Monday, January 23, 2017

பகவானும் பாரதமும்!, இஃது பாரத தாற்பர்ய சங்கிரகம் - 3


பாரத தாற்பர்ய சங்கிரகம் என்னும் தொடரான பதிவில் முன்னர் வெளியிடப்பட்ட இரு பகுதிகளையும் படிக்கத் தவறிய அன்பர்கள் தயவு கூர்ந்து முதல் வெளியிடப்பட்ட இரு பகுதிகளையும் படித்த பிற்பாடே  இந்தப் பதிவைப் படிக்குமாறு தயவுடன் கேட்டுக் கொள்கிறேன்.






நாரணன்றா னெடுங்கால முபாசித் துன்னை
நல்லருளாற் சிவோகம்பா வனைதலைப் பட்டத்தா
லாரணங்கண் முறையிடுமப் பிரம மாகு
மத்துவித நிலைச்செவ்வெ யடைந்தா னென்றுங்
காரணங்கற் பனைகடந்த பொருணீ யென்றுங்
கருத்துடைய துதியன்னோன் சொற்றா னென்றும்
பூரணனா யுயிர்க்குயிராய் நிற்குமுழு முதலே
புகன்றிட்டான் வியாதமுனிபா ரதத்திற் றானே. (5)

(இஃது நாராயணமூர்த்தி சிவபிரானை உபாசித்துப் பிரமஞானம் எய்தினமை கூறுகின்றது.)

பொருள்: பரிபூரணப் பொருளாயும் உயிர்களிடத்து அந்தரியாமியாயும் விளங்கும் முழுமுதற் கடவுளே!, நாராயணமூர்த்தி உன்னை நீண்டகாலமாக உபாசனை செய்து, உன்னுடைய நல்ல அனுக்கிரகத்தினாலே சிவோகம் பாவனையைப் பொருந்தி அதனால் வேதங்கள் ஏக்கற்றுரைக்கும் அந்தப் பிரமத்தன்மை கைவருதற்கு ஏதுவாகும் இரண்டற்ற சாமாதிநிலையைச் செவ்வையாகப் பெற்றானென்றும், அந் நாராயண மூர்த்தி தனக்கொரு நிமித்தமும் உபாதியும் இல்லாத பிரமப்பொருள் நீயே யென்னும் தாற்பரியத்தினைக்கொண்ட தோத்திரத்தினை அக்காலை உரைத்தா னென்றும் மாபாரதத்தில் ஒதினார்.

குறிப்பு: நாராயணமூர்த்தி பிரமஞானம் பெறல்வேண்டி சிவபிரானைக் குறித்து அருந்தவமிருந்து அச்சிவபிரான் றிருவருளினால் பிரமஞான நிட்டை யெய்தப் பெற்றவாறும், அக்காலையிற் காரணங் கற்பனை கடந்த பிரமப்பொருள் சிவபிரானே யென்னுந் துதிசொற்றவாறும், வியாசமுனிவர் பாரதத்தில் உரைத்தாரென்க.


தருமனொரு தாருவாச் சகோதரராம் வீரர்
சாகாதி பிறவுறுபாப் பசுநிரைகள் புரந்த
கருநெடுமால் பிரம்மே பிராமணர்க ளின்னோர்
காழ்ப்புறுவேரா கப்புனைந்து கட்டுரைத்த விடத்தே
அரயரவ ரைவர்க்கு மிடரகற்றி யென்று
மளிக்குமருட் பெருங்கடலே யறிவே நிற்குப்
பிரமபா வம்முண்மை பாரதத்திவ் வாற்றாற்
பிரகடனஞ் செய்திட்டான் வியாதமா முனியே.(6)

(இஃது பிரமசத்தம் சிவபிரானுக்குரிய பெயராதல் கூறுகின்றது)

பொருள்: குருகுல வேந்தராகிய பாண்டவர் ஐவர்க்கும் துன்பங்களை நீக்கி எக்காலமும் அருள்வழங்கும் பெரிய காருண்ணிய சமுத்திரமே! ஞான சொரூபியே!, வியாசமாமுனிவர் பாரத்தில் தருமபுத்திரனை ஒரு மரமாகவும், சகோதரர்களாகிய வீரர்களைச் சாகை முதலிய மற்றைய அவயவங்களாகவும், பசுக்கூட்டத்தினைக் காத்த கண்ணபிரானையும் பிரமத்தினையும் பிராமணர்களையும் வயிரம் பொருந்திய மூலமாகவும் அலங்கரித்து யாத்தெடுத்துக் கூறியவழி இம் முறையான பிரமசத்தப் பொருளாமுறை உனக்கு உண்மை வெளியிட்டார்.

குறிப்பு: வியாசமுனிவர் மாபாரதத்தில் பிரமபத்தினைச் சிவபரமாக ஓது முகத்தினால் அஃது சிவபிரானை உணர்த்து நாம மாதலை இனிது புலப்படுத்தினா ரென்க.



'ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே சூழ்க'

தொடரும்...



சுபம்