Sunday, January 10, 2016

☞ ஸ்ரீ சிவகீதை குறித்த வியாசம் மற்றும் ஆக்ஷேப சமாதானம்

 


ஆக்ஷேபம் : சிவகீதை பிரமாணமாயின் அதாவது இராமன் சிவபெருமானிடத்தே தத்துவோபதேசம் பெற்றது உண்மையாயின் ஏன் அதை  உலகெங்கும் பிரசித்திபெற்ற வால்மீகி ராமாயணத்தில் கூறியிருக்கவில்லை ?

சமாதானம் : உலகத்திற் பிரமாணிய விசாரம் செய்வதாகில் சகல பிராமணங்களுள்ளும் வேதாகமமே முதற் பிரமாணம். மற்றைய பிரமாணங்களோவெனின் வேதாகமங்களுடன் முறணாதவழிப் பிரமாணியமுடையதாகும். இனி மற்றைய பிரமாணங்கள் யாதெனின் இதிகாசங்கள் புராணங்கள் முதலியனவாம்.

இச் சிவகீதை வேதாகம உபநிஷத்கருத்துக்களை  தன்னுள்  அடக்கியது, பத்தம மஹாபுராணத்தின் மூலம் வெளிப்பட்டு, புராணப் பிரமாணமாக உள்ளது. இனி இராமாயணம் எப் பிரமாணம் எனின் வேதாகமும் அல்ல, இதிகாசமும் அல்ல, புராணமும் அல்ல, ஸ்மிருதியும் அல்ல, சூத்திரங்களும் அல்ல, கவிஞர்களுக்கெல்லாம் ஆதிகவியாயும், பிரம்ம தேவனது கருணைக்குப் பாத்திரராயும், தேவரிஷிகளுக்குள் பிரசித்தமான ஸ்ரீநாரதரிஷிக்குச் சீடராயும், முனிவர் சிரோமணியாயுமுள்ள வால்மீகி மாமுனிவரா லியற்றப்பட்ட மகாகாவ்யமான ஆதி காவ்யமேயாம். நிற்க,

இனிக் காவ்யம் சிறந்த பிரமாணமா, புராணம் சிறந்த பிரமாணமா எனின், இராமாயணமானது சகலவுலகத்தாராலும் கொண்டாடப்படுவதாயினும் புராணத்திற்குப் பிற் பிரமாணமேயாம். புராணத்தைப் பிரமாணமா அப்பிரமாணமா என்று விசாரிக்கவேண்டுமானால் முதற் பிரமாணமாயுள்ள வேதாகமத்தோடு முறணாதிருக்கின்றதா என்று மட்டும் அறியவேண்டும். பிற் பிரமாண காவ்யத்தோடு முறணாதிருக்கின்றதா என்று விசாரிப்பாரில்லை. ஆதலால் சிவகீதைப்ரமாணமல்ல இராமாயணத்தில் இல்லாததால் என்று கூறுவது ஆராய்ச்சி இல்லாத வசத்தால் நிகழ்ந்ததே என்க!. அன்றியும் காவ்யத்திற்குச் சரித்திரமே பிரமாண முக்யமல்ல. மற்று யாதெனின் ஸ்ருங்காரம் முதலியரஸங்களேயாம். இரஸத்தையே சீவனாயுடையது காவ்யமாகும். தோஷங்கள் அவைகளுக்குக் குறைவை உண்டாக்கும் என்று ஸாஹித்ய தருப்பணம் கூறும். கவிஞர்கள் இரஸத்திற்கு மாத்திரம் குற்றம் நிகழாது கவனிக்கவேண்டியதே யன்றி முக்யமாய்ச் சரித்திரங்களையும் கவனிக்கவேண்டு மென்பதில்லை. கவிஞர் காப்பியத்தில் புராணாதிகளில் கூறிய சரித்திரங்களைப் பிரமாணமாய் வைத்துக்கொண்டாலும், புராணத்தில் கூறிய சரித்திரங்களில் சிலபாகங்களை விட்டு மற்றைவகளை எடுத்துக் கொள்வதுமுண்டு. அல்லது புதிதாய்ச் சிலகதைகளைக் கற்பனைசெய்து புராணத்திலுள்ள சரித்திரங்களையும் அவைகளுடன் சேர்த்துக் காப்பியமாயியற்றுவதுண்டு, நடந்த உண்மையையே கூறவேண்டு மென்பதவசியமில்லை. இரஸத்தில் தோஷம் நிகழாது மாத்திரம் காவ்யமியற்றவேண்டு மென்பதே முன்னோர் கண்ட துணிபாதலின், வால்மீகி மாமுனிவர் சிவகீதாதி நடந்த சில உண்மைச் சரித்திரங்களை விட்டும், நடக்காத புதிதான சிலபாகங்களை வருணிக்க வேண்டியதினிமித்தம் சேர்த்தும் ஆதிகாவ்யமான இராமாயணத்தை யியற்றினார்.

