ૐ
ஆகமமாதி திருமுறைகளுக்கு முதலான நமது வேதமானது எந்தக் காலத்தில் ஏற்பட்டதென்று எவராலும் சொல்ல முடியாது. அதன் ஆதியை விசாரிக்கும் நேரம், அது பழமை என்னும் ஆழத்தின் அடிக்குக்கீழே நீண்டு செல்கிறது என்கின்றனர் பண்டிதர்கள்.
நமது ஞாபகத்திற்கு எட்டிய ஆதிகாலம் முதல் இதுவரையில் எத்தனையோ விதமான(கொடூர,லௌகீக) மாறுபாடுகள் மனிதர்கள் மத்தியிலும், அரசியல் மத்தியிலும் நடந்துள்ளன. சுயமதாபிமான வெறியினாலும், கொடுங் கோலினாலும், கள்ள நியாயங்களினாளும் நமது வேதத்தைத் தகர்த்துத் தவிடுபொடியாக்குவதற்கு எத்தனையோ பேர் எத்தனையோ முறை எத்தனையோ விதமாகப் பிரயத்தனப் பட்டார்கள். வேதத்தில் வைதிக சைவத்தோர், ஏனைய வேத தர்சனப் பிரிவினர் கொண்டுள்ள நம்பிக்கையைக் கெடுத்து, அதன் தத்துவக் கொள்கையைக் குலைப்பதற்குப் பெரும் முயற்சிகள் செய்தார்கள். இஃது கார்யத்தில் ஆட்சியதிகாரமுள்ள வேற்று சமய அரசர்களும், தீர்க்கதிருஷ்டியில்லாத மதோன்மத்தர்களும் நமது வேதத்தை யழிப்பதற்குப் மானிடாதீதமான மகாப்பிரயத்தனங்கள் செய்தார்கள்.
இவைகளுக்கெல்லாம் சளைக்காமல் சலிக்காமல் நமது வேதப்பொருளானது பரமஸாந்தா காரமாயும், ஆன்ம த்ருப்தி விளைவிப்பதாயும் இன்றைக்கும் நிலைநின்று விளங்குகின்றது. வேதமார்க்கத்தவர்களாகிய சைவசமயிகளும், ஏனைய தர்சனக்காரர்களிலும் உள்ள படிப்பாளிகளும் படிப்பில்லாதவர்கள் யாவரும் அதை நம்பியே விவகரிக்கின்றார்கள்.
பௌதிக லௌகீக சாஸ்த்ரப் பயிற்சி இக்காலத்தில் மிகப் பரவியிருக்கின்றது; பழமையானவைகளை யெல்லாம் தலைகீழாகக் கவிழ்த்துப் புதியவைகளை ஏற்படுத்துவதற்கான மூர்க்கமான முயற்சிகள் அநேகம் நடைபெறுகின்றன. இத்தனை பிரதிகூலமான சந்தர்ப்பங்கள் வைத்திருக்கும் இந்நாளிலே நமது வேதமானது ஒளிமழுங்காது, உத்தம பிரகாஷத்தோடு திகழ்கின்றது.
வாயுமண்டலத்தில் நிகழும் பலவிதமான புயல்களையும் புரட்டல்களையும் பொருட்படுத்தாமல், அவைகளினால் ஒரு சிறிதும் வாதிக்கப் பெறாமல் சூரியன் உயர்ந்துநின்று ஒளிதந்து, உலகத்து உயிர்கள் அனைத்தினையும் ஆதரித்து வளர்ப்பது போல நமது வேதத்தில் இருந்து வீசுகின்ற ‘ஞானக்கிரணமானது’ நாஸ்தீக வாதம், ப்ரகிருதி வாதம், அனுமான வாதம் , நபி வாதம், கிறித்து வாதம் போன்ற பற்பல மதக் கொள்கைகளினால் ஏற்படும் தீப்பயன்களை அகற்றித் தெளிவான கடவுள்மார்க்கத்தைக் காட்டியருளத் தக்கதென்று அறிவுடையாரெவரும் ஏற்று, ஆனந்திக்கத் தக்கதாயிருக்கின்றது.
वेदोऽखिलो धर्ममूलं स्मृतिशीले च तद्विदाम् ।
आचारश्चैव साधूनामात्मनस्तुष्टिरेव च ॥
தாற்பர்யம்: வேதமும், இந்தவேதமறிந்த ரிஷிகளின் வாக்குகளும், ஸாதுக்களின் ஒழுக்கமும், சுப மனத்தின் சந்தோஷமும், தர்மத்திற்குக் காரணமாக இருக்கின்றன.
சுபம்.
No comments:
Post a Comment