கர்பிணங் குறுவ ரந்தோ.(2)

(இது சிவபிரான் இயல்பாகவே மோக வினையில் நீங்கி விளங்கும் ஏக முதலாயுள்ள பரப்பிரமப் பொருளென்பது கூறுகின்றது.)

பொருள்: பரமேஸ்வரனாகிய பகவானே! வியாஸ முனிவர் வேள்விக்களத்து பிரம்மன் முதலாகவுள்ள தேவக்கூட்டங்கள் யாவும் மயக்கத்தினாற் றுடகுற்று அவமதிப்பினை எய்திற்று. நீ ஒருவன் தானே அங்கே மயக்கத்தினை அடையவில்லை என்றும், தவத்தர்க்கு தலைவனாகிய மங்கணிகனது சரித்திர இயைபு பற்றி நன்கு தெளிவாகச் சொல்லி, ஒப்பில்லாத பரப்பிரமப் பொருள் நீயே என்று பாரதத்தில் அறிவுறுத்திடவும் அச்சோ! மூர்க்கர் உன் பரத்துவந் தேறமாட்டாது பிறந்து இறந்து உழலும் தேவர்களைப் பரமென்று மாறாடுவர்.

குறிப்பு: அயன் முதலாகவுள்ள தேவர்கள் எல்லாம் மங்கணிகன் மாயையிற் கட்டுற்று உழலுதலானும், சிவபிரான் அத்துடகுறாமல் மோகம் நீங்கி அருளுதலானும் அவனே பரப்பிரமப் பொருளாவான் என்று வியாஸ முனிவர் பாரதத்தில் கூறுதல் கேட்டுவைத்தும் உண்மை தேறாது பிணங்குவார்கள் பாசாண்டிகள்.

'ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே சூழ்க'

தொடரும்...


சுபம்



No comments:

Post a Comment