இனி இராமாயணம் இரஸத்தையே முக்யமாய்க் கொண்டது என்பதற்கு யாது பிரமாணம் எனின், இராமாயணாதி கருணரஸப் பிரதானமானது என்றும்  கூறிய “ததாராமாயணாதீதீநாம் பவிதாது:கஹேதுதா” ஸாஹித்ய தருப்பண வாக்கியங்களையும் அறிக. அன்றியும் இராமாயணத்தின்கண் சிற்சில பாகங்களில் படிப்பவர்களையும், கேட்பவர்களையும் மனது களிக்கச் செய்யவேண்டியதன் நிமித்தம் வேறு சில கருத்துக்களையும் கொண்டு உண்மையல்லாத சில விஷயங்களையும் கூறி இருக்கின்றது. இங்ஙனம் கூறியதால் இராமாயணம் குற்றமுடையதோவெனின் அல்லவென்பதற் கையமேயில்லை. காப்பியங்களுக்கு அங்கனம் கூறுதலியல்பாதலாம் என்க. உதாரணமாக, இராமாயணத்தின் சுந்தரகாண்டத்தில் அனுமார் சீதாபிராட்டியாரிடம் சந்தித்த சமயத்தில்

"மத்த:ப்ரத்யவர:கஷ்சிந் நாஸ்திஸூக்ரீவஸந்நிதௌ,
அஹந்தாவதிஹப்ராப்த:கிமபுநஸ்தேமஹாபலா:
நஹிப்ரக்ருஷ்டாம்ப்ரேஷ்யந்தே ப்ரேஷ்யந்தேஹீதரேஜநா:"

சுக்ரீவனிடம் என்னிலும் பலக்குறைவு வுடையவர் எவரும் இல்லை, யானோவெனினிங்குவந்தவன் அம்மஹா பராக்கிரமசாலிகளைப்பற்றிக் கேட்பானேன். பராக்கிரமசாலிகள் தூதுக்கு அனுப்பப்பட மாட்டார்கள் அன்றோ, பலஹீனர்களே அனுப்பப் படுகின்றார்கள். என்று கூறியதைச் சற்று ஆராய்வோமாக, இங்கு கபிலகுல திலகரானவரும் குழந்தைப் பருவத்திலேயே கனியென்று கருதிச் சூரியமண்டலத்தைப் பிடிக்கச் சென்றவரும், கருங்கடலை கால்வாய் போலத்தாண்டியவருமான, ஒப்பற்றவராயுடையவர் என்று உலகெல்லாம் அறிந்துள்ள ஆஞ்சநேயர் தன்னிலும் பலக்குறைவுடையவர் சுக்ரீவன் சந்நிதியிலில்லை என்று கூறினது உண்மையாமா ? உண்மையில் அனுமாரிலும் பலத்தினிற் சிறந்தவர்களா சுக்ரீவனிட முள்ளவர்க ளெல்லாம் ?. இதை யூகித்தால் வேறு காரணம் பற்றி உண்மையல்லாத இவ்விஷயமானது கூறப்பட்டதென்பது அறியப்படுகின்றதல்லவா ? இதனால் குற்றமுடையதென்று கூறலாமா ? காப்பியங்களில் உண்மையல்லாத சில விஷயங்களையும் கூறுவது குற்றமல்ல என்பது பற்றியன்றோ இங்ஙனம் கூறியது. இங்ஙனமே காளிதாச கவியும் தாம் இயற்றிய சாகுந்தளம் என்னும் கிரந்தத்தின்கண் மஹாபாரதாதிகளில் காணாதது முண்மையாய் நடக்காததுமான துர்வாச மாமுனிவரின் சாபக்கதையும் சேர்த்தமைக்கப் பட்டுள்ளது. அது போல இராமாயணம் ஆதிகாப்பியமே யாதலின் அதில் புராணங்களில் கூறிய சிலகதாபாகங்களை விட்டும் மற்றும் சிலபாகங்களை இரஸத்தினிமித்தம் சேர்த்து மமைக்கப்பட்டுள்ளன.

இராமாயணம் தர்மங்களை விளக்கவந்த நூலேயன்றி ஞானத்தைப் பற்றி முக்கியமாய் வந்ததல்ல. இனி இராமாயணம் எத்தருமத்தை விளக்கியுள்ளது எனின் இங்ஙனம் சுருக்கிக் கூறுவாம் : அன்னையின் வசனத்தையும் பிதாவின் வசனத்தையும் மீறக்கூடாது என்ற தர்மரஹஸ்யத்தைத் தசரதன் கைகேயி முதலியவர்களின் வசனத்துக்குள் அடங்கிய இராமனது நடத்தையாலும், தம்பிகளிடம் தமையன் வைக்கவேண்டிய பிரியத்தை இலக்குவனிடம் இராமனது நடத்தையாலும் அங்ஙனமே தமையனிடம் இளையவன் நடக்கவேண்டிய தர்மநிலையை இலக்குவன் இராமனிடம் நடந்த தன்மையாலும், பெண்டீர் கணவனிடம் இருக்கவேண்டிய நிலையையும், அரசன் மந்திரி இவர்களுக்குரிய தர்மத்தை இராமன் சுக்ரீவன் இவர்களது நடவடிக்கையாலும் தூதர்களின் நிலைமையை அனுமாரது செய்கையாலும், சாதுக்களின் செய்கைகைளை விபீஷணன் செய்கையாலும் என்று இவை முதலிய அநேக தர்மங்களை விளக்கும் நூலே இராமாயணம் ஆகும். இங்ஙனம் விஷேசமாய்க் கரும தர்மங்களை விளக்குவதான இராமாயணத்தின்கண் அரியபெரிய தத்துவஞான நூலாகிய சிவகீதையைக் கூறுவது தகுதியல்லவென்று கொண்டே ஸ்ரீவான்மீகி மாமுனிவரும் கூறாதொழிந்தார் என்க. இதனால் ஸ்ரீசிவகீதை யப்பிரமாணமல்ல. சிறந்த பிராமணமேயாம். மேலும் வரும்....

குறிப்பு: இஃது ஸ்ரீ கணேஸசாஸ்திரியார் அவர்களின் உரையைத் தழுவி எழுதப்பட்டது.

சுபம்  

No comments:

Post a Comment